Sunday, 15 December 2019
இளமையும் அரசியலும் - கவிஞர் விவேகா
Sunday, 3 November 2019
நானும் ஆசி பெற்றேன் - வாலி
![]() |
Subramaniya Bharathiyar | Actress Devayani (Film: Bharathi) | Real Bharathiyar and Chellamal | Kavingar Vaali |
Sunday, 27 October 2019
சுஜாதா'ஸ் படைப்பில் இருந்து
இது சின்ன ஒரு Bike Drop Scene என்ன ஒரு 1 இல் இருந்து 2 நிமிடம் வரும் காட்சி, இதில் இவ்வளவும் சொல்லமுடியுமா??? கதாநாயகனின் அறிவையும், அவன் பால் கொண்ட காதலியின் நல்ல காதலையும், காமத்தின் அறிவியலையும் அனைத்தையும் கொண்டு சென்று சமுதாயத்திற்கு மூன்று முடிச்சு போட்டுயிருப்பர்.
"வீட்ல என்னடான்னா வேண்டாத ஆள கல்யாணம் பண்ணிக்க சொல்றாங்க. வேண்டிய ஆளு கல்யாணமே வேண்டாங்குறாரு"
"உன் பெட்டியை எடுத்திட்டு என் வீட்ல வந்து இரு"
"எங்க? உன் தங்கை ரூம்லயா அம்மா ரூம்லயா""என் ரூம்ல"
"கல்யாணம் பண்ணிக்காமயா! பச்சை பாவம்"
"இதுல என்ன பாவம்! காதல் மட்டும் பாவமில்லையா"
"காதல் புனிதம். பியூர் டிவைன்"
"காதல்னு ஒன்னு கிடையவே கிடையாது. doesn't exist""என்ன back அடிக்கிறியா"
"நாம பொறந்ததெல்லாம்... நாமனா, நான், நீ, இதோ இந்த பச்சை சட்டை, மஞ்ச சுடிதார், இதோ இந்த போலீஸ்காரர் எல்லாரும் பிறந்தது எதுக்காக? இந்த காதல் கீதல் கண்ணீர் பாட்டு ஓவியம் இதெல்லாமே இருட்டுலயும் ஹோட்டல்லயும் பார்க்லயும் பெட்லயும் முடியுறதுக்காக. எல்லாம் ஹார்மோன் சம்பந்தப்பட்டது. ஹைட்ரொஜன், ஈஸ்ட்ரோஜன், டெஸ்டெஸ்ட்ரோன், ப்ரோஜெஸ்ட்ரோன் வெறும் ஓர்கானிக் கெமிஸ்ட்ரி. எக்ஸ் கிரோமோஸோம், வை க்ரோமோசோம், எக்ஸ் எக்ஸ், எக்ஸ்-வை . அவ்ளோதான் மேட்டர்.
கல்யாணங்கிற இன்ஸ்டிடியூஷன்லாம் சும்மா. சொஸைட்டிக்காக,, ஊர்ல ஒத்துக்கணும்னு... நாமதான் சொஸைட்டிக்காக எதுவுமே செய்றதில்லையே. இதை மட்டும் ஏன் செய்யணும்"
"இப்ப என்னதான் செய்யணும்.?"
"சிம்பிளா சொல்றன். உன்னை காதலிக்கிறேன்னு, நாம ரெண்டுபேரும் சேர்ந்து வாழலாம்னு, என் வீட்ல வந்து இருன்னு, என்கூட என்னை முழுசா சகிச்சிட்டு வாழ வர்றியானு கேட்கிறேன்."
இது முடியும் போதே வைரமுத்து தன் கவிதையாலும் ரஹமான் தன் இசையாலும் நம்மை கவ்வி பிடிப்பார்கள்.
நெஞ்சம் எல்லாம் காதல் ...தேகமெல்லாம் காமம் உண்மை சொன்னால் என்னை நேசிப்பாயா...மஞ்சத்தின் மேல் மன்னிப்பாய
Thursday, 26 September 2019
அதான் நாகேஷ்
நகைச்சுவை மன்னன் நாகேஷ் அவர்களின் பிறந்த நாள் (27-09-1933)
எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத காமெடி, நாகேஷ் உயிரோடு இருக்கும் போதும் எந்த விருதும் தராமல் இருந்துவிட்டது நம் அரசு என்று நம் பத்திரிக்கைகள் எல்லாம் இப்போது புலம்புகின்றன. அதற்கு அவசியமே இல்லை, ஏனென்றால் ரசிகர்களின் நெஞ்சில் அவருக்கு இருக்கும் ஒரு அசையாத இடமே எல்லா விருதுக்கும் மேலானது.
