Friday 17 June 2022

வேகத்தின் விலை

"நான் இது வரை நான்கு தேசிய விருது வாங்கி விட்டேன். ஆனாலும் அதை விட இன்னும் பத்திரமாய் பொக்கிஷமாய், அந்த ரெண்டு ரூபாய் நோட்டை நான் பாதுகாத்து வருகிறேன்."  - நடிகர் மம்முட்டி

தன் வாழ்வில் சந்தித்த முக்கியமான மனிதர்களையும், மறக்க முடியாத நினைவுகளையும், இறக்கி வைக்கமுடியாத காட்சிகளையும்  "காழ்ச்சப்பாடு", என்ற கட்டுரைத் தொகுப்பாக மலையாளத்தில் எழுதியிருக்கிறார். அதனை "மூன்றாம் பிறை வாழ்வனுபவங்கள்" என்ற பெயரில் கே.வி.ஷைலஜா தமிழில் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். 

இந்த புத்தகத்தில் 23 கட்டுரைகள் இருக்கின்றது. அனைத்து கட்டுரைகளும் நம் வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்க்கும் வகையிலே அமைந்துள்ளது. இதனுள் ஒட்டுமொத்த சமூகச் சிந்தனைகள் அடங்கிய தத்துவார்த்தமான படிநிலைகளாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

அதில் ஒரு கட்டுரை "வேகத்தின் விலை"

கார் ஓட்டுவது அவருக்கு பிடித்தமான விஷயம். அதுவும் வேகமாக கட்டுப்பாடுடன் ஓட்டுவது அவருக்கு ரொம்ப்ப பிடிக்கும்.

சென்னையிலிருந்து கேரளாவுக்கு செல்லும் போது பெரும்பாலும் அவரே தன்னுடைய காரை ஓட்டிச் செல்வார். 

ஒருமுறை  ஷூட்டிங் முடிந்த ஒரு பின்னிரவில் கோழிக்கோட்டிலிருந்து மஞ்ஞேரிக்கு சென்றுகொண்டிருக்கும்போது நகர எல்லைத் தாண்டி அடர்ந்த வனப்பகுதிக்குள் அவருடைய கார் நுழைகிறது.  பனிப் படர்ந்த இரவில் ஒலி நாடாவை ஒலிக்க விட்டுக் கொண்டு வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தார். நகக்கீறலையொத்த நிலா அவரை துரத்திக் கொண்டே வந்தது. இருபுறமும் வாகை மரங்களுடன் இருந்த சாலையின் வழியாக சென்று கொண்டிருந்தது. 

அந்த அடர் இருளில் ஒரு மெல்லிய எளிய உருவம். பார்க்க ஒடிசலான வயசான முதியவர் ஒருவர் கையில் கை விளக்கு தலையில் முக்காடுடன் கை நீட்டி மின்னல் வேகத்தில் வழிமறித்தார். 

இடது பக்கம் ஒடித்து மீண்டும் வலப்பக்கம் சாய்ப்பதற்கு இடையில்  வண்டி நிலை குறைந்தது.  இரவின் நிசப்தத்தில் பிரேக் அடித்தவுடன் ஏற்பட்ட அலரல் ஒலி எங்கோ இருளில் மோதி மீண்டும் என்னை வந்தடைந்தது. 

வண்டியை கட்டுக்குள் கொண்டு கோபத்துடன் ரிவர்ஸ் எடுத்தேன். அந்த முதியவர் எதுவும் அறியாதது போல என் அருகில் வந்தார்.  அருகில் இருந்த ஒரு கல்மேடையில் ஒரு பெண் சுருண்டு படுத்து இருப்பதை அப்போது தான் பார்த்தேன்.

கைகூப்பியபடி முதியவர் பேச ஆரம்பித்தார். 

பாப்பாவுக்கு பிரசவ நேரம். ஆஸ்பத்திரிக்கு போக நீங்க தான் உதவனும். கடவுள் உங்களை நல்ல இடத்துக்கு கொண்டு சேர்ப்பார்."  திடீரென காருக்கு குறுக்கே வந்த போது ஏற்பட்ட கோபமெல்லாம் சட்டென்று குறைந்து போனது.  இரவு இரண்டு மணிக்கு எந்த வாகனத்தையும் தேடிப்பிடிக்க முடியாது என்பதால் நான் அவர்களை என் வண்டியில் ஏற்றிக் கொண்டேன். 

அவள் அவருடைய பேத்தி அவள் என்பது தொடர் உரையாடலில் புரிந்து கொண்டேன். நான் மீண்டும் வேகம் எடுத்தேன் அரசு மருத்துவமனை வராண்டாவில் வண்டியை நிறுத்திய சத்தம் கேட்டு அவசரப் பிரிவில் இருந்து 4 ஊழியர்கள் ஓடி வந்தார்கள். 

