Monday, 12 February 2024

நட்புகள் உருவாவதற்கு, காரணங்கள் எதுவும் தேவையில்லை

சில நட்புகள் உருவாவதற்கு, சிறப்பான காரணங்கள் எதுவும் தேவையில்லை.

இயக்குனர் பாலு மகேந்திராவுக்கும் கமலுக்கும் இடையில் உருவான நட்பும் அப்படித்தான். உணர்வுபூர்வமானது, உன்னதமானது.


1977.
பாலு மகேந்திரா இயக்கிய முதல் கன்னடப் படம் 'கோகிலா'. கமல்தான் கதாநாயகன். ஆனால் அந்தப் படத்திற்கு முன்னதாகவே கமலுக்கும் பாலு மகேந்திராவுக்கும் இடையில் நல்லதொரு நட்பு மலர்ந்திருந்தது.
இந்த நேரத்தில் 'முள்ளும் மலரும்' படத்திற்காக 'நல்ல ஒரு ஒளிப்பதிவாளர் வேண்டும்' என்று கமலிடம் இயக்குனர் மகேந்திரன் கேட்டபோது கமல் சொன்ன பெயர் பாலு மகேந்திரா.
நாளுக்கு நாள் கமல், பாலுமகேந்திரா நட்பு நல்ல விதமாக வளர்ந்து வந்தது. தொடர்ந்து தமிழில் பாலு மகேந்திரா இயக்கிய 'அழியாத கோலங்கள்' படத்திலும் கௌரவ வேடத்தில் வந்தார் கமல்.
1993.
'மறுபடியும்’ படத்துக்குப் பிறகு, பாலுமகேந்திராவுக்கு எதிர்பாராத மிகப்பெரிய பணச்சிக்கல். எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தவித்துப் போனார்.
கூச்ச சுபாவம் அவருக்குக் கொஞ்சம் அதிகம். உதவி என்று இதுவரை யாரிடமும் கேட்டுப் போய் நின்றதில்லை.
இப்போது யாரிடம் போய்…?
கமலஹாசன் நினைவு வந்தது.
பழகிய நாள் முதல் இந்த நாள் வரை பண உதவி என்று கமலிடம் போய்க் கேட்டதில்லை.
ஆனால் இப்போது வேறு வழியே இல்லை. எப்படியாவது பணத்துக்கு ஏற்பாடு செய்தாக வேண்டும்.
கமலின் அலுவலகத்துக்குப் புறப்பட்டு வந்தார் பாலு மகேந்திரா.
"அடடே…வாங்க பாலு சார்…" உற்சாகமாக பாலு மகேந்திராவை வரவேற்று அமரச் சொன்னார் கமல்.
கூடவே அவரும் அருகில் அமர்ந்து கொண்டார். ஏனென்றால் கமலுக்கும் பாலு மகேந்திராவை மிகவும் பிடிக்கும்.
பாலுமகேந்திரா, தான் பணம் கேட்க வந்திருக்கும் விஷயத்தைப் பற்றிச் சொல்ல ஆரம்பிக்கும் முன்…
உலக சினிமாக்கள் பற்றி சுவாரசியமாக பேச்சை ஆரம்பித்தார் கமல். இந்த மாதிரி விஷயங்களை எல்லாம் பாலுமகேந்திராவிடம்தான் பேச முடியும். பாலு மகேந்திராவும் அதே சுவாரஸ்யத்தோடு பேச…

மணிக்கணக்கில் பேச்சு நீண்டு கொண்டே போனது.
ஆனால் பாலுமகேந்திராவின் மனதுக்குள் எப்போது எப்படி பணத்தைக் கேட்பது என்ற சிந்தனை ஓடிக்கொண்டே இருந்தது.
இந்த நேரத்தில் கமல் பேச்சை நிறுத்திவிட்டு கடிகாரத்தைப் பார்த்தார். "அடடே… பேச்சு சுவாரசியத்தில் நேரம் போனதே தெரியவில்லை. நான் ஷூட்டிங் போக வேண்டுமே..! கொஞ்சம் இருங்கள், வந்துவிடுகிறேன்."
இப்படி சொல்லிவிட்டு எழுந்து மாடிக்குப் போய் விட்டாராம் கமல். பாலுமகேந்திரா என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்துப் போய் அமர்ந்திருந்தார்.
ஷூட்டிங் புறப்படும் இந்த நேரத்தில் கமலிடம் பணம் கேட்பது நாகரீகமாக இருக்காது.
சரி, தானும் புறப்பட வேண்டியதுதான்.

பணத்திற்கு வேறு யாரிடம் போய் நிற்பது என்ற சிந்தனையோடு எழுந்தார் பாலுமகேந்திரா.
இந்த நேரத்தில் கமல் மாடியிலிருந்து விறு விறு என்று வேகமாக இறங்கி பாலுமகேந்திராவின் பக்கத்தில் வந்தார். கமலின் கையில் ஒரு கனத்த கவர் இருந்தது.
"இந்தாங்க" என்று அதை பாலுமகேந்திராவிடம் கொடுத்தார்.
பிரித்துப் பார்த்தார் பாலுமகேந்திரா.
அவர் எதிர்பார்த்ததைவிட அதிகமான தொகை அந்தக் கவருக்குள் இருந்தது.
என்ன பேசுவது எனத் தெரியாமல் பாலுமகேந்திரா திகைத்து நிற்க, கமல் சொன்னாராம்.
"உங்களை எனக்குத் தெரியும் பாலு சார். இது கடன் இல்லை. அட்வான்ஸ். நம்ம ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிற அடுத்த படத்தை, நீங்கதான் டைரக்ட் பண்றீங்க. உற்சாகமா வேலையை ஆரம்பிங்க…"
எதுவும் பேசாமல் கண்கள் பனிக்க கமலை கட்டி அணைத்துக்கொண்டார் பாலுமகேந்திரா.
அப்படி கமலுக்கு பாலுமகேந்திரா இயக்கிய படம்தான் சதிலீலாவதி.
(பிப்ரவரி 13 - பாலுமகேந்திரா நினைவு தினம்.)
February 2024 - சந்திரா