Friday, 11 September 2020

பாரதி சிறுகுறிப்பு

பாரதிக்கு 'புதுச்சேரி' கொடுத்த 'கவிதை மகுடமும்”, 'கஞ்சா பழக்கமும்”

பாரதி கவிதையின் உச்சம் தொட்டது புதுச்சேரியில் வாழ்ந்த காலங்களில்தான்..அதே சமயம் தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாகி இறுதிகாலத்தில் சீரழிந்ததும்  புதுச்சேரியில்தான்..  

 'இந்தியா” வார இதழ் அரசாங்கத்தின் அடக்கு முறையின் காரணமாக நின்றுபோய்விட அதன் பின்னரே புதுவையில் பாரதியின் படைப் புகள் யாவும் 'காட்டாற்று வெள்ளம் போல...” கணக்கின்றி வெளிவரத் தொடங்கின. 

வேதாந் தப் பாடல்கள், சக்திப் பாடல்கள்; பெண் விடுதலைப் பாடல்கள், சுய சரிதை, வசன கவிதை போன்ற தமிழின் உன்னதமான படைப்பு களும், 'கண்ணன் பாட்டு”, 'குயில்பாட்டு”, பாஞ்சாலி சபதம்” ஆகிய மூன்று சிறு காப்பியங்களும் ஏறக்குறைய இக்காலத்தில்தாம் வெளிவந்துதது.. 

மனித சமூகத்தின் விடுதலை வேட்கையையும், வாழ்வின் மகத்தான இலட்சியங்களையும், , நேர்ப்பட, அஞ்சாது பதிவுசெய்த இடம் புதுச்சேரி என்பதை அவனின் படைப்புகளே நமக்கு அறிவித்துக் கொண்டிருக்கின்றன.

 வறுமையின் காரணமாக பாரதி, தன் வீட்டை ஈஸ்வரன் தர்மராஜா கோயில் வீதியின் கோடியில் இருந்த 'விளக்கெண்ணெய்ச் செட்டியாரின்...” வீட்டுக்கு மாற்றிக் கொண்டுவிட்டிருந்தார். இந்தச் செட்டியார் பாரதியிடத்தில் வீட்டு வாடகை கேட்டதே கிடையாது. செட்டியார் வருவார். பாரதி பாடிக்கொண்டிருக்கும் பாட்டைக் கேட்பார். பிறகு மௌனமாய் வெளியே போய்விடுவார். பாரதி பேச்சுக் கொடுத்தால் ஒழிய செட்டியார் தாமாக ஒன்றும் பேச மாட்டார்.

இவரின் வீடுதான் பாரதிக்கு சங்கப் பலகை; கான மந்திரம்..அத்தகைய சிறப்புடைய விளக்கெண்ணைய்ச் செட்டியாரின் வீடு மட்டும் இல்லாது போயிருந்தால் பாரதியின் புதுச்சேரி வாசமும், அவனுடைய வாழ்க்கையும் பாழாய், பாலைவனமாய்ப் போயிருக்கும் என்பது நிதசர்னமான உண்மை…

வீட்டுத் தொல்லைகள் காரணமாகவும், அவற்றை மறக்கவும் புதுவை கடற்கரையில் பல நாட்கள் இரவெல்லாம் புலம்பியபடி கழித்தார்..:” தாயே பராசக்தி..! தீராத குழப்பம்.. எத்தனை நாட்கள்! எத்தனை மாதங்கள்! எத்தனை வருஷங்கள்!.

என்னைக் கடன்காரர் ஓயாமல் வேதனைப்படுத்திக் கொண்டிருந்தால், நான் அரிசிக்கும் உப்புக்கும் யோசனை செய்துகொண்டிருந்தால் உன்னை எப்படிப் பாடுவேன்...? எனது குடும்பப் பாரமெல்லாம் உன்னைச் சேர்ந்தது. உன்னைப் புகழ்ச்சிப் புரியும் தொழில் என்னைச் சேர்ந்தது.  ...” என கடற்கரையில் புகைத்துக்கொண்டிருந்த பாரதியைக் கண்டதாக வ.வே.சு.ஐயர், 'குறிப்பிடுகிறார்.. பாரதியாருக்குக் கஞ்சா சாப்பிடும் வழக்கம் புதுவை குள்ளச்சாமியின் பழக்கத்தால் ஏற்பட்டது...” என்றும் குறிப்பிடுகின்றார்.

அதுபோல, 'பாரதி புதையல்” மூன்றாம் தொகுதியில் பாரதியுடன் நெருங்கிப் பழகியவரும், புதுவையில் 'இந்தியா”, 'விஜயா”, 'கர்மயோகி” முதலிய பத்திரிகைகள் நடந்துவந்த காலத்தில் பாரதிக்குத் துணை புரிந்தவருமான பரலி சு. நெல்லையப்பர் எழுதியுள்ள கட்டூரையொன்றில் 'பாரதிக்கு வறுமையின் கொடுமையாலும், ஒரு சாமியாரின் கூட்டுறவாலும் புதுவையில் இருந்தபோது கஞ்சா பழக்கமேற்பட்டதும், அதனால் உடல் நிலை மோசமானது...” என்றும் அதனை உறுதி செய்கின்றார். 

இறுதிக்காலத்தில் யானை அடித்த காயத்தாலும்,கஞ்சா பழக்கத்தினால் ஏற்பட்ட உடல் நலிவாலுமே பாரதியின் உயிர் பிரிய நேரிட்டது..

பாரதியின் புதுச்சேரி வாழ்க்கை அவனுக்கு 'கவிதை மகுடத்தையும்”, 'கஞ்சா பழக்கத்தையும்” ஒரு சேர ஏற்படுத்தித் தந்தது அவன் வாழ்வின் விதியன்றி வேறு என்னவாக இருக்க முடியும்...?

September 2020 - சந்திரா