Saturday, 12 March 2022

நேர்மையா !!! அடிமையா ???

 எழுத்தாளர் சுஜாதா வீடு.

"என்னங்க. நான் ஒண்ணு கேட்டா…அதை தப்பா எடுத்துக்க மாட்டீங்களே."

தயங்கி தயங்கி தன் கணவரிடம்  இப்படி கேட்டவர் திருமதி சுஜாதா.

மனைவியை திரும்பிப் பார்க்காமலே 

"என்ன கேக்கப் போறே ?"

"இப்போ நம்ம வீட்டுக்கு வந்துட்டு போனாரே, உங்க நண்பர். அவருக்கு நீங்கதானே அட்வைஸர் ?"

"அவருக்கு இல்ல. அவர் கம்பெனிக்கு."

திருமதி மௌனம்.

"சரி, என்னமோ கேக்கணும்னு சொன்னியே."

"ஆமா."

"சீக்கிரம் கேளு."

"ஒண்ணும் இல்ல. அவர் புறப்படும்போது ஒண்ணு சொல்லிட்டு போனாரே. அதுதான்…"

"என்ன சொன்னார் ? எனக்கு ஞாபகம் இல்லையே."

சுஜாதா தன்னிடம் போட்டு வாங்குவதை திருமதி புரிந்து கொண்டார்.

"அதுதாங்க, அந்த வீடு விஷயம்…"

"எந்த வீடு ?"

"நம்ம வீட்டுக்கு எதிர்ல இருக்கற அந்த மூணு பெட்ரூம் வீடு."

"ம்…"

"அந்த வீட்டை அவரே விலை கொடுத்து வாங்கி அதை நம்ம பெயருக்கு முடிச்சு தர்றேன்னு…"

"ஆமா."

"எதுனாலே அப்படி சொல்லிட்டு போறார் ?"

"உங்க மேலே உள்ள அபிமானம்தான்."

"சரி. இப்போ நாம இருக்கறது..?"

"இது நாம சொந்தமா வாங்கின வீடு."

"எத்தனை பெட்ரூம் ?"

"மூணு பெட்ரூம் வீடு."

"இது வசதியா இல்லையா ?"

"இருக்கு…ஆனாலும் அதையும் சேர்த்து வாங்கினா ஆறு பெட்ரூமா இன்னும் வசதியா…"

"ம்…"

"நாம எதுவும் பணம் செலவு பண்ணப் போறதில்லையே.

உங்க நண்பர்தானே பணம் கொடுக்க …"

சட்டென்று மனைவியை நோக்கி திரும்பினார் சுஜாதா.

"இதோ பாரு. நான் அவர் கம்பெனிக்கு அட்வைசர். அதுக்கு மாசாமாசம் சம்பளம் கொடுக்கறார். வாங்கிக்கறேன்.

புரியுதா ?"

"ம்"

"நாம உழைக்கறதுக்கு ஒருத்தர் பணம் கொடுத்து அதை நாம் வாங்கிக்கிட்டா அதுக்கு பேரு நேர்மை.

ஆனா நாம உழைக்காமலே ஒருத்தர் பணம் கொடுத்து அதை நாம் வாங்கிக்கிட்டா

அந்த நிமிஷத்தில இருந்து

நாம அவருக்கு அடிமை."

"ம்."

"இப்போ சொல்லு. நீ இந்த உலகத்தில் நேர்மையா வாழணும்னு ஆசைப்படறியா,

அல்லது அடிமையா வாழணும்னு ஆசைப்படறியா ?"

"நேர்மையாத்தான்…"

"அப்போ இனிமே இதைப் பத்தி பேசாதே !"

(திருமதி சுஜாதா அனுபவங்களிலிருந்து)

Credits: John Durai Asir Chelliah

Saturday, 5 March 2022

'கிழக்கே போகும் ரயிலில்', சப்பாணியும், மயிலும் பயணித்தனர் - பாரதிராஜா

 'பதினாறு வயதினிலே' படத்தின் இறுதிக் காட்சி.

