Sunday 13 September 2015

ரேஷன் கார்டு - சுஜாதா

அதன் பாட்டுக்கு சமர்த்தாக இருந்த ரேஷன் கார்டை புதுப்பிக்க வேண்டும் என்று கார்ப்பரேஷன் அதிகாரி வந்து சொல்லிவிட்டுப் போனார். ரேஷன் கார்டு ஒரு முக்கிய ஆவணம். பாஸ்போர்ட்டுக்கு அடுத்தபடியாக உங்கள் இருப்பை நிரூபிக்கக் கூடியது.

சாய்பாபா கோயில் அருகே ஜனசந்தடியின் மத்தியில் மாடியில் இருந்தது அலுவலகம். எனக்கு அத்தனை மாடி ஏறமுடியாது என்று நாகராஜை அனுப்பி வைத்தேன். சற்று நேரத்தில் அவன் ஒரு அலுவலருடன் திரும்பி வந்தான். "பழைய கார்ட ஜெராக்ஸ் பண்ணி வெச்சுக்கங்க. இந்த பாரத்தை நிரப்புங்க. ஒரு போட்டோ ஒட்டிக் கொடுங்க" என்றார்.

நான், 'நண்பா, நன்றி' என்றேன்.

'பத்து ரூபா கொடுங்க.'

'எதுக்கப்பா?'

'பாரத்துக்கு. இதை கொடுத்து டோக்கன் வாங்கறதுக்கு தனியா சார்ஜ் பண்ணுவேன்' என்றார்.

'ஏம்பா, இந்த பாரம் ப்ரீ இல்லையா?' என்று சொல்லிவிட்டு பத்து ரூபாய் கொடுத்தேன்.

அவர் என்னை ஏற இறங்கப் பார்த்து, 'கார்ல வந்துருக்கே, பத்து ரூபாய் குடுக்கமாட்டியா?' ஏம்பா டிரைவர், இது பத்து ரூபாதானே பாத்துக்க' என்று சொல்லிவிட்டு, முகத்தை சுருக்கிக்கொண்டு சென்றார். லஞ்சம் வாங்குவது மட்டுமின்றித் திட்டிவிட்டு வாங்கும் சிப்பந்தி. அவர் கார்ப்பரேஷன் அலுவலரா என்பதே எனக்குச் சந்தேகமாக இருந்தது.

ஒரு சிறிய அரசாங்க அலுவலகத்தில் உள்ள சம்பாத்திய சாத்தியங்களை யோசியுங்கள். இலவசமாகக் கொடுக்கவேண்டிய விண்ணப்பங்களை ஒரு ஆள் கவர்ந்துகொண்டு, ஒவ்வொன்றுக்கும் பத்து ரூபாய் என்று ஒரு நாளைக்கு நூறு பாரமாவது விநியோகிப்பார். இதில் நிச்சயம் சிப்பந்திகளுக்குப் பங்கு இருக்க வேண்டும். இவர்களுக்கெல்லாம் சம்பளம் கூடத் தேவையில்லை.

இந்த சதியை எதிர்த்து 'படிவம் இலவசம்தான். பணம் கொடுக்க மாட்டேன்' என்று பிடிவாதம் செய்யலாம். என்ன ஆகும்?

'உங்களுக்கு பாரம்தான வேணும்? நேரா கார்ப்பரேஷன் ஆபீஸ் போங்க. அங்க ரிப்பன் பில்டிங் பின்பக்கத்தில் காலைல பத்து மணியிலிருந்து பத்தேகால் வரைக்கும் தருவாங்க. போயி வாங்கிக்கங்க இலவசமா.'

'அதற்கு போக வர ஆட்டோ சார்ஜ் மட்டும் அம்பது ரூபா ஆகுமேப்பா?'

'பஸ்ல போங்க. 23G ல போய்டுங்க.'

அவன் சொல்லும் பஸ் திருவான்மியூரில் இறக்கிவிட்டாலும் ஆச்சரியமில்லை. நான் சொல்லவருவது இதுதான். நேர் வழிகள் அத்தனையையும் கடுமையாக்கி வைத்திருக்கிறார்கள். லஞ்சத்தை எதிர்ப்பதற்கு அசாத்தியப் பொறுமை வேண்டும்.

நன்றி: 'சுஜாதாவின் எண்ணங்கள்', தினகரன் தீபாவளி மலர் 2007.

September 2015 - சந்திரா