Sunday, 17 December 2017

மௌன பூகம்பம்

இது வைரமுத்து எழுதிய குறுங் காதல் கதை… ஆகா சிறந்த வர்ணனை, முடிவு சற்று எதிர் பாராததுவே…

வைரமுத்து
அவளின் ஞாபகங்களே அவனுக்குச் சுவாசம்
பன்னிரண்டு பாலைவன வருஷங்களுக்குப் பிறகு
அவளை அவன் பார்க்க நேருகிறது.
எங்கெனில்..
ஒரு ரயில் நிலையத்தில்.

எப்பேதெனில்..
ஒரு நள்ளிரவில்.

எதிரெதிர் திசையில் செல்லும் ரயில்கள் இளைப்பாறிக்
கொள்ளும் அந்த இடைவெளியில்..

ரயில்களின் எதிரெதிர் பெட்டிகளில்
பழைய கண்கள் நான்கு பார்த்துக் கொள்கின்றன.

அப்பொழுது-
மனசில் எத்தனை மௌன பூகம்பம்!)
உன்னைப் பார்த்த
ஒரு நிமிஷத்தில்
இமைகளைக்
காணாமல் போட்டு விட்டன
கண்கள்.

நீதானா?
இல்லை-
வேறொருவன் கண்களால்
நான்
பார்க்கிறேனா?

மனசின் பரப்பெங்கும்
பீச்சியடிக்கும் ஒரு
பிரவாகம்.

இதயத்தின்
ஆழத்தில் கிடந்த
உன்முகம்
மிதந்து மிதந்து
மேலே வருகிறது.

ஓ!
வருஷங்கள் எத்தனையோ
வழிந்த பிறகும்..
என்
மார்பு தடவும்
அதே பார்வை..

அதே நீ!

என் பழையவளே!

என்
கனவுகளில் அலையும்
ஒற்றை மேகமே!

உன் நினைவுகளில்
நான்
எத்தனையாவது பரணில்
இருக்கிறேன்?

அறிவாயா? என்
மீசைக்கும்
என்
காதலுக்கும்
ஒரே வயதென்று
அறிவாயா?

உன் பெயரை
மறக்கடிப்பதில்
தூக்க மாத்திரை கூடத்
தோற்றுப் போனதே!

ஓ!
நீ மாறியிருக்கிறாய்.
உன்
புருவ அடர்த்தி
கொஞ்சம்
குறைந்திருக்கிறது.

உன்
சிவப்பில் கொஞ்சம்
சிதைந்திருக்கிறது
உன்
இதழ்களில் மட்டும்
அதே
பழைய பழச்சிவப்பு.

இப்போதும்
நாம்
பேசப்போவதில்லையா?

வார்த்தைகள் இருந்தபோது
பிரிந்து போனவர்கள்
ஊமையான பிறகு
சந்திக்கிறோமா?

உன் நினைவுகள்
உன் கணவனைப் போலவே
உறங்கியிருக்கலாம்.
ஆனால்
என் நினைவுகள்
உன்னைப் போலவே
விழித்திருக்கின்றன.

ஓ!
இந்த
ரயில் வெளிச்சம்
நீ
அழுவதாய் எனக்கு
அடையாளம் சொல்கிறதே!
வேண்டாம்!

விழியில் ஒழுகும்
வெந்நீரால்
மடியில் உறங்கும்
உன்
கிளியின் உறக்கத்தைக்
கெடுத்து விடாதே!

இதோ
விசில் சத்தம் கேட்கிறது
நம்மில் ஒரு வண்டி
நகரப் போகிறது.

போய் வருகிறேன்!
அல்லது
போய்வா!
மீண்டும் சந்திப்போம்!
விதியை விடவும்
நான்
ரயிலை நம்புகிறேன்.

அப்போது
ஒரே ஒரு கேள்விதான்
உன்னை நான் கேட்பேன்!