மயில் ஸ்ரீதேவி கண்ணீருடன் காத்திருக்க,

"நிச்சயம் சப்பாணி வருவான்.

மயிலின் வாழ்வு மலரும்"

என முடித்திருப்பார் இயக்குனர் பாரதிராஜா.

சரி. சிறைக்குப் போன சப்பாணி என்ன ஆனான் ?

திரும்பி வந்தானா ?

காத்திருந்த மயிலு என்ன ஆனாள் ?

இந்தக் கேள்விகளுக்கு, 

அடுத்து வந்த தனது 'கிழக்கே போகும் ரயில்' படத்தில் பதிலை வைத்திருந்தார் பாரதிராஜா.

'கிழக்கே போகும் ரயில்' படத்தில் ஒரு கல்யாணக் காட்சி.

விஜயன் உட்கார்ந்து மொய் கணக்கு எழுதிக் கொண்டிருப்பார். 

மைக் செட்டில் ஒரு குரல் சொல்லும் :

"பாப்பாம்பட்டி பழனிச்சாமி  பத்து ரூபா…

அல்லிநகரம் முத்துக்கண்ணு அஞ்சு ரூபா…

பொன்னாண்டி ஒண்ணா ரூபா…

நம்ம ஊரு பஞ்சாயத்துக்காரங்க, 

நூத்தி ஒரு ரூபா…

பெட்டிக்கடை மயிலு புருஷன் சப்பாணி, அஞ்சு ரூபா…"

சப்பாணி- மயில் .

இருவரையும் காட்சியாகக் காட்டாமல் ,

ஒலி வடிவத்தில் மட்டுமே இதை பதிவு செய்திருப்பார் இயக்குனர்.

ஆம். சப்பாணி ஜெயிலுக்குப் போய் நல்லபடியாகத் திரும்பி வந்து, மயிலோடு குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறான் என்பதை ஒரு பாஸிடிவ் பதிலாய் நமக்குக் கொடுத்து விட்டார் பாரதிராஜா.

உற்றுக் கவனித்தால் நம்முடைய எல்லா  பிரச்சினைகளுக்கும்  கேள்விகளுக்குமான பதிலை, இந்த பிரபஞ்சம் எப்போதுமே தயாராகவே  வைத்திருப்பது தெரியும்.  கவனிப்பது  நம் கையில்தான் இருக்கிறது.

Credits: John Durai Asir Chelliah

Saturday, 13 November 2021

இந்த இரண்டில் ஒன்றுதான் அவன் பெயர் - வைக்கம் முகம்மது பஷீர்


பிரபல மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீருக்கு நடந்த ஒரு சம்பவம் பற்றி சமீபத்தில் பவா செல்லதுரையின் வீடியோ ஒன்று பார்த்தேன்.

ஒருமுறை ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடப் போயிருக்கிறார் பஷீர். சாப்பிட்டு முடித்து கை கழுவி விட்டு வந்து பில்லை கொடுக்க பர்ஸை தேடினால்… காணோம். பதறிப் போய் அங்கும் இங்கும் தேடுகிறார் பஷீர்.

"என்ன… பர்ஸை காணலியா?" கல்லாவில் இருந்த முதலாளி கர்ஜித்திருக்கிறார்.

பஷீர் பலஹீனமான குரலில், "ஆம். வரும்போது எடுத்துக் கொண்டுதான் வந்தேன்."

முதலாளி நக்கல் சிரிப்புடன், "எல்லோரும் இதையேதான் சொல்றாங்க. ம்ம்ம்.. நீ போட்டிருக்கற டிரஸ்ஸை கழட்டி கல்லா மேல வச்சுட்டு போ. அப்போதான் புத்தி வரும்."

கூனிக் குறுகிப் போகிறார் பஷீர். 

