Saturday 13 November 2021

இந்த இரண்டில் ஒன்றுதான் அவன் பெயர் - வைக்கம் முகம்மது பஷீர்


பிரபல மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீருக்கு நடந்த ஒரு சம்பவம் பற்றி சமீபத்தில் பவா செல்லதுரையின் வீடியோ ஒன்று பார்த்தேன்.

ஒருமுறை ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடப் போயிருக்கிறார் பஷீர். சாப்பிட்டு முடித்து கை கழுவி விட்டு வந்து பில்லை கொடுக்க பர்ஸை தேடினால்… காணோம். பதறிப் போய் அங்கும் இங்கும் தேடுகிறார் பஷீர்.

"என்ன… பர்ஸை காணலியா?" கல்லாவில் இருந்த முதலாளி கர்ஜித்திருக்கிறார்.

பஷீர் பலஹீனமான குரலில், "ஆம். வரும்போது எடுத்துக் கொண்டுதான் வந்தேன்."

முதலாளி நக்கல் சிரிப்புடன், "எல்லோரும் இதையேதான் சொல்றாங்க. ம்ம்ம்.. நீ போட்டிருக்கற டிரஸ்ஸை கழட்டி கல்லா மேல வச்சுட்டு போ. அப்போதான் புத்தி வரும்."

கூனிக் குறுகிப் போகிறார் பஷீர். 

வேறு வழியின்றி ஜிப்பாவை கழட்டி கல்லா மேஜையில் வைத்து விட்டு தலை குனிந்து நிற்க,

முதலாளி குரல் : "ம்…வேஷ்டியையும் கழட்டு."

நாணத்தால் நடுங்கிப் போகிறார் பஷீர். சுற்றிலும் பார்க்கிறார். எழுபது எண்பது பேர் அந்த ஹோட்டலில் அமர்ந்திருக்கிறார்கள்.

ஒருவரும் உதவத் தயாராக இல்லை. எல்லோர் கண்களும் ஒரு சக மனிதனின் நிர்வாணத்தை காண ஆவலோடு காத்திருந்தன.

வேறு வழியின்றி பஷீர் தனது வேஷ்டியை அவிழ்க்க கை வைத்தபோது, ஹோட்டலுக்கு வெளியிலிருந்து ஒரு குரல் : "நிறுத்துய்யா."

பார்க்கிறார் பஷீர். ஒரு மனிதன் அழுக்கு லுங்கி பனியனுடன் நிற்கிறான். "வேஷ்டியை அவுக்காதே பெரியவரே, முதல்ல ஜிப்பாவை எடுத்து போட்டுக்கோ. 

யோவ் முதலாளி, அவர் உனக்கு எவ்வளவு தரணும். இந்தா, எடுத்துக்கோ."

கல்லாவில் காசை விட்டெறிந்து விட்டு, பஷீரை வெளியே அழைத்து வருகிறான் அந்த மனிதன்.

நிம்மதி மூச்சோடு நிமிர்ந்து பார்த்த பஷீரிடம் அவன் கேட்கிறான்: "ஏன் பெரியவரே, பர்ஸை ஜாக்கிரதையா வச்சுக்க கூடாதா ?  

இந்தா, இதில் உன் பர்ஸ் இருக்கா பாரு."

அவன் லுங்கி உள்ளே இருந்து பத்துக்கும் மேற்பட்ட பர்ஸ்களை எடுத்துப் போடுகிறான்.  அதில் அவரது பர்சும் இருக்கிறது. ஆனால் அதை எடுக்கவில்லை, பஷீர் அவன் முகத்தை பார்க்கிறார்.

"என்ன பெரியவரே அப்படி பாக்கிறே? நான் திருடன்தான். ஆனால் மனிதாபிமானம் இல்லாதவன் அல்ல."

இந்த சம்பவம் பற்றி ஒரு கதையே எழுதி இருக்கிறாராம் பஷீர். 

அதில் சொல்கிறார்: 

"அவ்வளவு நேரம் அவனோடு நான் பேசிக் கொண்டிருந்தேன். 

ஆனால் அவன் பெயரை கேட்க மறந்து விட்டேன். 

அதனால் என்ன ? 

அறம் அல்லது கருணை. 