"நீயும் என்னைக்
காதலித்தாயா?"

Saturday, 16 December 2017

சுஜாதா தாட்ஸ் பற்றி கரு. பழனியப்பன்

சுஜாதா தாட்ஸ் பற்றி ஒரு மேடையில் இயக்குனர் - எழுத்தாளர்
கரு. பழனியப்பன் அவர்கள் கூறியது

சுஜாதா 
1. ஏதாவது ஒன்றின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வையுங்கள். அது கடவுளாகவோ அல்லது இயற்கையாகவோ அல்லது உழைப்பாகவோ இருக்கலாம். கேள்வி கேட்காதா நம்பிக்கை, ஏன் என்றால் அரசியல், விஞ்ஞானம் எல்லாம் கேள்வி கேட்டுக் கொண்டே குழம்பி நிற்கிறது

2. ஒரு மாறுதலுக்கு அப்பா, அம்மா கொடுக்கும் வேலைகளில் ஏதாவதை செய்து பாருங்கள். ரொம்ப கடினமான வேலையாக நிச்சயம் இருக்காது. காபி பவுடர் வாங்குவதிற்கும், சில்லரை சாமான் வாங்குவதற்காக இருக்கலாம்.
கரு. பழனியப்பன்

3. மூனு மணி ஆரம்பிக்கும் மேட்னி ஷோ போகாதீர்கள். படிப்பு கெடும், தலையை வலிக்கும். பொய் சொல்ல கஷ்டமாக இருக்கும்.

4. தினமும் நாலு பக்கமாவது படியுங்கள், இதில் காதல், கதை அடங்காது.

5. குறைந்த பச்சம் ஐந்து ரூபாயாவது சம்பாதிக்க முயற்சி செய்து பாருங்கள், அப்பாவிடம் ஜீன்ஸ், டி-ஷர்ட் கேட்பதற்கு முன்பு

6. உங்களுக்குக் கீழே உள்ள சராசரி அடித்தட்டு மக்களைப் பற்றி கொஞ்ச நேரமாவது சிந்தியுங்கள்.

7. ஞாயிறு - பெற்றோர்களோடு செலவழிக்கும் தினமாக இருக்கட்டும், கண்டிப்பாகக் காதல் மட்டும் வேண்டாம், ஏன் என்றால் காதல் தேவை இல்லாத சில இடங்களில் காத்திருக்க வைக்கும், பலர் கண்ணில் அகப்பட்டுக் கொள்வோம்

8. எட்டு முறையாவது ஒரு கிரவுண்டை சுற்றி வாருங்கள், எதயவுது ஆர்வத்துடன் விளையாடுங்கள், இதில் கம்ப்யூட்டர் கேம்ஸ் அடங்காது. வியர்வைச் சிந்த விளையாடினால் நல்ல தூக்கம் வரும், வீண் சிந்தனைகள் வராது.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வந்து விடுங்கள். அதிக பச்சம் ஒன்பது : ஐந்துக்கு எல்லாம் வீடு சேர்ந்துருங்க, ஏன் என்றால் இரவு தான் பல தவறுகளுக்கு காரணமாக இருக்கிறது.

10. ஒரு நாளில் பத்து நிமிடமாவது குடும்ப உறுப்பினர்கள் யாரோடாவது அரட்டை அடியுங்கள். நடந்தது, நடக்காதது எதையாவுது பேசி நேரத்தை செலவிடுங்கள்

இதில் ஏதாவது ஒன்றைத் தினம் செய்து வாருங்கள். நீங்களும் நிம்மதியாக இருப்பீர்கள்

யார் தான் கடவுள்?

யார் தான் கடவுள் என்று எழும்பிய கேள்விக்கு கண்ணதாசன் கூறிய கவிதை பதில்...

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!

படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!

அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!

அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!

பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!

மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!

பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!

முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!

வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!

இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!

அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!
December 2017 - சந்திரா