அவசரத்தில் வந்த அவர்கள் என்னை யாரென்று அடையாளம் தெரிந்து கொள்ளவில்லை. 

அவர்கள் அந்தப் பெண்ணை கைத்தாங்கலாக வண்டியிலிருந்து அழைத்துச் சென்றபின் தான் சமாதானமும் நிம்மதியும் என் முகத்தில்.  மெல்லிய புன்னகையுடன் நான் வண்டியை திருப்பிக் கொண்டிருக்கும் போது  மீண்டும் முதியவர் அருகில் ஓடி வந்தார்.  ரொம்ப பெரிய உதவி பண்ணி இருக்கீங்க.  கடவுள் உங்களுக்கு ரொம்ப பெரிய உதவி செய்வார்.  கடவுள் தான் உங்களை எங்க கிட்ட கொண்டு சேர்த்து இருக்கார். 

உங்க பேர் என்ன என்று கேட்டார்.  மம்முட்டி என்ற  பேரை கேட்டபோது கூட என்னை அவருக்கு தெரியவில்லை.  எனது நடிகன் என்ற கிரீடமும் நொறுங்கி விழுந்த கணம் அது.

என்ன வேலை செய்றீங்க என்று கேட்டேன்.

அவர் வேட்டியின் மடிப்பில் இருந்து கசங்கிய ஒரு நோட்டு தாளை எடுத்து "இத டீ செலவுக்கு வச்சிக்க" என்று என்னிடம் தந்தார். 

என் மனத் திருப்திக்காக மட்டும் வைத்துக்கொள்ளுங்கள் என கூறி விட்டு என் கேள்விக்கு பதில் சொல்லாமல் விறுவென நடந்து மருத்துவமனைக்கு சென்று மறைந்தார்.

அவர் கொடுத்துச் சென்றது மடித்து வைக்கப்பட்ட ஒரு இரண்டு ரூபாய் தாள்.  அதை எதற்காக தந்தார் என்று இன்று வரை எனக்கு புரியவில்லை. 

ஒருவேளை இரண்டு பேருக்குமான கட்டணமாக இருக்கும்.  என்னுடைய டிரைவிங் வேகத்தால் ஒரு ஜீவனை காப்பாற்றவும் புதியதொரு ஜீவனை இந்த பூவுலகில் கொண்டு வரவும் செய்த சிறிய உதவிக்காக அதிக சந்தோஷப்பட்டேன்.

நான் இது வரை நான்கு தேசிய விருது வாங்கி விட்டேன். ஆனாலும் அதை விட இன்னும் பத்திரமாய் பொக்கிஷமாய் அந்த ரெண்டு ரூபாய் நோட்டை நான் பாதுகாத்து வருகிறேன்.

சிலநேரங்களில் நாம் செய்யும் சிறிய உதவிகள் கிடைப்பவர்களுக்கு பெரிய உதவியாகக் கூட இருக்கும்.   அதன் பலனாக பூக்கும் மகிழ்ச்சி பூக்கள் வாழ்க்கை பாதை முழுவதும் வெளிச்சம் கொடுத்துக் கொண்டே இருக்கும்.

Sunday 12 June 2022

உள்ளம் உருகுதடா…. உருகுதய்யா

டி.எம்.எஸ். பாடிய பாடலைக் கேட்டு, உருகாத உள்ளங்களே இருக்க முடியாது.

ஆனால் இசைத்தட்டுக்காக, பாடலை பாடி ஒலிப்பதிவு செய்யும்போதும், அதற்குப் பல காலத்திற்குப் பிறகும் கூட, இதை எழுதியவர் யார் என்று டி.எம்.எஸ்.சுக்கே தெரியாது.

பலகாலம் முன் பழனிக்கு சென்று இருந்தார் டி.எம்.எஸ், வழக்கமாக தங்கும் லாட்ஜில் தங்கி இருந்தார்.

அங்கு வேலை செய்த பையன் ஒருவன் அடிக்கடி ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருப்பதை தற்செயலாக கவனித்தார்.

அந்தப் பாடல்தான் “உள்ளம் உருகுதடா”

பாடலின் சொல்லிலும் பொருளிலும் சொக்கிப் போனார் டி.எம்.எஸ்.

அதை விட டி.எம்.எஸ். ஆச்சரியப்பட்டுப் போன இன்னொரு விஷயம்,

முருகன் பாடலைப் பாடிய அந்தச் சிறுவன் - ஒரு முஸ்லிம் சிறுவன்.

டி.எம்.எஸ். அன்போடு அந்தச் சிறுவனை அருகே அழைத்தார். “தம்பி, இங்கே வாப்பா.”

வந்தான்.

பாடலை எழுதியது யார் என்று விசாரித்தார் டி.எம்.எஸ்.

