Sunday 19 August 2018

பாரதி சிறுகுறிப்பு - வ.உ.சி.யை வாழ்த்தியவன் - மக்களின் செயலறிந்து இகழ்ந்து நொந்தான்

‘வேளாளன் சிறை புகுந்தான் தமிழகத்தார்
மன்னனென மீண்டான்’ என்றே
கேளாத கதை விரைவில் கேட்பாய் நீ!’
என்று சிறைசென்றபோது வ.உ.சி.யை வாழ்த்தியவன் பாரதி. சிறையிலிருந்து வெளிவந்தபோது, அந்த மகத்தான மனிதனை நாடு மறந்துவிட்டதைப் பார்த்து நெஞ்சு பொறுக்காமல் நிலைகுலைந்தது பாரதியின் இதயம்.

‘பிள்ளைவாள்,
அந்தக் கப்பல்களை
வெள்ளைக்காரனுக்கே
விற்றுவிட்டார்களாமே…
அதைவிட
சுக்கல்சுக்கலாய் உடைத்து
கடலில் கரைத்திருக்கலாமே…’
என்று கொதிக்கிறான் பாரதி, தன்னைப் பார்க்க புதுச்சேரிக்கு வந்த வ.உ.சி.யிடம்!

‘மாமா, உங்களுக்குத் தெரியாதா,
மானங்கெட்ட நாடு இது’ என்கிறார் வ.உ.சி.

‘நாட்டை இகழாதீர்கள்…..
மானம் கெட்ட மக்கள் பிள்ளைவாள்…’
என்று அந்த நிலையிலும் திருத்துகிறான் பாரதி, தேசத்தை விட்டுக் கொடுக்காமல்!

அதற்குப் பிறகாவது நாம் திருந்திவிட்டோமா? மனம் நொந்துபோய், பாரதிக்கே அதைத் திருப்பிச் சொல்ல வேண்டியிருக்கிறது…..

‘நாங்கள் மானங்கெட்ட மக்கள், பாரதி!’

https://www.commonfolks.in/books/d/bharathi-kaithi-enn-253
Courtesy: http://irruppu.com/?p=93384

பாரதி சிறுகுறிப்பு - அகவை 37 அடைந்த தருணம் - கைதி எண் 253


பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான கருத்துக்களைத் தொடர்ந்து வெளியிட்டு வந்த ‘இந்தியா’ பத்திரிகையின் சட்டப்பூர்வ ஆசிரியர் சீனிவாசன் 1908ல் கைது செய்யப்படுகிறார். உண்மையான ஆசிரியரான பாரதியும் கைதுசெய்யப்பட்டுவிடுவார் என்கிற நிலை. பிரிட்டிஷ் அரசின் வலையிலிருந்து தப்பிக்க, வ.உ.சி. உள்ளிட்ட நண்பர்களின் வற்புறுத்தலால், புதுச்சேரி போய்விடுகிறார் பாரதி. (புதுச்சேரி அப்போது பிரெஞ்சுக் காலனி.)

புதுச்சேரி பிடித்திருந்தாலும் ‘ஹோம் சிக்’ வதைத்துக் கொண்டே இருக்கிறது
பாரதியை! எப்படியாவது தமிழகத்துக்குத் திரும்பிவிடத் துடிக்கிறார். 1918 நவம்பர் 20ம் தேதி புதுவையிலிருந்து புறப்பட்டு விடுகிறார். இந்தியப் பகுதிக்குள் நுழைந்தவர், கடலூருக்கு அருகே கைதுசெய்யப்படுகிறார். 4 நாள் கடலூர் துணைச் சிறைக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்தவர், 24ம் தேதி கடலூர் மாவட்ட தலைமைச் சிறைக்கூடத்துக்கு மாற்றப்படுகிறார். 25 நாள் சிறைவாசத்துக்குப் பின், டிசம்பர் 14ம் தேதி விடுதலை செய்யப்படுகிறார். அது, 37வது வயதில் அவர் அடியெடுத்துவைத்த நான்காவது நாள்.

அந்த 25 நாட்களில் சிறைக்கம்பிகளுக்குப் பின்னிருந்து பழைய நிகழ்வுகளையும் நினைவுகளையும் கனவுகளையும் உணர்வுகளையும் பாரதி நினைத்துப் பார்ப்பதாக விரிகிறது – கைதி எண் 253. பாரதியின் கவிதைகளையும் சிந்தனைகளையும் பொருத்தமான இடத்தில் பொருத்தி, வியக்க வைக்கிறார் எழுத்தாளர்  சிற்பி.

இது சிற்பி எழுதியதா, பாரதி எழுதியதா என்கிற சந்தேகமே வந்துவிடுகிறது பல இடங்களில்!

https://www.commonfolks.in/books/d/bharathi-kaithi-enn-253
Courtesy: http://irruppu.com/?p=93384
August 2018 - சந்திரா