Sunday 21 July 2019

வாலிப வாலி

வாலியின் நறுக்குத்தெறித்ததாற் போன்ற சில சொற் சித்திரங்கள்…


ஒரு கவியரங்கில் கோவலன் வாழ்வை இரண்டு வரியில்..

"புகாரில் பிறந்தவன்

 புகாரில் இறந்தவன்"


காரைக்குடி கம்பன் விழாவில் அனுமனைப் பற்றி..

"குரங்கென அதன் வாலில் தீவைத்தானே

 கொளுத்தியது அவன் ஆண்ட தீவைத்தானே"


ஒரு கவியரங்க மேடையில், "திரைப்படத்தில் சில மோசமான பாடல்களை இயற்றுகிறீர்களே" என்ற கேள்விக்கு…

"எந்தப்பா திரைப்படத்தில் விலை பெறுமோ

 அந்தப்பா எழுதுகிறேன் இது என்தப்பா" 

என்று சொன்னதுடன்,

"நான் திரையரங்கில் பொருளுக்குப் பாட்டுரைப்பேன்,

 கவியரங்கில் பாட்டுக்குப் பொருளுரைப்பேன்" 

என்றும்,

"கவியரங்கில் வண்ண மொழி பிள்ளக்குத் தாலாட்டும் தாய்,

 திரையரங்கில் விட்டெறியும் காசுக்கு வாலாட்டும் நாய்" 

என பதில் கூறுகிறார்.


ஒரு ஆன்மீகக் கவியரங்கில் 'பிறப்பின் சுழற்சியை'...

"மண்ணிலிருந்து புழு புறப்பட்டது

 புழுவைப் பூச்சி தின்றது

 பூச்சியை புறா தின்றது

 புறாவை பூனை தின்றது

 பூனையை மனிதன் தின்ன

 மனிதனை மண் தின்றது

 மண்ணிலிருந்து மறுபடி

 புழு புறப்பட்டது

 புனரபி மரணம்

 புனரபி ஜனனம்

 பஜகோவிந்தம்

 நிஜகோவிந்தம்!" எனப் பாடுகிறார்.

July 2019 - சந்திரா