எதுவும் விவரம் சொல்லத் தெரியவில்லை அந்தப் பையனுக்கு.

“பரவாயில்லை. முழு பாடலையும் சொல்லு.”

ஒவ்வொரு வரியாக அந்தப் பையன் சொல்ல சொல்ல, அதை அப்படியே எழுதிக் கொண்டார் டி.எம்.எஸ்.

பழனியிலிருந்து சென்னை வந்ததும், அந்த “உள்ளம் உருகுதடா” பாடலை “அடா” வரும் இடங்களை மட்டும் “அய்யா” என்று மாற்றி,

பாடி பதிவு செய்து விட்டார் டி.எம்.எஸ்.

அதன் பின் கச்சேரிக்குப் போகிற இடங்களில் எல்லாம் இந்தப் பாடலைப் பாடும்பொழுது, மேடையிலேயே இந்த விஷயத்தை சொல்லுவாராம் டி.எம்.எஸ்.

எப்படியாவது இந்தப் பாடலை எழுதியவர் யார் என்ற உண்மை தெரிந்து விடாதா என்ற ஆசை டி.எம்.எஸ்சுக்கு !

ஆனால் எந்த ஊரிலும் யாரும் அந்தப் பாடலுக்கு உரிமை கொண்டாடவில்லை.

பல வருஷங்கள் கடந்த பின் தற்செயலாக சென்னை தம்புச்செட்டித் தெருவில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்குச் செல்கிறார் டி.எம்.எஸ்.

கும்பிட்டபடியே கோவிலைச் சுற்றி வந்தவர், குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு வந்ததும் அசையாமல் அப்படியே திகைத்து நிற்கிறார் .

காரணம் - அங்கே இருந்த ஒரு கல்வெட்டில் செதுக்கப்பட்டிருந்த பாடல் :

“உள்ளம் உருகுதடா .”

உடலெல்லாம் பரவசத்தில் நடுங்க, எழுதியவர் யார் என்று உற்றுப் பார்க்கிறார் டி.எம்.எஸ்.

அந்தக் கல்வெட்டில் செதுக்கப்பட்டிருந்த பெயர் - "ஆண்டவன் பிச்சி"

யார் அந்த '‘ஆண்டவன் பிச்சி’’ ?

டி.எம்.எஸ்.சின் தேடல் தொடங்கியது.

நாளுக்கு நாள் அது தீவிரமானது.

அதற்கு நல்லதொரு பதிலும் சீக்கிரத்திலேயே கிடைத்தது.

அந்த ‘ஆண்டவன் பிச்சி’ – ஒரு பெண்.

பெற்றோர் வைத்த பெயர் மரகதவல்லி.

பள்ளிக்கு செல்லாதவள். படிப்பறிவு இல்லாதவள்.

பத்து வயது முதல் முருகன் பாடல்களை பாடிக் கொண்டே இருப்பவள்.

ஒன்பது குழந்தைகளுக்குத் தாயான மரகதம், வாழ்வில் எல்லா சோதனைகளையும் சந்தித்தவர்.

முதுமையில் துறவறம் பூண்டு, பின் இறைவனடி சேர்ந்தவர்.

இறப்பதற்கு முன், கோயில் கோயிலாக போய் பாடி வந்து கொண்டிருந்தார்.

அப்படி காஞ்சி மடத்தில் அமர்ந்து ஒருமுறை பாடிக் கொண்டிருந்தபோது, அங்கே இருந்த சிலர் இவரது எளிய தோற்றத்தைக் கண்டு “பிச்சைக்காரி” என நினைத்து துரத்த …

காஞ்சி மஹா பெரியவர் இந்தப் பெண்ணை அருகே அழைத்து, பிரசாதமும் கொடுத்து, “இன்று முதல் உன் பெயர் ‘ஆண்டவன் பிச்சி’ ” என்று ஆசீர்வதித்து அனுப்ப … அன்று முதல் கோயில் கோயிலாகச் சென்று, தெய்விகப் பாடல்களைப் பாட ஆரம்பித்தார் மரகதவல்லி என்ற ‘ஆண்டவன் பிச்சி’.

(சிலர் 'ஆண்டவன்பிச்சை’ என்றும் சொல்வதுண்டு.)

அப்படி அவர் காளிகாம்பாள் கோயிலுக்கு சென்றபோது பாடியதுதான், அந்த 'உள்ளம் உருகுதடா’ !

அது அங்கே கல்வெட்டிலும் பொறிக்கப்பட்டு விட்டது.

சரி. இந்தப் பாடல் பழனி ஹோட்டலில் வேலை செய்து வந்த இஸ்லாமிய சிறுவனுக்கு எப்படித் தெரிந்தது ? டி.எம்.எஸ். காதுகளில் அது ஏன் விழுந்தது ?  