இந்த இரண்டில் ஒன்றுதான் அவன் பெயராக இருக்க முடியும்."

Credits: John Durai Asir Chelliah

Saturday 2 October 2021

பாரதியும், நிவேதிதாவும்

எதிர்பாராத அதிர்ச்சி இரண்டு முறை ஏற்பட்டிருக்கிறது பாரதியாருக்கு !

ஒன்று 1921ஆம் ஆண்டு திருவல்லிக்கேணி கோவில் யானை, தும்பிக்கையால் தூர தள்ளியபோது..!

இன்னொன்று அதற்கு சில வருடங்களுக்கு முன்பு, 

சகோதரி நிவேதிதாவை சந்தித்தபோது ! (நிவேதிதா விவேகானந்தரின் சீடர்)

அது நடந்தது கல்கத்தாவில்.

அங்கே நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டுக்கு  போயிருந்தார் பாரதியார். தற்செயலாகத்தான் விவேகானந்தரின் சீடரான சகோதரி நிவேதிதாவை அந்த இடத்தில் சந்தித்தார். 

இருவரும் பல்வேறு விஷயங்களை பற்றி பேசிக் கொண்டிருந்தபோது, இயல்பாகத்தான் நிவேதிதா அந்தக் கேள்வியைக் கேட்டார் : "ஆமாம். உங்கள் மனைவியை நீங்கள் உங்களோடு அழைத்து வரவில்லையா ?"

பதில் சொன்னார் பாரதி : 

"எங்கள் சமுதாயத்தில் பெண்களை இந்த மாதிரி வெளியில் அழைத்து வரும் வழக்கம் இல்லை."

பாரதி சொல்வதை கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார் நிவேதிதா.

தொடர்ந்து சொன்னார் பாரதி : "இன்னொரு விஷயம். 

இது அரசியல் மாநாடு. என் மனைவிக்கு அரசியல் தெரியாது. அவள் இங்கு வந்து என்ன செய்யப்போகிறாள் ?"

அசையாமல் அமர்ந்திருந்தார் நிவேதிதா. ஆனல் அவரது கண்கள் பாரதியாரின் முகத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்தன.

தன்னையறியாமல் ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி குறுகுறுத்தது பாரதிக்கு. "ஏன் இப்படி பார்க்கிறீர்கள் சகோதரி ?"

"ஒன்றுமில்லை. ஒரு பெண்ணுக்கு கொடுக்க வேண்டிய சுதந்திரத்தையே கொடுக்காத நீங்கள், எப்படி இந்த நாட்டுக்கு சுதந்திரத்தை பெற்றுத்தர முடியும் என நினைக்கிறீர்கள் ?"

பெரும் புயல் ஒன்று அடித்தது போல இருந்தது பாரதியாருக்கு. 

அதிர்ந்து போன அவர் அசையாமல் அப்படியே வெகு நேரம் அமர்ந்திருந்தார்.

அவரது சிந்தனையில் மிகப்பெரும் மாற்றம் ஏற்பட்டது அந்த நொடியில்தான்.

பெண்களுக்கும் சம உரிமை என்பதை அதன் பின்தான் முழுமையாக உணர்ந்தார் பாரதியார்.

அந்த சந்திப்புக்கு பின் நிவேதிதாவை தம் குருவாக ஏற்றுக் கொண்டாராம் பாரதி.

குரு ஸ்தோத்திரமும் கூட இயற்றியிருக்கிறார் நிவேதிதாவுக்காக..!

உலகிலேயே மிகப்பெரும் துணிவு,

தான் கொண்ட கொள்கையில் தவறு இருக்கிறது என்பதை உணர்ந்தபோது, 

அதைத் தானாகவே முன் வந்து தைரியமாக திருத்திக் கொள்வதுதான்.

அந்தத் துணிவு பாரதிக்கு இருந்தது. 

அதனால்தான் இன்றும் அவர் நினைவு நம் அனைவருக்கும் இருக்கிறது.

