"ஜெயலலிதா ஒரு பிரைம் மினிஸ்டர் மெட்டீரியல். அவருக்கு இருந்த திறமைக்கு தன் வாழ்வில் எங்கேயோ எட்டாத உயரத்திற்குப் போயிருக்க வேண்டியவர்."
"ஜெயலலிதாவுக்கு ஒன்பது வயது. அப்போது எனக்கு 14 வயசு.
எங்கள் இருவருக்கும் இடையே நட்பு உருவாகக் காரணமாக இருந்தது நடனம்தான். இருவருமே ஒரே நடன ஆசிரியரிடம்தான் நடனம் கற்றுக் கொண்டோம்.
ஒரு சில நாட்களிலேயே நாங்கள் இருவரும் அக்கா தங்கையாக நெருங்கிப் பழக ஆரம்பித்து விட்டோம். இருவருமே எங்களது தனிப்பட்ட விஷயங்கள் எதையும் மறைக்காமல் பகிர்ந்து கொள்வோம்.
தனது திரைப்பட வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் அனைத்தையும் ஜெயலலிதா என்னிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார். எதையும் எப்போதும் அவர் என்னிடம் மறைத்தது இல்லை.
நாங்கள் நட்போடு இருந்த காலங்களில், திடீரென்று ஜெயலலிதாவிடமிருந்து எனக்கு ஃபோன் வரும். 'இன்றைக்கு நான் ஃப்ரீயாக இருக்கிறேன். உன்னிடம் கொஞ்சம் தனியாகப் பேச வேண்டும். உடனே புறப்பட்டு வா' என்று சொல்வார்.
அவ்வளவுதான். நானும் உடனடியாகப் புறப்பட்டு வந்து விடுவேன். இருவரும் எங்காவது ஒரு தனிமையான இடத்திற்குப் போய் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்போம்.
ஆனால் அந்த நட்பில் ஒரு பெரிய இடைவெளி ஏற்பட்டது 1983 க்குப் பிறகுதான்.
கடலூர்.
அரசியலில் நுழைவதற்கான அரங்கேற்றத்தை அங்கேதான் ஆரம்பித்தார் ஜெயலலிதா.
அங்கே நடந்த கூட்டத்தில் பேசியதுதான் ஜெயலலிதாவின் கன்னிப் பேச்சு. அவர் பேசியதை ரெக்கார்ட் செய்து எனக்கு அனுப்பியிருந்தார். 'நான் சரியாகப் பேசி இருக்கிறேனா ? என்னுடைய பேச்சு எப்படி இருக்கிறது? இதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்' என்று கேட்டிருந்தார்.
ஆனால் அடுத்தடுத்து எதிர்பாராத மாற்றங்கள்.
அதற்கு அடுத்த ஒரு சில மாதங்களில் என் கணவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. 1984 இல் என் கணவர் இறந்து விட்டார்.
அப்போது டெல்லியில் இருந்த ஜெயலலிதா இரங்கல் தெரிவித்து தந்தி அனுப்பி இருந்தார் .
கொஞ்சம் கொஞ்சமாக ஜெயலலிதாவின் தொடர்பு என்னை விட்டு விலகத் தொடங்கியது.
வேறு யார் யாரோ அவருக்கு நெருக்கமானார்கள்.
நானும் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையில் தலையிட விரும்பவில்லை. ஜெயலலிதாவுக்கும் என்னுடைய தோழமை தேவைப்படவில்லை. அவர்களுக்கு வேறு யார் யாரோ கிடைச்சிட்டாங்க.
ஆனாலும் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்தபோது எனக்கு மனசு கேட்கவில்லை துடிதுடித்துப் போனேன். அவருக்காக கோவிலுக்குச் சென்று வேண்டிய பிறகு, அந்த விபூதியை எடுத்துச் சென்று மெரினாவில் படுத்திருந்த ஜெயலலிதாவின் நெற்றியில் இட்டு விட்டு வந்தேன்.
இருவரும் ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளவில்லை. ரொம்ப ரொம்ப வருத்தமாக இருந்தது."
எழுத்தாளர் சிவசங்கரி