பெங்களூரு வந்து ஒரு பத்து நாட்கள் உட்லேண்டில் தங்கியிருந்த டைரக்டர் பாரதிராஜா, பெங்களூருவாசியான எழுத்தாளர் அமுதவனிடம், சுஜாதா அவர்களை சந்திக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தைத் தெரிவிக்க, அவரும் மாலை ஐந்து மணி வாக்கில் அழைத்துச் சென்றிருக்கிறார்.
ஆனால், வழக்கத்துக்கு மாறாக அன்றைக்கு சுஜாதா வீட்டில் இல்லை. வீடு பூட்டியிருந்தது. வீட்டுக்குள் விளக்கு எரிந்து கொண்டு இருந்ததால் உள்ளே இருப்பார் என்று நினைத்து நான்கைந்து முறை அழைப்பு மணியை அழுத்தியும் கதவு திறக்கப்படவில்லை. அவர் வீட்டில் இல்லை என முடிவுக்கு வந்தார்கள்.
பி.இ.எல்.குவார்ட்டர்ஸில் சுஜாதா வீடு அமைந்திருந்த இடம் மிகவும் ரம்யமானது. அவர் வீட்டுக்கு எதிரே பெரிய மைதானம். அதற்கடுத்து தைல மரத்தோப்பு. தூரத்தில் தெரியும் நந்தி மலை என்று பார்க்கவே மிகவும் பரவசமாக இருக்கும். ("பார்க்க என்னமோ நன்னாத்தான் இருக்கும். ஆனா, அந்த யூகலிப்டஸ் தோப்புக்குள்ள மாசத்துக்கு ரெண்டு கொலையாவது நடந்துண்டே இருக்கும். பகல் நேரங்களில் பார்த்தீங்கன்னா இளஞ் ஜோடிகள் அதுக்குள்ள போறதும் வர்றதுமாக ஒரே கண்றாவி..."--திருமதி சுஜாதா).ஆக,அந்த இடம் இயற்கை ரசிகரான பாரதிராஜாவுக்கு மிகவும் பிடித்துவிட்டது.
"அவரு இல்லாதது நல்லதாப்போச்சு. கொஞ்சம் அப்படியே இந்த இடத்தில் உட்கார்ந்து இந்த இடத்தை அனுபவிப்போம்.அப்புறம் கிளம்பலாம்" என்று சொல்லி சுஜாதா வீட்டு முற்றத்திலேயே உட்கார்ந்துவிட்டார் பாரதிராஜா.
மறுநாள் காலை சுஜாதாவுக்கு விஷயம் சொன்னபோது மிகவும் வருந்தினார். "அடடா! என்னய்யா இது இப்படி ஆயிருச்சே.ரொம்ப நாளைக்கப்புறம் படம் பார்க்க்கலான்கிறதுக்காக சினிமாவுக்கு போயிருந்தோம்.நேத்து நீங்க போன்ல ஒரு வார்த்தைச் சொல்லியிருந்தீங்கன்னா வீட்லயே இருந்திருப்பேன்" என்றார்.
"சாரி சார். இன்னைக்கு சாயந்திரம் இருப்பீங்கதானே? நாங்க வர்றோம்" என்று அமுதவன் கூற,
"இல்லையில்லை அத்தனை பெரிய டைரக்டர் வீடு தேடி வந்து நான் இல்லாமல் போய், மறுபடி அவரை வீட்டுக்கு வரச் சொல்வது மரியாதையாக இருக்காது. வேணும்னா ஒண்ணு செய்யறேன்.நாளைக்கு சாயந்திரம் அஃபிஷியலா டெல்லி போறேன். அதனால் இவருக்காக நாளைக்கு ஒரு நாள் லீவு போட்டுவிட்டு காலையில உட்லண்ட்ஸ் வந்துர்றேன். அங்க சந்திக்கலாம். அவரைக் கேட்டுச் சொல்லுங்க" என்றார் சுஜாதா.