Credits: John Durai Asir Chelliah

Sunday 19 September 2021

தெய்வம், தேவதை, அம்மா - வாலி, ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான் பிறப்பால் இஸ்லாமியர் அல்ல. இது எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான். ஆனால் தான் இஸ்லாம் மதத்தை  ஏற்றுக் கொண்ட  பிறகு, தன் மதத்தில் எவ்வளவு ஈடுபாட்டோடு இருக்கிறார் என்பதை எடுத்துச்  சொல்லும் இந்த செய்தி, ஒரு  இனிய விஷயம் !

1967 இல் சேகர் என்பவரின் மகனாக பிறந்தபோது அவருக்கு சூட்டப்பட்ட பெயர் திலீப் குமார்.

இந்த நிலையில், 1989 ம் ஆண்டு இஸ்லாத்தை தனது மார்க்கமாக ஏற்றுக் கொண்டார் ஏ.ஆர்.ரஹ்மான் .

இஸ்லாம் மதத்தின் மிக மிக முக்கியமான கொள்கை 

ஏக இறைவனுக்கு இணையாக  எவரையும் சொல்லக் கூடாது.

ஆனால் 'நியூ' படத்திற்காக  பாடல் எழுத வந்த வாலி, இதையெல்லாம்  யோசிக்கவில்லை. அவர் பாடலை எழுதும்போது ஏ.ஆர். ரஹ்மானும் அந்த இடத்தில் இல்லை.

வாலி முதலில் எழுதிய வரிகள் :

"காலையில் தினமும்கண்  விழித்தால் நான்

கைதொழும் தெய்வம் அம்மா !"

பாடலை எழுதிக் கொடுத்து விட்டு  வாலி போய் விட்டார்.

ஒலிப்பதிவுக்காக வந்த  ஏ.ஆர்.ரஹ்மான் பாடலை படித்துப் பார்த்தார் .

அப்புறம் நடந்ததை வாலியே  சொல்கிறார் இப்படி :

"‘நியூ’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நான் பாட்டு எழுதி விட்டு வர ரஹ்மானிடமிருந்து எனக்கு ஃபோன் வந்தது.

“வாலி சார்..”

“என்னய்யா..?”

“வாலி சார் ! எங்க மதத்துல, தெய்வத்தையும் தாயையும் ஒண்ணா சொல்லக் கூடாதும்பாங்க… ‘தெய்வம்’கிற வார்த்தைக்குப் பதிலா வேற ஏதாவது சொல்லுங்க சார்!” 

“ய்யோவ்! என்னய்யா நீ… இதெல்லாம் ஒரு தவறா எடுத்துண்டு… சரி சரி, தெய்வம்கிறதுக்குப் பதிலா ‘தேவதை’ன்னு வெச்சுக்கோ! என்று மாற்றிக் கொடுத்தேன்.”

வாலி வார்த்தைகளை மாற்றித் தர, தெய்வம் தேவதையாக மாறிப்போனது.

அந்த அழகிய பாடலும் உருவானது.

“காலையில் தினமும் கண் விழித்தால் நான்

கை தொழும் தேவதை அம்மா

அன்பென்றாலே அம்மா, 

என் தாய் போல் ஆகிடுமா?”

Credits: John Durai Asir Chelliah

Sunday 15 August 2021

நினைக்க, நினைக்க - ஸ்ரீதர், ரஜினி

 இயக்குனர் ஸ்ரீதர் உடல் நலமின்றி ஓய்வில் இருந்த நேரம் (1997).

வீடு தேடிப் போனார் ரஜினி.

“நல்லா இருக்கீங்களா ஸார்.?”

“நல்லா இருக்கேன். சொல்லுங்க ரஜினி..”

“அடுத்து ஒரு படம் பண்றேன்.”

“ரொம்ப சந்தோஷம்..!”

“ 'அருணாச்சலம்’ னு டைட்டில் வச்சிருக்கேன்.”

“ஓ... நல்லா இருக்கு. ”

“இந்தப் படத்தின் மூலமா, நம்ம சினிமா இண்டஸ்ட்ரில கஷ்டப்படற சிலருக்கு உதவலாம்னு இருக்கேன்.”

“ரொம்ப ரொம்ப சந்தோஷம்.”

“ஒரு எட்டு பேரை செலக்ட் பண்ணி இருக்கேன்.