வேறு வழியின்றி ஜிப்பாவை கழட்டி கல்லா மேஜையில் வைத்து விட்டு தலை குனிந்து நிற்க,

முதலாளி குரல் : "ம்…வேஷ்டியையும் கழட்டு."

நாணத்தால் நடுங்கிப் போகிறார் பஷீர். சுற்றிலும் பார்க்கிறார். எழுபது எண்பது பேர் அந்த ஹோட்டலில் அமர்ந்திருக்கிறார்கள்.

ஒருவரும் உதவத் தயாராக இல்லை. எல்லோர் கண்களும் ஒரு சக மனிதனின் நிர்வாணத்தை காண ஆவலோடு காத்திருந்தன.

வேறு வழியின்றி பஷீர் தனது வேஷ்டியை அவிழ்க்க கை வைத்தபோது, ஹோட்டலுக்கு வெளியிலிருந்து ஒரு குரல் : "நிறுத்துய்யா."

பார்க்கிறார் பஷீர். ஒரு மனிதன் அழுக்கு லுங்கி பனியனுடன் நிற்கிறான். "வேஷ்டியை அவுக்காதே பெரியவரே, முதல்ல ஜிப்பாவை எடுத்து போட்டுக்கோ. 

யோவ் முதலாளி, அவர் உனக்கு எவ்வளவு தரணும். இந்தா, எடுத்துக்கோ."

கல்லாவில் காசை விட்டெறிந்து விட்டு, பஷீரை வெளியே அழைத்து வருகிறான் அந்த மனிதன்.

நிம்மதி மூச்சோடு நிமிர்ந்து பார்த்த பஷீரிடம் அவன் கேட்கிறான்: "ஏன் பெரியவரே, பர்ஸை ஜாக்கிரதையா வச்சுக்க கூடாதா ?  

இந்தா, இதில் உன் பர்ஸ் இருக்கா பாரு."

அவன் லுங்கி உள்ளே இருந்து பத்துக்கும் மேற்பட்ட பர்ஸ்களை எடுத்துப் போடுகிறான்.  அதில் அவரது பர்சும் இருக்கிறது. ஆனால் அதை எடுக்கவில்லை, பஷீர் அவன் முகத்தை பார்க்கிறார்.

"என்ன பெரியவரே அப்படி பாக்கிறே? நான் திருடன்தான். ஆனால் மனிதாபிமானம் இல்லாதவன் அல்ல."

இந்த சம்பவம் பற்றி ஒரு கதையே எழுதி இருக்கிறாராம் பஷீர். 

அதில் சொல்கிறார்: 

"அவ்வளவு நேரம் அவனோடு நான் பேசிக் கொண்டிருந்தேன். 

ஆனால் அவன் பெயரை கேட்க மறந்து விட்டேன். 

அதனால் என்ன ? 

அறம் அல்லது கருணை. 

இந்த இரண்டில் ஒன்றுதான் அவன் பெயராக இருக்க முடியும்."

Credits: John Durai Asir Chelliah

Saturday, 2 October 2021

பாரதியும், நிவேதிதாவும்

எதிர்பாராத அதிர்ச்சி இரண்டு முறை ஏற்பட்டிருக்கிறது பாரதியாருக்கு !

ஒன்று 1921ஆம் ஆண்டு திருவல்லிக்கேணி கோவில் யானை, தும்பிக்கையால் தூர தள்ளியபோது..!

இன்னொன்று அதற்கு சில வருடங்களுக்கு முன்பு, 

சகோதரி நிவேதிதாவை சந்தித்தபோது ! (நிவேதிதா விவேகானந்தரின் சீடர்)

அது நடந்தது கல்கத்தாவில்.

அங்கே நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டுக்கு  போயிருந்தார் பாரதியார். தற்செயலாகத்தான் விவேகானந்தரின் சீடரான சகோதரி நிவேதிதாவை அந்த இடத்தில் சந்தித்தார். 