நாகேஷின் இன்டர்வ்யூ ஹிந்து நாளிதழில் 2007 ம் வருடம் வந்தபோது , நாகேஷ் சொன்ன ஒரு விஷயம் அவர் நடிப்புக்கு அப்பாற்பட்டு ஒரு புத்திசாலி என்பதை நிரூபிக்கும்.
வாழ்க்கை மூன்று தளங்களில் இயங்குகிறது -
1) நீங்கள் விரும்பும் ஒன்று எனக்குப் பிடிக்கவில்லை, அதனால் உங்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை.
2) உங்களுக்கு குறிப்பிட்ட ஒன்று பிடிக்கவில்லை, ஆனால் நான் அதை விரும்புகிறேன். அதனால் உங்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை.
3) நீங்கள் எதையாவது விரும்புகிறீர்கள். அது எனக்கும் நிறைய பிடிக்கும், அதனால் உங்களுக்கு என்னை பிடிக்காது.
எனவே எப்படியிருந்தாலும், நம்மை விரும்பாதவர்கள் எப்போதும் இருப்பார்கள். நாம் விரும்பியதைச் செய்துவிட்டு முன்னே செல்ல வேண்டும்.
Sunday, 21 July 2019
வாலிப வாலி
வாலியின் நறுக்குத்தெறித்ததாற் போன்ற சில சொற் சித்திரங்கள்…
ஒரு கவியரங்கில் கோவலன் வாழ்வை இரண்டு வரியில்..
"புகாரில் பிறந்தவன்
புகாரில் இறந்தவன்"
காரைக்குடி கம்பன் விழாவில் அனுமனைப் பற்றி..
"குரங்கென அதன் வாலில் தீவைத்தானே
கொளுத்தியது அவன் ஆண்ட தீவைத்தானே"
ஒரு கவியரங்க மேடையில், "திரைப்படத்தில் சில மோசமான பாடல்களை இயற்றுகிறீர்களே" என்ற கேள்விக்கு…
"எந்தப்பா திரைப்படத்தில் விலை பெறுமோ
அந்தப்பா எழுதுகிறேன் இது என்தப்பா"
என்று சொன்னதுடன்,
"நான் திரையரங்கில் பொருளுக்குப் பாட்டுரைப்பேன்,
கவியரங்கில் பாட்டுக்குப் பொருளுரைப்பேன்"
என்றும்,
"கவியரங்கில் வண்ண மொழி பிள்ளக்குத் தாலாட்டும் தாய்,
திரையரங்கில் விட்டெறியும் காசுக்கு வாலாட்டும் நாய்"
என பதில் கூறுகிறார்.
ஒரு ஆன்மீகக் கவியரங்கில் 'பிறப்பின் சுழற்சியை'...
"மண்ணிலிருந்து புழு புறப்பட்டது
புழுவைப் பூச்சி தின்றது
பூச்சியை புறா தின்றது
புறாவை பூனை தின்றது
பூனையை மனிதன் தின்ன
மனிதனை மண் தின்றது
மண்ணிலிருந்து மறுபடி
புழு புறப்பட்டது
புனரபி மரணம்
புனரபி ஜனனம்
பஜகோவிந்தம்
நிஜகோவிந்தம்!" எனப் பாடுகிறார்.
Sunday, 24 March 2019
புத்தகக் கண்காட்சியின்போது சுஜாதா
புத்தகக் கண்காட்சிக்கு செல்பவர்களுக்கு சுஜாதா சொன்ன பத்துக் கட்டளைகள்! 2009 ஆம் ஆண்டு புத்தகக் கண்காட்சியின்போது சுஜாதா சொன்ன பத்துக் கட்டளைகள் உங்களுக்காக..
1) என்ன புத்தகம் வாங்குவது என்று யாரிடமும் அட்வைஸ் கேட்காதீர்கள். நீங்கள் படித்த நல்ல புத்தகம் என்ன என்று வேண்டுமானால் கேட்கலாம். அது உங்களுக்கும் பிடிக்குமென்பது உறுதியில்லை.
2) படித்து முடிக்கவேண்டும் என்ற உறுதியோடு புத்தகம் வாங்குங்கள். உங்கள் அலமாரியின் எடைகூட்டவோ, அடுக்கி வைத்து அழகு பார்ப்பதற்கோ புத்தகம் வாங்காதீர்கள். அது பர்ஸுக்கு வந்த கேடு.