அவங்க முதலீடு எதுவும் போட வேண்டாம். ஆனா இந்தப் படத்தில வர்ற லாபத்தில இருந்து, அந்த எட்டு பேருக்கும் ஒரு பெரிய தொகையை கொடுக்கலாம்னு இருக்கேன்.”

ரஜினி சொல்ல சொல்ல அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார் ஸ்ரீதர்.

ரஜினி தொடர்ந்தார் : 

“அந்த எட்டு பேர்ல உங்களையும் சேர்த்துக்கலாம்னு…”

.இடை மறித்தார் ஸ்ரீதர் : “இல்லை ரஜினி. எனக்கு இந்த உதவி தேவையில்லை. நான் அவ்வளவு கஷ்டப்படலை. என்னை விட கஷ்டப்படற யாரையாவது எனக்குப் பதிலா சேர்த்துக்குங்க.”

ஸ்ரீதரிடமிருந்து இந்தப் பதிலை கொஞ்சம் கூட   ரஜினி எதிர்பார்க்கவில்லை !

.மௌனமாக இருந்த ரஜினி எழுந்தார் : “அப்போ புறப்படறேன் ஸார்.”

“ஒரு நிமிஷம் ரஜினி.”

ஸ்ரீதரை திரும்பிப் பார்த்தார் ரஜினி.

ஸ்ரீதர் சொன்னார் : “உண்மையாகவே நீங்க எனக்கு உதவி செய்யணும்னு நினைச்சா, இந்தப் படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு கொடுங்க. அதுக்கு சம்பளம் கொடுங்க. 

அது முடியலேன்னா பரவாயில்லை ரஜினி !

உங்க அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுங்க. அதுக்கு சம்பளம் கொடுங்க. அதை விட்டுட்டு , சும்மா உங்ககிட்ட இருந்து பணம் வாங்கிக் கொள்ள நான் தயார் இல்லை… ஸாரி ! ”

பிரமித்துப் போனார் ரஜினி !

நமக்கும் கூட 

பிரமிப்பாகத்தான் இருக்கிறது.

உடல் நிலை சரியில்லாத ஒரு மனிதருக்கு, அவர் கேட்காமலே ஓடோடிப் போய் உதவி செய்யத் துடித்த ரஜினியின் உள்ளம் உயர்ந்ததா ?

ஊதியம்தான் வாங்குவேனே தவிர, உதவி வாங்க மாட்டேன் என்று ரஜினியிடமே ஓங்கி உரைத்த ஸ்ரீதரின் உள்ளம் உயர்ந்ததா ?

நினைக்க நினைக்க, பிரமிப்பாக இருக்கிறது.

Credits: John Durai Asir Chelliah

Sunday 6 June 2021

கடிதம் - அன்பே சிவம்

அன்புள்ள சக கடவுள் தம்பி அன்பரசுக்கு,

நம் இருவரவுடைய சித்தாந்தமும் வெவேறாக இருந்தாலும், என்னை அண்ணனாகவே மதித்து எனக்கென்று நிரந்தரமான ஒரு உறவும், தங்கும் இடமும் தர இசைந்த உங்களுக்கு நன்றி!!

பறவைகளுக்கும், துறவிகளுக்கும் நிரந்தரமான சரணாலயம் இருந்தது இல்லை! நானும் ஒரு பறவை தான், நிரந்தரம் என்ற நிலையையே அசௌகரியமாக என்னும் பறவை. இருப்பினும் என்னிடம் நீங்கள் வைத்திருக்கும் அன்பு வீணாகக்கூடாது. அதையும் சேர்த்து உங்கள் மனைவியிடம் மொத்தமாக தாருங்கள்.

இனி என் பயணங்களில் நான் தங்கபோகும் கிளைகளில் அருமை தம்பியின் கணிவும் நிழலும் கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.  அனால், அடுத்த வினாடி ஓளிர்த்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் இவுலகத்தில் ஏராளம். உங்களை சந்தித்தது கூட அப்படி ஒரு ஆச்சரியம் தான்! ஆச்சரியம் நிறைந்த இந்த உலகின் மேல் நம்பிக்கை வைத்து பயணிக்கிறேன்.

உங்களுக்கு திருமதி ஆக போகும் பால சரசுவதியின் வாழ்வில் ஏராளமான சந்தோஷங்கள் காத்திருக்கின்றன. அதற்கு  முழு காரணமாக நீங்கள் இருப்பீர்கள் இருக்கவேண்டும்.