இருவரும் பல்வேறு விஷயங்களை பற்றி பேசிக் கொண்டிருந்தபோது, இயல்பாகத்தான் நிவேதிதா அந்தக் கேள்வியைக் கேட்டார் : "ஆமாம். உங்கள் மனைவியை நீங்கள் உங்களோடு அழைத்து வரவில்லையா ?"

பதில் சொன்னார் பாரதி : 

"எங்கள் சமுதாயத்தில் பெண்களை இந்த மாதிரி வெளியில் அழைத்து வரும் வழக்கம் இல்லை."

பாரதி சொல்வதை கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார் நிவேதிதா.

தொடர்ந்து சொன்னார் பாரதி : "இன்னொரு விஷயம். 

இது அரசியல் மாநாடு. என் மனைவிக்கு அரசியல் தெரியாது. அவள் இங்கு வந்து என்ன செய்யப்போகிறாள் ?"

அசையாமல் அமர்ந்திருந்தார் நிவேதிதா. ஆனல் அவரது கண்கள் பாரதியாரின் முகத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்தன.

தன்னையறியாமல் ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி குறுகுறுத்தது பாரதிக்கு. "ஏன் இப்படி பார்க்கிறீர்கள் சகோதரி ?"

"ஒன்றுமில்லை. ஒரு பெண்ணுக்கு கொடுக்க வேண்டிய சுதந்திரத்தையே கொடுக்காத நீங்கள், எப்படி இந்த நாட்டுக்கு சுதந்திரத்தை பெற்றுத்தர முடியும் என நினைக்கிறீர்கள் ?"

பெரும் புயல் ஒன்று அடித்தது போல இருந்தது பாரதியாருக்கு. 

அதிர்ந்து போன அவர் அசையாமல் அப்படியே வெகு நேரம் அமர்ந்திருந்தார்.

அவரது சிந்தனையில் மிகப்பெரும் மாற்றம் ஏற்பட்டது அந்த நொடியில்தான்.

பெண்களுக்கும் சம உரிமை என்பதை அதன் பின்தான் முழுமையாக உணர்ந்தார் பாரதியார்.

அந்த சந்திப்புக்கு பின் நிவேதிதாவை தம் குருவாக ஏற்றுக் கொண்டாராம் பாரதி.

குரு ஸ்தோத்திரமும் கூட இயற்றியிருக்கிறார் நிவேதிதாவுக்காக..!

உலகிலேயே மிகப்பெரும் துணிவு,

தான் கொண்ட கொள்கையில் தவறு இருக்கிறது என்பதை உணர்ந்தபோது, 

அதைத் தானாகவே முன் வந்து தைரியமாக திருத்திக் கொள்வதுதான்.

அந்தத் துணிவு பாரதிக்கு இருந்தது. 

அதனால்தான் இன்றும் அவர் நினைவு நம் அனைவருக்கும் இருக்கிறது.

Credits: John Durai Asir Chelliah

Sunday, 19 September 2021

தெய்வம், தேவதை, அம்மா - வாலி, ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான் பிறப்பால் இஸ்லாமியர் அல்ல. இது எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான். ஆனால் தான் இஸ்லாம் மதத்தை  ஏற்றுக் கொண்ட  பிறகு, தன் மதத்தில் எவ்வளவு ஈடுபாட்டோடு இருக்கிறார் என்பதை எடுத்துச்  சொல்லும் இந்த செய்தி, ஒரு  இனிய விஷயம் !

1967 இல் சேகர் என்பவரின் மகனாக பிறந்தபோது அவருக்கு சூட்டப்பட்ட பெயர் திலீப் குமார்.

இந்த நிலையில், 1989 ம் ஆண்டு இஸ்லாத்தை தனது மார்க்கமாக ஏற்றுக் கொண்டார் ஏ.ஆர்.ரஹ்மான் .

இஸ்லாம் மதத்தின் மிக மிக முக்கியமான கொள்கை 

ஏக இறைவனுக்கு இணையாக  எவரையும் சொல்லக் கூடாது.

