Thursday 31 December 2020

ஐந்தாம் வகுப்பு 'அ' பிரிவு - நா. முத்துக்குமார்

மழை பெய்யா நாட்களிலும் மஞ்சள் குடையோடு வரும் ரோஜாப் பூ மிஸ்
வகுப்பின் முதல் நாளன்று முன்பொரு முறை எங்களிடம் கேட்டார்:

‘‘படிச்சு முடிச்சதும் என்ன ஆகப் போறீங்க?’’
முதல் பெஞ்சை
யாருக்கும் விட்டுத் தராத
கவிதாவும் வனிதாவும்
‘‘டாக்டர்’’ என்றார்கள் 
கோரஸாக.

இன்று கல்யாணம் முடிந்து
குழந்தைகள் பெற்று
ரேஷன் கடை வரிசையில்
கவிதாவையும்;
கூந்தலில் செருகிய சீப்புடன்
குழந்தைகளை
பள்ளிக்கு வழியனுப்பும்
வனிதாவையும்
எப்போதாவது பார்க்க நேர்கிறது.

‘‘இன்ஜினியர் ஆகப் போகிறேன்’’
என்ற எல்.சுரேஷ்குமார்
பாதியில் கோட்டடித்து
பட்டுத் தறி நெய்யப் 
போய்விட்டான்.

‘‘எங்க அப்பாவுடைய
இரும்புக் கடையைப் 
பாத்துப்பேன்’’
கடைசி பெஞ்ச்
சி.என்.ராஜேஷ் சொன்னபோது
எல்லோரும் சிரித்தார்கள்.
இன்றவன் நியூஜெர்சியில்,
மருத்துவராகப்
பணியாற்றிக்கொண்டே
நுண் உயிரியலை ஆராய்கிறான்.

‘‘ப்ளைட் ஓட்டுவேன்’’
என்று சொல்லி
ஆச்சரியங்களில்
எங்களைத் தள்ளிய
அகஸ்டின் செல்லபாபு,
டி.என்.பி.எஸ்.சி. எழுதி
கடைநிலை ஊழியனானான்.

‘‘அணுசக்தி விஞ்ஞானியாவேன்’’
என்ற நான்
திரைப் பாடல்கள்
எழுதிக் கொண்டிருக்கிறேன்
வாழ்க்கையின் காற்று
எல்லோரையும்
திசைமாற்றிப் போட,

‘‘வாத்தியாராவேன்’’
என்று சொன்ன
குண்டு சுரேஷ் மட்டும்
நாங்கள் படித்த அதே பள்ளியில்
ஆசிரியராகப் பணியாற்றுகிறான்.

‘‘நெனைச்ச வேலையே செய்யற,
எப்பிடியிருக்கு மாப்ளே?’’ என்றேன்.
சாக்பீஸ் துகள் படிந்த விரல்களால்
என் கையைப் பிடித்துக்கொண்டு

‘‘படிச்சு முடிந்ததும்
என்ன ஆகப் போறீங்க? என்று
என் மாணவர்களிடம்
நான் கேட்பதே இல்லை!’’
என்றான்.

Sunday 20 December 2020

பூ பூக்கத்தானே செய்கிறது

எழுத்தாளர் பிரபஞ்சன் நினைவு தினம்.

(21 டிசம்பர் 2018)

1996 இல் திமுக ஆட்சியின்போது முதல்வராக இருந்த கருணாநிதி அவர்களை தற்செயலாக சந்தித்து இருக்கிறார் எழுத்தாளர் பிரபஞ்சன்.

அந்த சந்திப்பின்போதுதான் கருணாநிதி அவர்களுக்கு தெரியும், வாடகை வீட்டில்தான் பிரபஞ்சன் இன்னும் வசித்து வருகிறார் என்பது !

சென்னையில்  மேன்ஷன்களிலும்,

வாடகை வீடுகளிலும்தான்

ரொம்ப காலமாகவே வசித்து வந்திருக்கிறார் பிரபஞ்சன்.

இதையறிந்த கருணாநிதி அவர்கள் ஆச்சரியத்தோடு கேட்டார்.

"என்ன சொல்கிறீர்கள் பிரபஞ்சன், இதுவரை நீங்கள் சொந்த வீடு வாங்கவில்லையா ?"

ஒரு நொடியும் சிந்திக்காமல் பிரபஞ்சன் இப்படிச் சொன்னார்.

"குங்குமம் இதழில் கதை எழுதினால் நூறு ரூபாய் கொடுக்கிறார்கள். இதில் எப்படி நான் வீடு வாங்குவது ?"

படைப்பாளிக்கே உரிய பரிகாசம்...!

ஒரு கணம் திகைத்துப் போன கருணாநிதி அவர்கள் உடனடியாக பிரபஞ்சனுக்கு வீடு வழங்க உத்தரவிட்டார்.

முதல்வருக்கு நன்றி சொல்லிவிட்டு புறப்பட்டார் பிரபஞ்சன்.

ஒரு பத்திரிகை நிருபர் கேட்டார். "வாடகை வீடு, மேன்சன் வாழ்க்கை, 

இவ்வளவு பிரச்சினைகளுக்கும் மத்தியில் எப்படி இத்தனை அற்புதமான விஷயங்களை எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் ?"

அதற்கு புன்னகைத்தபடி, 

தனது பிரபலமான அந்த வாசகத்தைக் கூறினார் பிரபஞ்சன்.

"எவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும் 

ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது !''

December 2020 - சந்திரா