எல்லாம் அவன் செயல்

"கண்கண்ட தெய்வமய்யா  நீயிந்தக் கலியுக வரதனய்யா…

பாவியென்றிகழாமல் எனக்குன் பதமலர் தருவாயப்பா…."

….

"பந்த பாசம் அகன்றதையா

உந்தன்மேல் நேசம் வளர்ந்தததையா

ஈசன் திருமகனே

எந்தன் ஈனம் மறைந்ததப்பா

உள்ளம் உருகுதையா !"



அமைதி அரசர் புத்தரும், ஆக்ஷன் ஹீரோ அர்னால்டும்

"பிரச்சனையே இல்லாத வாழ்க்கை தான் சபிக்கப்பட்ட வாழ்க்கை"

அமைதி அரசர் புத்தரும் ஆக்ஷன் ஹீரோ அர்னால்டும் ஒரே விஷயத்தை தான் சொல்ராங்க!!! - அறை எண் 305 இல் கடவுள் திரைப்படத்தின் ஒரு காட்சி  

எம்.எஸ் பாஸ்கர்: 

கடவுள் ஒரு காட்டுமிராண்டி சார்

என்னை போட்டு பாடாப் படுத்துறான்.

எனக்கு ஒரே பொண்ணு சார்

பயபுள்ள என் கிட்ட ரொம்ப பிரியமா இருக்கும்.

வெள்ளாளப்பட்டில கல்யாணம் பண்ணி கொடுத்தோம்

மாப்பிள்ளையும் நல்லவர் தான்.

என்ன பிரச்சனைன்னு தெரியல

நாலு நாளைக்கு முன்னாடி

எம்புள்ளைய வீட்டுக்கு அனுப்பி விட்டுட்டாரு

எம்புள்ள ஓ-னு அழுகுறா 


பிரகாஷ்ராஜ்: 

முதல்-ல அழுகைய நிறுத்துங்க

அழுகைய நிறுத்துங்க

நான் ஒன்னு சொல்லட்டுமா?


எம்.எஸ் பாஸ்கர்: சொல்லுங்க


பிரகாஷ்ராஜ்:

நீங்க தினமும் கும்புடுற புத்தர் "அக்சப்ட் தி பெயின்-னு" (Accept The Pain) சொல்றாரு

அதுக்கு அர்த்தம் தெரியுமா?


எம்.எஸ் பாஸ்கர்: 

"அரசமரத்து பூவ வையி"னு அர்த்தம்னு பிரபு சொன்னாரு.

தினமும் வைக்குறேன் சார்


பிரகாஷ்ராஜ்: அவன் கிடக்குறான் லூசு

அக்சப்ட் தி பெயின்-னா "வலியை ஏத்துக்கணும்னு" அர்த்தம்

அதான் வாழ்க்கை


எம்.எஸ் பாஸ்கர்:

என்ன சார் கேனத்தனமா இருக்கு ?

எதுக்கு சார் வலிய ஏத்துக்கணும்?


பிரகாஷ்ராஜ்:

சொல்றத கேளுங்க

இப்ப நீங்க ஊர்ல ஜிம்முக்கு போய்கிட்டு இருந்தேனு சொன்னிங்க


எம்.எஸ் பாஸ்கர்: ஆமா


பிரகாஷ்ராஜ்: 

ஏன் உங்க ஆக்ஷன் ஹீரோ அர்னால்டும் ஜிம்முக்கு போறாரு

அங்க என்ன சொல்லி கொடுக்குறாங்க


எம்.எஸ் பாஸ்கர்: என்ன சொல்ராங்க?


பிரகாஷ்ராஜ்: 

நாம பயிற்சி பண்ணும் போது தசையெல்லாம் வலிக்கும்-ல

வலி இருந்தா அந்த தசை ஆரோக்கியமா விரிஞ்சுக்கிட்டு இருக்குனு தானே அர்த்தம்?

அந்த வலி இருந்தால் தானே தசையவே உங்களால உணர முடியுது.

அதே மாதிரி தான் வலி இருந்தால் தான் வாழ்க்கையை உணர முடியும்.

இதோ பாருங்க உங்க மகள் மருமகனோட பிரிவு

அவுங்க ஒருத்தர் மேல ஒருத்தர் வைச்சிருக்குற அன்ப அதிகமாக்கும்.

வாழ்க்கை அழகா இருக்கும். 

"பிரச்சனையே இல்லாத வாழ்க்கை தான் சபிக்கப்பட்ட வாழ்க்கை" உங்க அமைதி அரசர் புத்தரும் ஆக்ஷன் ஹீரோ அர்னால்டும் ஒரே விஷயத்தை தான் சொல்ராங்க "வலியை ஏத்துக்கிட்டா வளமா இருக்கலாம்"

June 2022 - சந்திரா