உங்கள் அன்பு அண்ணன்,

நான் சிவம்.  

அன்பே சிவம் 

Saturday 5 June 2021

பண்பாட்டு அசைவுகள் - தொ.பரமசிவன் (தொ.ப) - ஒரு சோறு பதம்

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம், என்ற முறையில் கீழே குறிப்பிடபடும் நமது பண்பாட்டின் அசைவு ஒன்றே இந்த புத்தகத்தின் சான்று

நெல்லை மாவட்டத்தில் அகால மரணமடைந்துவிட்ட ஓர் இளைஞனின் இழவு வீட்டில் கூடியிருக்கும் கூட்டம், கையில் சொம்புத்தண்ணீருடன் வீட்டிலிருந்து வெளியேவந்த கிழவியைப்பார்த்ததும், அமைதியாகிவிடுகிறது. கிழவி அனைவர் முன்னிலையிலும் மூன்று பிச்சிப்பூக்களை அதில் இடுகிறார். கூட்டத்திலிருந்து ‘ம்..பாவம் என்னத்த சொல்றது’ என்று அனுதாப முனகல்கள் வெளிப்படுகின்றன. மூதாட்டி பூக்களை எடுத்துக்கொண்டு தண்ணீரைக்கீழே கொட்டிவிட்டு உள்ளே சென்றுவிடுகிறார். அதன் அர்த்தம் இறந்தவனின் மனைவி மூன்றுமாத கர்ப்பம் என்பது. செத்தவனுக்கு எப்புடி புள்ள வந்துச்சு என்ற கேள்வி பின்னால் வராமலிருக்க ஒரு வார்த்தைகூடப் பேசாமலேயே செய்யப்படும் பண்பாட்டு அசைவு அது என்கிறார். 