ஆனால் 'நியூ' படத்திற்காக  பாடல் எழுத வந்த வாலி, இதையெல்லாம்  யோசிக்கவில்லை. அவர் பாடலை எழுதும்போது ஏ.ஆர். ரஹ்மானும் அந்த இடத்தில் இல்லை.

வாலி முதலில் எழுதிய வரிகள் :

"காலையில் தினமும்கண்  விழித்தால் நான்

கைதொழும் தெய்வம் அம்மா !"

பாடலை எழுதிக் கொடுத்து விட்டு  வாலி போய் விட்டார்.

ஒலிப்பதிவுக்காக வந்த  ஏ.ஆர்.ரஹ்மான் பாடலை படித்துப் பார்த்தார் .

அப்புறம் நடந்ததை வாலியே  சொல்கிறார் இப்படி :

"‘நியூ’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நான் பாட்டு எழுதி விட்டு வர ரஹ்மானிடமிருந்து எனக்கு ஃபோன் வந்தது.

“வாலி சார்..”

“என்னய்யா..?”

“வாலி சார் ! எங்க மதத்துல, தெய்வத்தையும் தாயையும் ஒண்ணா சொல்லக் கூடாதும்பாங்க… ‘தெய்வம்’கிற வார்த்தைக்குப் பதிலா வேற ஏதாவது சொல்லுங்க சார்!” 

“ய்யோவ்! என்னய்யா நீ… இதெல்லாம் ஒரு தவறா எடுத்துண்டு… சரி சரி, தெய்வம்கிறதுக்குப் பதிலா ‘தேவதை’ன்னு வெச்சுக்கோ! என்று மாற்றிக் கொடுத்தேன்.”

வாலி வார்த்தைகளை மாற்றித் தர, தெய்வம் தேவதையாக மாறிப்போனது.

அந்த அழகிய பாடலும் உருவானது.

“காலையில் தினமும் கண் விழித்தால் நான்

கை தொழும் தேவதை அம்மா

அன்பென்றாலே அம்மா, 

என் தாய் போல் ஆகிடுமா?”

Credits: John Durai Asir Chelliah

Sunday, 15 August 2021

நினைக்க, நினைக்க - ஸ்ரீதர், ரஜினி

 இயக்குனர் ஸ்ரீதர் உடல் நலமின்றி ஓய்வில் இருந்த நேரம் (1997).

வீடு தேடிப் போனார் ரஜினி.

“நல்லா இருக்கீங்களா ஸார்.?”

“நல்லா இருக்கேன். சொல்லுங்க ரஜினி..”

“அடுத்து ஒரு படம் பண்றேன்.”

“ரொம்ப சந்தோஷம்..!”

“ 'அருணாச்சலம்’ னு டைட்டில் வச்சிருக்கேன்.”

“ஓ... நல்லா இருக்கு. ”

“இந்தப் படத்தின் மூலமா, நம்ம சினிமா இண்டஸ்ட்ரில கஷ்டப்படற சிலருக்கு உதவலாம்னு இருக்கேன்.”

“ரொம்ப ரொம்ப சந்தோஷம்.”

“ஒரு எட்டு பேரை செலக்ட் பண்ணி இருக்கேன்.

அவங்க முதலீடு எதுவும் போட வேண்டாம். ஆனா இந்தப் படத்தில வர்ற லாபத்தில இருந்து, அந்த எட்டு பேருக்கும் ஒரு பெரிய தொகையை கொடுக்கலாம்னு இருக்கேன்.”

ரஜினி சொல்ல சொல்ல அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார் ஸ்ரீதர்.

ரஜினி தொடர்ந்தார் : 

“அந்த எட்டு பேர்ல உங்களையும் சேர்த்துக்கலாம்னு…”

.இடை மறித்தார் ஸ்ரீதர் : “இல்லை ரஜினி. எனக்கு இந்த உதவி தேவையில்லை. நான் அவ்வளவு கஷ்டப்படலை. என்னை விட கஷ்டப்படற யாரையாவது எனக்குப் பதிலா சேர்த்துக்குங்க.”