3) வாங்கும் புத்தகம் எதைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறதோ.. அந்த சப்ஜெக்டை, எழுதிய ஆசிரியர் குறித்து கொஞ்சமாவது தெரிந்து கொண்டு வாங்குங்கள். ‘சுடிதார் தைப்பது எப்படி? - சுஜாதா விளக்கம்’ என்று அட்டையில் கண்டால், ‘சுஜாதாவுக்கு சுடிதார் தைப்பது பற்றி என்ன தெரியும்?’ என்று கடந்து போய்விடுங்கள்.
4) உங்கள் தனிப்பட்ட வாசிப்பு அடர்த்தியானதா, லைட் ரீடிங்கா என்று தெரிந்து வைத்துக் கொண்டு அதற்கேற்ற புத்தகங்களாக வாங்குங்கள்.
5) வாங்கிய புத்தகங்களை இத்தனை நாட்களுக்குள் படித்து முடிப்பேன் என்று உறுதியோடு படிக்க ஆரம்பியுங்கள். இப்போதெல்லாம் ‘பல்லைக் கடித்துக் கொண்டு இத்தனாம் பக்கம்வரை படித்தால், அதன் பிறகு ஸ்பீடெடுத்து முழுதும் படித்துவிடலாம்’ என்கிற ரேஞ்சில் பல புத்தகங்கள் வருகின்றன. நான் சமீபத்தில் படித்த புத்தகத்தை, ‘132வது பக்கம் வரை எப்படியாவது படியுங்கள்’ என்று கொடுத்தார் நண்பர். பாக்கி இருந்தது ஒரே ஒரு பக்கம். அதுவும் குறிப்புகளுக்கு. அதில் ‘வேஸ்ட்’ என்று எழுதி, புத்தகத்தைப் பரணில் போட்டுவிட்டேன்.
6) முற்றிலும் நீங்கள் அறியாத விஷயங்கள் குறித்த புத்தகம் ஒன்றேனும் வாங்கிவிடுங்கள். அது ஏலியன்ஸ் பற்றியதாக இருக்கலாம், கார்ப்பரேட் கம்பெனிகள் குறித்த ரகசியங்களாக இருக்கலாம். இந்த வருடம் புதிதாக ஒரு சப்ஜெக்டைத் தொடப்போகிறேன் என்று ஆரம்பியுங்கள்.
7) கவிதை என்றொரு சிக்கலான சமாச்சாரம் இருக்கிறது. அதைப் பற்றிப் படிப்பதாக இருந்தால் மட்டும், ஒன்றிரண்டைப் புரட்டிப் பார்த்து புரிகிறதா என்று சோதித்துவிட்டு வாங்குங்கள். ‘ஓடியோடி வந்து போகும் ஊழ்வினை போல பிரபஞ்சமெனும் கடலிலிருந்து வண்ணப் பிம்பத்தை வெளிச்சமாய் வீசியபடி..’ என்றெல்லாம் ஜல்லியடிக்கிற கவிதைகளின் படிமங்கள், பரிமாணங்கள் எல்லாம் உங்களைக் குழப்பினால் ‘உன் கண்களில் மீன்.. கனவினில் நான்’ டைப் கவிதைகளுக்கே போகலாம். ஆனால் என் அட்வைஸ் என்னவென்றால்….. வேண்டாம்.
8) சின்ன சைஸ் புத்தகங்களை முழுவதும் ஸ்டாலுக்குள்ளேயே நின்று படித்து முடிக்கிற பிரகஸ்பதிகளைப் பார்க்கிறேன். அவர்களின் வங்கிக் கடன் வட்டிவிகிதம் உயரும் என்று ஐத்ரேய உபனிஷத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
9) திரும்பத் திரும்ப சொல்வதுதான். குழந்தைகளுக்கு வாசிப்பை போதியுங்கள். கட்டாயமாக்காமல், படிக்கும் ஆர்வம் அவர்களுக்காக வர ஆவன செய்யுங்கள். அதற்கு அவர்கள் வீட்டில் இருக்கும்போது செல்ஃபோனை நோண்டாமல், நீங்களும் தினமும் ஒன்றிரண்டு மணிநேரம் புத்தகம் வாசிக்க வேண்டும்.
10) முக்கியமாக ’சுஜாதா சொன்னார்’ என்று என் ஸ்டைலிலேயே எவனாவது எழுதியதை அப்படியே பின்பற்றாமல், அவை சரியா என்றாராய்ந்து பின்பற்றுங்கள்.