Sunday 4 April 2021

யார் இவர் !!! - காமெடியன் 2 இயக்குனர்

ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, BE படித்து அமெரிக்கா சென்றுவிடும் கனவுடன் BEக்கு அப்ளிகேஷன் மட்டும் போட்டுவிட்டு அதுவாகவே வந்துவிடும் என நம்பி கோட்டைவிட்டு, பிறகு, ITI படித்து, எதோ ஒரு ஃபேக்டரியில் மாதம் 600 ரூபாய்க்கு வேலைக்கு சென்று, தொழிலாளர்கள் சங்க குழப்பத்தில் ஜெயிலுக்கு சென்று, தன் போக்கில் வாழ்ந்து, உதை வாங்கினாலும் எப்படியாவது "பெரியாள்" ஆகி விடலாம் என்று கஞ்சா விற்க ஆந்திரா சென்று, இருந்த பணத்தையெல்லாம் இழந்து, திருப்பதியில் மொட்டைப் போட்டுக்கொண்டு அகோரப்பசியில் கிடைத்தவற்றை தின்று நடந்தே சென்னை சேர்ந்து. சின்ன சின்ன பட்டாசு கடை நடத்தி நஷ்டப்பட்டு.. சேலைகளை வாங்கி வீடு வீடாகச் சென்று விற்று எதுவும் முடியாமல்..
அவர்கள் காலனியில் இருந்த தெலுங்கு மக்களுடன் சேர்ந்து நாளெல்லாம் ரியல் எஸ்டேட் செய்கிறேன் என சீட்டாட்டம் ஆடிக்கொண்டு சுற்ற... வீட்டின் ஒரே வருமானம் ஆன அப்பாவின் உடல்நிலை பாதிக்கப்பட, வறுமை குடிகொண்டு ஒரே ஒரு வேளை மட்டும் சுக்காரொட்டிகள் தின்று, ஊர்சுற்றி ஒன்றும் முடியாமல் எதோ ஒரு நாடகக் கம்பெனியில் ஒரு எலெக்ட்ரீஷியனாக சாதாரண வேலைக்கு சேர....
சின்ன வயதில் இருந்தே தனக்கு இருக்கும் நடிக்கும் திறன் மற்றும் மிமிக்ரி ஆர்வத்தை அங்கே வெளிபடுத்தும் போது நடிக்க வாய்ப்புகள் கிடைக்க அதை பயன்படுத்திக் கொண்டு அந்த நாடகக் கம்பெனியில் இருந்துக் கொண்டே தமிழ் சினிமாவில் மிகப்பெரும் காமெடி நடிகனாக உருவாகவேண்டும் என்று லட்சியம் கொண்டு ஒவ்வொரு கதவாக தட்ட யாரும் அவரை சீண்டிய பாடு இல்லை..
நாடகங்களில் இவரது ஒன்லைனர்கள் பிரபலமாகி காமெடியனாக மெல்ல மெல்ல கவனம் பெற..
இவர் காமெடியனாக நடிக்கும் நாடகத்தை ஒருமுறை பாக்கியராஜூம் ரஜினிகாந்தும் பார்க்க வருகிறார்கள்...எப்படியாவது அவர்களை தன் நகைச்சுவை நடிப்பினாலும் காமெடி ஒன்லைனர்களாலும் இம்ப்ரஸ் செய்துவிடவேண்டும் என்று பரவலாக மெனக்கெட்டு இவரின் காட்சி வருகைக்காக ஆர்வத்துடன் காத்திருக்க..இவர் வந்து பர்ஃபார்மெண்ஸ் செய்யும் ஐந்தாவது காட்சி வருவதற்கு முன்பாகவே அவர்கள் இருவரும் அவசரமாக கிளம்பி சென்றுவிட சோர்ந்து போகிறார்...
மீண்டும் அதே நாடக கம்பெனியில் எடுபுடி வேலைகள் செய்து, சின்ன சின்ன காமெடிகளில் தலைகாட்டிக்கொண்டு இருக்க ஒரு முறை எஸ் எ சந்திரசேகர் நாடகம் பார்க்க வந்து இவரை கவனிக்கிறார்.
என்னுடைய அலுவலகத்தில் வேலை இருக்கிறது செய்கிறாயா? என்று அவர் கேட்க உடனே தலையாட்டி அங்கே வேலைக்கு சேர்ந்து எப்படியாவது இவரது படங்களில் நடித்து மிகப்பெரும் காமெடியனாகி விட வேண்டும் என்று எண்ணம் இவருக்கு...ஆனால் கிடைத்ததென்னவோ உதவி இயக்குனர் வேலை..
அந்த வேலை பிடிக்காமல், சதா காமெடி நடிகனாகும் ஆசையிலேயே சுற்றிக்கொண்டு ஏனோதானோ என வேலை செய்ய எஸ் ஏ சந்திரசேகர் ஒரு நாள் இவரை கடுங்கோபத்தில் எல்லோர் முன்பாகவும் போட்டு வெளுக்க அன்றிலிருந்து மிகவும் ஷார்பான ஒரு ஆளாக உருவாகிறார்.
