Sunday 24 March 2019

புத்தகக் கண்காட்சியின்போது சுஜாதா

புத்தகக் கண்காட்சிக்கு செல்பவர்களுக்கு சுஜாதா சொன்ன பத்துக் கட்டளைகள்!  2009 ஆம் ஆண்டு புத்தகக் கண்காட்சியின்போது சுஜாதா சொன்ன பத்துக் கட்டளைகள் உங்களுக்காக..

1) என்ன புத்தகம் வாங்குவது என்று யாரிடமும் அட்வைஸ் கேட்காதீர்கள். நீங்கள் படித்த நல்ல புத்தகம் என்ன என்று வேண்டுமானால் கேட்கலாம். அது உங்களுக்கும் பிடிக்குமென்பது உறுதியில்லை.

2) படித்து முடிக்கவேண்டும் என்ற உறுதியோடு புத்தகம் வாங்குங்கள். உங்கள் அலமாரியின் எடைகூட்டவோ, அடுக்கி வைத்து அழகு பார்ப்பதற்கோ புத்தகம் வாங்காதீர்கள். அது பர்ஸுக்கு வந்த கேடு.

3) வாங்கும் புத்தகம் எதைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறதோ.. அந்த சப்ஜெக்டை, எழுதிய ஆசிரியர் குறித்து கொஞ்சமாவது தெரிந்து கொண்டு வாங்குங்கள். ‘சுடிதார் தைப்பது எப்படி? - சுஜாதா விளக்கம்’ என்று அட்டையில் கண்டால், ‘சுஜாதாவுக்கு சுடிதார் தைப்பது பற்றி என்ன தெரியும்?’ என்று கடந்து போய்விடுங்கள்.


4) உங்கள் தனிப்பட்ட வாசிப்பு அடர்த்தியானதா, லைட் ரீடிங்கா என்று தெரிந்து வைத்துக் கொண்டு அதற்கேற்ற புத்தகங்களாக வாங்குங்கள்.


5) வாங்கிய புத்தகங்களை இத்தனை நாட்களுக்குள் படித்து முடிப்பேன் என்று உறுதியோடு படிக்க ஆரம்பியுங்கள். இப்போதெல்லாம் ‘பல்லைக் கடித்துக் கொண்டு இத்தனாம் பக்கம்வரை படித்தால், அதன் பிறகு ஸ்பீடெடுத்து முழுதும் படித்துவிடலாம்’ என்கிற ரேஞ்சில் பல புத்தகங்கள் வருகின்றன. நான் சமீபத்தில் படித்த புத்தகத்தை, ‘132வது பக்கம் வரை எப்படியாவது படியுங்கள்’ என்று கொடுத்தார் நண்பர். பாக்கி இருந்தது ஒரே ஒரு பக்கம். அதுவும் குறிப்புகளுக்கு. அதில் ‘வேஸ்ட்’ என்று எழுதி, புத்தகத்தைப் பரணில் போட்டுவிட்டேன்.


6) முற்றிலும் நீங்கள் அறியாத விஷயங்கள் குறித்த புத்தகம் ஒன்றேனும் வாங்கிவிடுங்கள். அது ஏலியன்ஸ் பற்றியதாக இருக்கலாம், கார்ப்பரேட் கம்பெனிகள் குறித்த ரகசியங்களாக இருக்கலாம். இந்த வருடம் புதிதாக ஒரு சப்ஜெக்டைத் தொடப்போகிறேன் என்று ஆரம்பியுங்கள்.


7) கவிதை என்றொரு சிக்கலான சமாச்சாரம் இருக்கிறது. அதைப் பற்றிப் படிப்பதாக இருந்தால் மட்டும், ஒன்றிரண்டைப் புரட்டிப் பார்த்து புரிகிறதா என்று சோதித்துவிட்டு வாங்குங்கள். ‘ஓடியோடி வந்து போகும் ஊழ்வினை போல பிரபஞ்சமெனும் கடலிலிருந்து வண்ணப் பிம்பத்தை வெளிச்சமாய் வீசியபடி..’ என்றெல்லாம் ஜல்லியடிக்கிற கவிதைகளின் படிமங்கள், பரிமாணங்கள் எல்லாம் உங்களைக் குழப்பினால் ‘உன் கண்களில் மீன்.. கனவினில் நான்’ டைப் கவிதைகளுக்கே போகலாம். ஆனால் என் அட்வைஸ் என்னவென்றால்….. வேண்டாம்.


8) சின்ன சைஸ் புத்தகங்களை முழுவதும் ஸ்டாலுக்குள்ளேயே நின்று படித்து முடிக்கிற பிரகஸ்பதிகளைப் பார்க்கிறேன். அவர்களின் வங்கிக் கடன் வட்டிவிகிதம் உயரும் என்று ஐத்ரேய உபனிஷத்தில் எழுதப்பட்டிருக்கிறது.


9) திரும்பத் திரும்ப சொல்வதுதான். குழந்தைகளுக்கு வாசிப்பை போதியுங்கள். கட்டாயமாக்காமல், படிக்கும் ஆர்வம் அவர்களுக்காக வர ஆவன செய்யுங்கள். அதற்கு அவர்கள் வீட்டில் இருக்கும்போது செல்ஃபோனை நோண்டாமல், நீங்களும் தினமும் ஒன்றிரண்டு மணிநேரம் புத்தகம் வாசிக்க வேண்டும்.


10) முக்கியமாக ’சுஜாதா சொன்னார்’ என்று என் ஸ்டைலிலேயே எவனாவது எழுதியதை அப்படியே பின்பற்றாமல், அவை சரியா என்றாராய்ந்து பின்பற்றுங்கள்.

March 2019 - சந்திரா