Saturday 14 May 2022

அன்னக்கிளியும், மாங்காடு காமாட்சியும்

குழப்பத்தோடு மாங்காடு காமாட்சியம்மன் கோவிலுக்குள் நின்று கொண்டிருந்தார் இளையராஜா. 

கோவிலுக்குள்ளே நடந்திருந்த ஒரு சம்பவம் அவரை மிகவும் பாதித்திருந்தது.

அவர் கூடவே கங்கை அமரன், பாஸ்கர். 

அன்றுதான் அன்னக்கிளி (1976) பாடல் ஒலிப்பதிவு என சொல்லி இருந்தார்கள் பஞ்சு அருணாசலம் படக் குழுவினர்.

பல வருட சோதனைக் காலம் ஒரு வழியாக முடிவுக்கு வந்து விட்டது. நீண்ட கால லட்சிய கனவு நிறைவேறும் நேரம் வந்து சேர்ந்து விட்டது என நெஞ்சம் நிறைய மகிழ்ச்சியோடு நின்றிருந்தார்கள் ராஜா சகோதரர்கள்.

அதனால்தான் அர்ச்சனையும் வழிபாடும் செய்ய அதிகாலையிலேயே மாங்காடு கோவிலுக்கு வந்திருந்தார்கள்.

அர்ச்சனை முடிந்த பின், 

தலை தாழ்த்தி வணங்கி விட்டு நிமிர்ந்து அம்மன் முகத்தைப்

பார்த்த இளையராஜா திடுக்கிட்டுப் போனார் .

அம்மன் இளையராஜாவைப் பார்த்து புன்னகைத்து இப்படி சொல்வது போல ஒரு உணர்வு.

"உன் சோதனை காலம் இன்னமும் முடியவில்லை மகனே, பொறுமையோடு இரு !"

இளையராஜா கொஞ்சம் பயந்துதான் போனார். "இன்றைய பாடல் ஒலிப் பதிவு எப்படி நடைபெறும் ? ஒருவேளை இதுவும் தடைப்பட்டு நின்று போய் விடுமோ ?"

ஏனெனில் ஏற்கனவே தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்தை நிறைய பேர் நிறைய விதமாக குழப்பி இருந்தார்கள். 

ராஜா ராசியில்லாதவர் என ஒருவர் சொல்லி இருந்தார். விஸ்வநாதனைப் போட்டால் வியாபாரம் நன்றாக இருக்கும் என இன்னொருவர் ஆலோசனை கொடுத்திருந்தார்.

இது எல்லாவற்றையும் மீறித்தான் பஞ்சு அருணாசலம் இளையராஜாவை புக் செய்திருந்தார். இன்று பாடல் ஒலிப்பதிவு என்றும் சொல்லி இருந்தார்.

அடடே ! ஒலிப் பதிவுக்கு நேரமாகி விட்டதே !

இளையராஜா சகோதரர்கள் கோவிலிலிருந்து புறப்பட்டு நேராக வந்த இடம்...

ரெக்கார்டிங் ஸ்டூடியோ.

பூஜை முடிந்து ரிகர்சல் தொடங்கியது.

ஆர்க்கெஸ்ட்ராவில் இருந்த அத்தனை பேரும் இளைய ராஜாவையே உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டு, உள்ளமெல்லாம் இறைவனை வேண்டிக் கொண்டு இளையராஜா குரல் கொடுத்தார் :

"ரெடி, ஒன், டூ, திரீ'' 

அடுத்த வினாடி பவர் கட். அத்தனை விளக்குகளும் அணைந்து போயின. எங்கும் ஒரே கும்மிருட்டு.

சப்த நாடியும் அடங்கி விட்டது ராஜாவுக்கு.

டோலக் வாசிக்கும் பாபுராஜ் 'ம்..நல்ல்ல்ல சகுனம்' என்றார், கேலியும் கிண்டலுமாக.

உள்ளம் நொறுங்கி போனார் இளையராஜா. சட்டென்று எழுந்து ஸ்டூடியோவிலிருந்த தனி அறைக்குள் புகுந்து கொண்டார்.

இந்த வாய்ப்பும் கை நழுவிப் போய் விடுமோ ? சகுனம் சரியில்லை என்று சத்தமாகவே சொல்கிறார்களே !

காலையில் பார்த்த அம்மனின் புன்னகை முகம் அவர் நினைவுக்கு வந்தது. அந்தப் புன்னகைக்கு என்ன அர்த்தம் என்று இன்னும் புரியவில்லையே !

சிறிதுநேரம் அப்படியே

தனியாக அமர்ந்திருந்தார் இளையராஜா.

இதற்குள் மின்சாரம் வந்து விட்டது.

மறுபடியும் தேங்காய்.

மறுபடியும் கற்பூரம்.

"சைலன்ஸ்! டேக்…ரன்னிங்''

கோவர்தன் மாஸ்டர், "ஒன் டூ.." என குரல் கொடுக்க, எஸ். ஜானகி "ஆ...ஆ..." என்று ஹம்மிங்கை தொடங்க…

அருமையாக வந்திருந்தது அந்தப் பாடல்.

இருந்தாலும் ரெக்கார்டிங் என்ஜினீயர் சம்பத் ஒன்ஸ்மோர் போய்ப் பார்க்கலாமே என்றார்.

இளையராஜா சும்மா இருந்திருக்கலாம். ஆனாலும் இப்படி சொன்னார்.

"முதலில் பதிவான பாடலை ஒரு தடவை போட்டு கேட்டுப் பார்த்து விடலாமே !"

"ஏன் ராஜா ?"

"அதை ஒருமுறை கேட்டுப் பார்த்தால் ஆர்கெஸ்ட்ராகாரர்கள் தங்கள் தவறுகளை அவர்களே கேட்டுத் திருத்திக் கொள்வார்களே...'' 

டேப்பை ரிவைண்ட் செய்தார்கள். ஆன் செய்தார்கள்.

டேப் ஓடியது ஓடியது ஓடிக் கொண்டே இருந்தது.

ஒரு சப்தமும் வரவில்லை.

ஏனெனில் பாடல் பதிவாகவில்லை! 

இரண்டாவது சகுனத் தடை.

பஞ்சு அருணாசலத்தின் பக்கத்தில் இருந்தவர்கள் அவர் முகத்தைப் பார்த்தார்கள். எந்தச் சலனமும் இன்றி அமைதியாக இருந்தார் பஞ்சு அருணாச்சலம்.

மீண்டும் பாடல் பதிவு தொடங்கியது.

டேக் நம்பர் ஒன்று 

இரண்டு

மூன்று…

இப்படியாக 12 டேக்குகளுக்கு மேல் வாங்கித்தான் அந்தப் பாடல் ஓகே செய்யப்பட்டது.

நிம்மதியானார் இளையராஜா.  மூடியிருந்த கண்களில் ஈரம் கசிய வெகு நேரம் அம்மனுக்கு நன்றி சொல்லி விட்டு கண் திறந்து பார்த்தார்.

அங்கே ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் பஞ்சு அருணாசலம் மட்டும் புன்னகையுடன் அமைதியாக அமர்ந்திருந்தார்.

காலையில் மாங்காடு கோவில் காமாட்சியம்மன் முகத்தில் பார்த்த அதே புன்னகை !

Info. Credits: John Durai Asir Chelliah

May 2022 - சந்திரா