படம் எடுக்கிறோமோ? இல்லையோ? ஆனால் தன்னிடம் இருக்கும் உதவி இயக்குனர்களுக்கு மாதாமாதம் முறையான சம்பளம் கொடுக்க வேண்டும் என்பது எஸ் ஏ சந்திரசேகர் அவர்களின் பாணி.. எனவே இவருக்கு மாதாமாதம் சம்பளம் பிரச்சனையில்லை.. அதுவும் இல்லாமல் எஸ் ஏ சி ஒரு பிஸியான காலகட்டத்தில் ஓடிக்கொண்டிருக்க வீட்டின் வறுமையை கொஞ்சம் கொஞ்சம் போக்க கிடைத்த வாய்ப்பாகவே அதை பார்க்கிறார்.
ஒரு இயக்குனர் ஆகும் ஆசையே இல்லாமல் உதவி இயக்குனர் வேலை தான் உலகில் மகத்தானது என்று நினைத்துக்கொண்டு அங்கே காலம் தள்ள எஸ் ஏ சந்திரசேகரனனின் ஆஸ்தான இணை இயக்குனராக உயர்கிறார். 16 படங்கள் அவரிடம் வேலை செய்திருக்கிறார்.
தனக்கு முன்பிருந்தவர்கள் தனக்கு பின்பு வந்தவர்கள் என அனைவருமே தனித்தனியாக சினிமா எடுக்க முயற்சிக்க இவருக்கு மட்டும் அந்த ஆர்வம் வராமலேயே இருந்தது. அது தேவையும் இல்லை என்று நினைத்திருக்கிறார்.. காரணம் எஸ் ஏ சந்திரசேகர் கொடுத்த அரவணைப்பு.. அடுத்து மாதாமாதம் கிடைக்கும் சம்பளம்..எக்காரணத்தை கொண்டும் அதை பாதகமாக்கிக்கொள்ள விரும்பியிருக்கவில்லை அவர்..
உடன் வேலை செய்த உதவி இயக்குனர்கள் உசுப்பிக்கொண்டே இருக்க தானும் ஒரு இயக்குனராக ஆகியே தீர வேண்டும் போல.. இல்லையெனில் இந்த உலகம் நம்மை மதிக்காது என்று நினைக்க... இவருடன் வேலை செய்த பவித்ரன் படத்தை ஆரம்பிக்கிறார் அவருடைய படத்தில் இணை இயக்குனராக வேலை செய்து வாய்ப்புகளும் தனியாக தேடிக்கொண்டு இருக்க பல சிக்கல்கள்..
பள்ளி நாட்களிலிருந்தே நடேசன் பார்க்கில் தான் அவரது பயணம் தொடங்கி இருக்கிறது என்பதால் அங்கேயே தினமும் அமர்ந்து கதையை உருவாக்குகிறார். மகேந்திரனின் படங்களை போல உணர்ச்சிகுவியலாக ஒரு சப்ஜக்ட்...ஆனால் அதை யாரும் அப்போது இவரிடம் விரும்பவில்லை. எனவே கம்ப்ளீட் கமர்ஷியல் தான் வேண்டும் என நண்பர்கள் சொல்ல கதையை அதே நடேசன் பார்க்கில் அமர்ந்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்குகிறார்..
எந்தெந்த தயாரிப்பாளர்களிடமோ வாய்ப்பை தேடி அலைய யாரும் கை கொடுக்காமல் சோர்ந்துபோயி SACயிடமே மீண்டும் சரண்டர் ஆகிவிடலாம், சாப்பாட்டிற்க்கும் வேலைக்கும் எந்த பாதகமும் இருக்கப்போவதில்லை என நினைத்து அங்கே போக முடிவெடுக்க...
கடைசியில் இவர் ஏற்கனவே பவித்ரனுடன் வேலை செய்த இரெண்டு படங்களின் தயாரிப்பாளரான குஞ்சுமோன் இவரை அழைத்து வாய்ப்பு கொடுக்க. ஒரு சினிமாவிற்கு புரோகிராம் செய்வது, ஷெட்யூல் போடுவது, பட்ஜட் எழுதுவது போன்றவை தான் மிக முக்கியம். அதுவே அந்த படத்தின் மொத்தகட்டமைப்பை தீர்மானிக்கும்.. SAC அதில் கில்லாடி. மேலும் தன்னிடம் வேலை செய்யும் எல்லா இயக்குனர்களுக்கும் அதை திறமையாக சொல்லிக் கொடுத்து விடுவார்.
தனது முதல் இயக்கமான ஜென்டில்மேன் ரிலீஸ் ஆனது,
மிமிக்ரி காமெடியன் சங்கர் - இயக்குனர் ஷங்கர் ஆகிறார்.
அதன் பின் என்ன பிரம்மாண்டாம் என்று நாம் அனைவரும் அறிவோம்.
Edited the content to make more Interesting to read

