இதோ, இங்கே இருக்கும் அண்ணாவின் படம், ஒரு திரைப்படத்தில், பாடலுக்கு இடையே ஒரு சில நொடிகள் காட்டப்படும் காட்சி.
அது என்ன படம் என்று பார்ப்பதற்கு முன்… அண்ணா அவர்களை பற்றி ஒரு சுவாரஸ்யம். அண்ணா முதல்வராக இருந்தபோது டில்லியில் ஒரு பத்திரிகையாளர் கூட்டம்.
அந்தக் கூட்டத்தில் வட இந்திய பத்திரிகையாளர்களின் வாட்டி எடுக்கும் கேள்விகளும், அதற்கு அண்ணா வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுத்த பதில்களும்.
கேள்வி: ”நீங்கள் எதற்கு ஹிந்தியை ஆட்சி மொழியாக கூடாது என்று மறுக்கிறீர்கள் ?”
அண்ணா: ”நீங்கள் எதற்கு ஹிந்திதான் ஆட்சி மொழியாக வேண்டும் என்று எண்ணுகிறீர்கள் ?”
கேள்வி: ”இது ஒரு பொதுவுடமையான நாடு. இங்கு யாருக்கு அதிக பெரும்பான்மை இருக்கிறதோ, அவர்களுக்குத் தான் முன்னுரிமை. அந்த வகையில் இந்தியாவில் அதிகமான மக்கள் பேசும் மொழி ஹிந்திதானே ? அப்படியென்றால் ஹிந்திதானே தேசிய மொழி ?”
அண்ணா : ”நீங்கள் சொல்வது போலப் பார்த்தால் நமது இந்தியாவில் மயில்களின் எண்ணிக்கையைவிட காக்கைகளின் எண்ணிக்கைதானே அதிகம் ? காக்கைகள் அதிகமாக இருப்பதால் அதை நாம் தேசியப் பறவையாக வைக்கவில்லையே ?
மயிலைத்தானே தேசியப் பறவையாக வைத்திருக்கிறோம் ?”
அரங்கில் இருந்த அத்தனை பத்திரிகையாளர்களின் கைதட்டலும் அடங்க வெகு நேரமானதாம்.
இவ்வளவு சுவாரஸ்யமாகப் பேசத் தெரிந்ததால்தான் அண்ணாவால் தமிழ்நாட்டின் ஆட்சியைப் பிடிக்க முடிந்திருக்கிறது.
சரி. வழக்கமாக எம்.ஜி.ஆர்.தான், தன் படத்தில் பாடல் காட்சி இடையே எப்படியாவது அண்ணாவின் சிலை அல்லது படத்தைக் காட்டி விடுவார்.
ஆனால் இங்கே நீங்கள் பார்க்கும் அண்ணாவின் படம்
பாலு மகேந்திரா தனது 'நீங்கள் கேட்டவை' படத்தில் “கனவு காணும் வாழ்க்கை யாவும்” பாடலின் இடையே,
“பேதை மனிதனே கடமையை இன்றே செய்வதில்தானே ஆனந்தம்” என்ற வரிகள் ஒலிக்கும்போது காட்டும் காட்சி.
இந்தக் காட்சி, படித்தவர் பாமரர் என்ற பேதம் இன்றி, பாலுமகேந்திரா போன்ற படைப்பாளிகளைக் கூட அண்ணா வசியம் செய்து வைத்திருந்ததற்கு ஒரு சாட்சி.
Content Credits: John Durai Asir Chelliah