ஸ்ரீதரிடமிருந்து இந்தப் பதிலை கொஞ்சம் கூட   ரஜினி எதிர்பார்க்கவில்லை !

.மௌனமாக இருந்த ரஜினி எழுந்தார் : “அப்போ புறப்படறேன் ஸார்.”

“ஒரு நிமிஷம் ரஜினி.”

ஸ்ரீதரை திரும்பிப் பார்த்தார் ரஜினி.

ஸ்ரீதர் சொன்னார் : “உண்மையாகவே நீங்க எனக்கு உதவி செய்யணும்னு நினைச்சா, இந்தப் படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு கொடுங்க. அதுக்கு சம்பளம் கொடுங்க. 

அது முடியலேன்னா பரவாயில்லை ரஜினி !

உங்க அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுங்க. அதுக்கு சம்பளம் கொடுங்க. அதை விட்டுட்டு , சும்மா உங்ககிட்ட இருந்து பணம் வாங்கிக் கொள்ள நான் தயார் இல்லை… ஸாரி ! ”

பிரமித்துப் போனார் ரஜினி !

நமக்கும் கூட 

பிரமிப்பாகத்தான் இருக்கிறது.

உடல் நிலை சரியில்லாத ஒரு மனிதருக்கு, அவர் கேட்காமலே ஓடோடிப் போய் உதவி செய்யத் துடித்த ரஜினியின் உள்ளம் உயர்ந்ததா ?

ஊதியம்தான் வாங்குவேனே தவிர, உதவி வாங்க மாட்டேன் என்று ரஜினியிடமே ஓங்கி உரைத்த ஸ்ரீதரின் உள்ளம் உயர்ந்ததா ?

நினைக்க நினைக்க, பிரமிப்பாக இருக்கிறது.

Credits: John Durai Asir Chelliah

Sunday, 6 June 2021

கடிதம் - அன்பே சிவம்

அன்புள்ள சக கடவுள் தம்பி அன்பரசுக்கு,

நம் இருவரவுடைய சித்தாந்தமும் வெவேறாக இருந்தாலும், என்னை அண்ணனாகவே மதித்து எனக்கென்று நிரந்தரமான ஒரு உறவும், தங்கும் இடமும் தர இசைந்த உங்களுக்கு நன்றி!!

பறவைகளுக்கும், துறவிகளுக்கும் நிரந்தரமான சரணாலயம் இருந்தது இல்லை! நானும் ஒரு பறவை தான், நிரந்தரம் என்ற நிலையையே அசௌகரியமாக என்னும் பறவை. இருப்பினும் என்னிடம் நீங்கள் வைத்திருக்கும் அன்பு வீணாகக்கூடாது. அதையும் சேர்த்து உங்கள் மனைவியிடம் மொத்தமாக தாருங்கள்.

இனி என் பயணங்களில் நான் தங்கபோகும் கிளைகளில் அருமை தம்பியின் கணிவும் நிழலும் கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.  அனால், அடுத்த வினாடி ஓளிர்த்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் இவுலகத்தில் ஏராளம். உங்களை சந்தித்தது கூட அப்படி ஒரு ஆச்சரியம் தான்! ஆச்சரியம் நிறைந்த இந்த உலகின் மேல் நம்பிக்கை வைத்து பயணிக்கிறேன்.

உங்களுக்கு திருமதி ஆக போகும் பால சரசுவதியின் வாழ்வில் ஏராளமான சந்தோஷங்கள் காத்திருக்கின்றன. அதற்கு  முழு காரணமாக நீங்கள் இருப்பீர்கள் இருக்கவேண்டும்.

உங்கள் அன்பு அண்ணன்,

நான் சிவம்.  

அன்பே சிவம் 

சந்திரா #எமது மர மேசையில் இருந்து