Saturday 16 January 2021

யார் இந்த பூம்பாவாய் ?!?


எரிந்த சாம்பலில் இருந்து உயிர்ப்பித்து வருவது பீனிக்ஸ் பறவை மட்டுமா... பூம்பாவாய் கூட தான்.

2007 ஆம் ஆண்டு -ரஜினி-ஷிரியா-ஷங்கர்-வைரமுத்து-ரகுமான் அவர்களின் கூட்டனியில் வந்த பாடல்.

"பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்
புன்னகையோடு மௌவல் மௌவல்
உன் பூ விழி பார்வை போதுமடி
என் பூங்கா இலைகளும் மலருமடி
உன் காற்கொலுசொலிகள் பொதுமடி
பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி..
வாஜி வாஜி வாஜி - என்
ஜூவன் நீ சிவாஜி..."
அது சரி யார் தான் பூம்பாவாய் ?!? 

7ஆம் நூற்றாண்டு- திருஞானசம்பந்தர்-பூம்பாவை-சிவநேசர்-திருமயிலை

திருமயிலை தலத்தில் சிவநேசர் எனபவர் வாழ்ந்து வந்தார். சிவபெருமான் மீது அளவு கடந்த பக்தியுடைய அவருக்கு பூம்பாவை என்ற ஒரு மகள் இருந்தாள். திருஞானசம்பந்தரைப் பற்றியும் அவரின் சைவ சமய தொண்டைப் பற்றியும் கேள்விப்பட்ட சிவநேசர் தன் மகள் பூம்பாவையை சம்பந்தருக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தார். அவ்வாறு இருக்கையில் ஒரு சமயம் பூம்பாவை தோட்டத்தில் தன் தோழிகளுடன் மலர் பறித்துக் கொண்டு இருந்த போது பாம்பு தீண்டி இறந்து விடுகிறாள். மகள் இறந்து விட்ட போதிலும் அவள் சம்பந்தருக்கு உரியவள் என்ற எண்ணம் சிவநேசருக்கு வர மகளின் அஸ்தி மற்றும் எலும்புகளை ஒரு குடத்திலிட்டு கன்னி மாடத்தில் பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தார்.

திருவொற்றியூர் வந்த சம்பந்தரைச் சந்தித்த சிவநேசர் அவரை வலம் வந்து தொழுதார். கன்னி மாடத்தில் வைத்திருந்த குடத்தைக் கொண்டு வந்து சம்பந்தர் முன் வைத்து பூம்பாவை பற்றிய விபரங்களைச் சொல்லி அழுதார். சம்பந்தர் திருமயிலை கபாலீஸ்வரரை தியானித்து “மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலை” என்று தொடங்கும் பதிகம் பாடினார்,  பாடி முடித்ததும் குடத்தை உடைத்துக் கொண்டு சாம்பலில் இருந்து வெளியே வந்த பூம்பாவை சம்பந்தரை வணங்கினாள். சிவநேசர் சம்பந்தரை வணங்கி பூம்பாவையை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார்.  பூம்பாவைக்கு உயிர் கொடுத்ததின் மூலம் அவள் எனக்கு மகள் ஆகின்றாள் என்று கூறிய சம்பந்தர் சிவநேசரின் கோரிக்கையை நிராகரித்து விடுகிறார். பூம்பாவை தன் வாழ்நாள் முழுவதும் கன்னியாகவே இருந்து இறைவன் தொண்டு செய்து வந்தாள். திருமயிலை கபாலி கோயில் மேற்கு கோபுரம் அருகில் பூம்பாவைக்கு சந்நிதி இருக்கிறது.

Friday 15 January 2021

புதி(ரா/தா)னதோர் வரிகள் - வைரமுத்து

"பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசியம் " பாடலின் ஆரம்பத்தில் வருகிற "Wu Ai Ne, Wu Ai Ne", என்கிற மன்டரின் மொழி (mandarin என்பது Chinese வகை, China, Taiwan, Singapore போன்ற நாடுகளில் பபன்படுத்துவார்களாம், இதற்க்கு 'ஐ லவ் யூ' என்று பொருள்

"எனக்கே எனக்கா" பாடலில் வருகிற, "Hai Re Hai Re Hai Rabba" என்பது உருது (urdu) வார்த்தை கடவுளை குறிக்குமாம்



Sunday 3 January 2021

Super Deluxe - ஒளி ஓவியம்

ஆணோ அலியோ அரிவையோ என்றிருவர், காணாக் கடவுள் கருணையினால் தேவர்குழாம் - மாணிக்கவாசகர்

திருநங்கையா மாறின கணவனுடன் மனைவி பேசிட்ருக்காங்க, அவங்களோட குழந்தை பக்கத்துல விளையாடிட்ருக்கான், backdrop பூஜை அரை மற்றும் தூணில் சாய்ந்தபடி வீட்டின் முதுமை பாட்டி.

#SuperDeluxe #thyagarajakumararaja #CameraShot

2021 - சந்திரா