அதன்படியே காலை எட்டரை மணிக்கே உட்லண்ட்ஸுக்கு வந்து விட்டார் சுஜாதா. 'பதினாறு வயதினிலே', 'கிழக்கே போகும் ரயில்' கிராமியக் கதைகள், ஆங்கிலப் படங்கள் என்று ஆரம்பித்து புட்டண்ணா,கனகால்,சத்யஜித்ரே , மிருணாள்சென், எம்.எஸ்.சத்யு என்றெல்லாம் நிறையப் பேசினார்கள். கிராமியக் கதை மட்டும்தான் தெரியும் என்ற இமேஜை உடைப்பதற்காகவே சிகப்பு ரோஜாக்கள் என்ற சைக்கலாஜிகல் திரில்லர் எடுக்க இருப்பதாகச் சொன்னார் பாரதிராஜா.
"இருங்க இளையராஜாவைக் கூட்டி வர்றேன். இங்கே வந்ததே சாங் கம்போசிங்குக்காகத்தான். ஆனா வந்ததும் முதல்ல மூகாம்பிகை கோயிலுக்குப் கிளம்பிட்டார். இப்ப காலையில தன் திரும்பி வந்திருக்கார். இனிமேல் தான் அவருடைய ஒர்க் ஆரம்பிக்கணும்" என்று சொல்லி எழுந்து போனவர், பக்கத்து அறையில் தங்கி இருந்த இளையராஜாவை அழைத்து வந்தார். அறிமுகப்படுத்திய பிறகு, பீத்தோவன், மொசார்ட் என பேச்சு ஆரம்பித்தது.
"நான் இப்ப அன்னை மூகாம்பிகையுடன் மட்டும்தான் இருக்கேன். என்னுடைய எண்ணம் சிந்தனை உடம்பு பூராவும் மூகாம்பிகை தான். மொசார்ட்டுக்கு எல்லாம் திரும்பிவர கொஞ்ச நாள் தேவைப்படும். அம்மாவுடைய ஐக்கியத்திலேயே ஒரு பாட்டுப் போட்டு இருக்கேன். இதை நான் போட்டேன்னு சொல்றதைவிட என்னைப் பயன்படுத்தி அவளே, அந்தத் தாயே போட்டுக்கிட்ட பாட்டுன்னுதான் சொல்லணும். இதனை அவ பாதத்துல வச்சி கொண்டு வந்திருக்கேன். அதைச் சரியான சமயத்துலவெளியிடனும். யாருக்கு முதல்ல போட்டுக் காட்டலாம்னு யோசிச்சுக்கிட்டிருந்தேன்.சுஜாதா சார் வந்திருக்காரு. அவருக்குத்தான் அந்த அதிர்ஷ்டம் வாய்ச்சிருக்கு. சார்! என்னோட ரூமுக்குக் கொஞ்சம் வாங்க. அந்தப் பாட்டைக் கேட்டுட்டு அதனுடைய அனுபவம் என்னன்னு சொல்லுங்க... சுஜாதா சார் மட்டும் என்னோட வரட்டும். வேற யாரும் வர வேண்டாம்" என்றார் இளையராஜா.
"நான் மட்டுமாவது வர்றேன்" என்று கிளம்புவதுபோல் பாவனை செய்த பாரதிராஜாவை, "இல்லை உனக்குத் தனியா அப்புறமா போட்டுக் காட்டறேன்" என்று சொல்லி சுஜாதாவை மட்டும் கூட்டிப் போனார். இளையராஜாவின் அறைக்குப் போன சுஜாதா இருபது நிமிடங்கள் கழித்து வந்தார்.
"நிஜமாகவே நல்லாருக்கு. யமன் கல்யாண்ல ரொம்ப அழகா போட்டிருக்கார்.'ஜனனீ ஜனனீ, ஜகம் நீ அகம் நீ' அப்படின்னு ஒரு பாட்டு. ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுப் பாடி இருக்கார். நல்ல மெலடி. அவர் குரலும் கரெக்டா இழைஞ்சிருக்கு. ஆனா, 'இது என்னுடைய குரலே இல்லை. இத்தனை நாள் நான் இந்தக் குரலைக் கேட்டதே இல்லை. இது என் குரல்தானான்னு எனக்கே ஆச்சரியமாயிருக்கு' அப்படினெல்லாம் அநியாயத்துக்கு உணர்ச்சி வசப்படறார். ரொம்பவும் பக்தின்னு நினைக்கிறேன்" என்றார் சுஜாதா.
மேலும் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு விமானத்துக்கு நேரம் ஆயிற்றென்று விடைபெற்றார் சென்றார் சுஜாதா.