Saturday, 15 March 2025

அப்பாவு கணக்கில் 35 ரூபாய் - பிரபஞ்சன்

அப்பப்பா…… நல்லவேளை பேருந்தில் கடைசி இடமானாலும் ஜன்னல் ஓரமாக எனக்கு இருக்கை

கிடைத்துவிட்டது. இந்த ஆறு மணி வண்டியைத் தவற விட்டு விடக்கூடாது என்று ஒடி வந்திருந்தேன். சரியாகப் பத்து மணிக்கு ஊரில்கொண்டு போய்ச் சேர்த்து விடுவார் ஓட்டுநர். அடுத்த நாலைந்து நிமிடத்தில் வீடு. அம்மா தூங்கியிருக்க மாட்டாள். அகாலத்தில் போய் அம்மாவை. இந்த வயசான காலத்தில் எழுப்பித்தொல்லைப்படுத்த வேண்டாமே!

பேருந்தில் இடம் தேடி மனிதர்களும். மனிதர்களைத் தேடி ஆரோக்கியம் தரும் பழங்கள். மறுநாள் காலையிலேயே லட்சாதிபதியாக்குகிற லாட்டரி சீட்டுகள். ஒரு ரூபாய் விலையில் வீட்டுக்கு வந்து ஆங்கில ஞானத்தை வழங்குகிற புத்தகங்கள் எல்லாரும் வந்து கத்திவிட்டுப் போய்க் கொண்டிருந்தார்கள்.

வண்டி புறப்படுகிற நேரத்தில் என் எதிரில் நடுவயதினராக ஒருவர் வந்து நின்று என் பக்கத்தில் காலியாக இருந்த இடத்தில் உட்காரலாமா கூடாதா என்பது போல் என்னைப் பார்த்தார்.

“உக்காருங்களேன்.” என்றவாறு என் உடம்பைச் சுருக்கிக் கொண்டு. அவர் உட்கார இடம் தந்தேன்.

அமர்ந்தார். ஐம்பதை ஒட்டிய வயது. மீன் முள்களைப் போல ஒரு வாரத்தாடி.. தலையும் வெளுத்திருந்தது. பழுத்துப் போன ஒரு நிறத்தில் சட்டையும்வேட்டியும். பல்லாண்டுகளுக்கு முன்யாரோஒரு செல்வனுக்கும் செல்விக்கும் நடைபெற்ற திருமணத்தின்போது வழங்கப் பெற்ற. சாயம்போன பையில் தன் உடைமைகளை வைத்திருந்தார்.

பார்த்த மாத்திரத்தில் “நான்ரொம்ப சௌக்கியம்” என்னும் சில முகங்கள். அப்படி ஒன்றும் மோசமில்லை திருப்திதான் என்னும் சில முகங்கள். “ரொம்பச் சங்கடம்” என்னும் சில முகங்கள். என் பக்கத்தில் இருந்தவர் முகம் மூன்றாம் ரகத்தைச் சேர்ந்ததாக எனக்குப்பட்டது. அவருடன் பேசவேண்டும் போல் இருந்தது.

வண்டி ஓடிக் கொண்டிருந்தது.

“எது வரைக்கும் போறீங்க?” என்றேன்.

“புதுச்சேரிக்கு சார்” என்றார் அவர் சொல்லிவிட்டு. நமக்கு புதுச்சேரிதாங்க சொந்த ஊரு.” என்றார்.

“எனக்குத்தான்”

“புதுச்சேரியில் எங்கேங்க?”

“பஸ்ஸ்டாண்டுக்குப் பக்கத்திலேயே.”

“எனக்கு முத்தியால் பேட்டைங்க; பஸ் ஸ்டாண்டு லேந்து ரெண்டு மைல் நடந்து போவணும். ரிக்ஷாவிலே போனா ரெண்டு ரூபா கேட்பான்.”

வண்டி பல்லாவரத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது நடந்துநர் என்னிடம் வந்தர். நான் காசைக் கொடுத்துச் சீட்டு வாங்கிக் கொண்டேன். பெரியவர். துணிப்பைக்குள் இருந்து ஒரு சின்னப் பர்சை எடுத்து. அதிலிருந்து ஒற்றை நூறு ரூபாய்த்தாளை எடுத்து நடத்துநரிடம் கொடுத்தார்.

“ஏய்யா. அத்தனை பேரும் நூறும் ஐம்பதுமா கொடுத்தா நான் சில்லரைக்கு எங்கே பேவேன்? நீங்களே பாருங்க சார்.” என்று பையை என்னிடம் காட்டினார். ஆவென்று திறந்த அதன் வாய்க்குள் நூறும் ஐம்பதுமாகவே இருந்தது.

“யோவ்… பெரியவரே. சில்லரையா பன்னெண்டு ரூபா எம்பது பைசா இருந்தா குடு. இல்லேன்னா தாம்பரத்துல இறங்கிடு.” என்று சொல்லிவிட்டுத் தன் இடத்தில் போய் அமர்ந்துகொண்டார்.

“சார்….. சார் என்கிட்ட இந்த நூறு ரூபாய் நோட்டைத் தவிர வேற சில்லரையே இல்லையே சார்……” என்றார் பெரியவர் பரிதாபமாக.

“அதுக்கு நான் எண்ணய்ய பண்றது? பஸ்சுக்கு வர்ற ஆளு. நோட்டை மாத்திக்கிட்டு வர வாணாமா? தாம்பரத்துல இறங்கிடு. சும்மா பேஜார் பண்ணாத.”

பெரியவர் என்னைப் பரிதாபமாகப் பார்த்தார்.

நான் அவருக்குச் சீட்டு எடுத்துக் கொடுத்தேன்.

“மாமண்டூர்ல வண்டி நிற்கும்; மாத்திக் குடுத்துடறேன் சார்….”

“சரி.”

நிம்மதியாகச் சாய்ந்து உட்கார்ந்து கொண்டார். “ரொம்ப நன்றிங்க” என்றார்.

“ஊருல என்ன பண்றீங்க?”

“சும்மாத்தாங்க இருக்கேன். உங்களுக்குத் தெரிஞ்சிருக்குமே. ஒன்றரை வருஷமா மூடிக் கிடக்கிற ஆலைத் தொழிலாளிங்க. நானும் ஆரம்பத்துல அண்டை அசல்லே கடன் வாங்கிக் காலத்தைத் தள்ளினேன். அப்புறம் அண்டா குண்டானை வித்து அடகு வச்சுத் தின்னோம். அப்புறம் என்ன. யாசகம் வாங்காத குறைதான். நான் நல்லா இருக்கறப்போ என் மச்சினன் ஆறுமுகத்தை நான் தான் படிக்க வச்சேன். கல்யாணம் பண்ணி வச்சேன். இப்போ பட்டணத்திலே. சௌரியமா இருக்கான். ஏதாவது குடுத்து உதவுப்பான்னு கடிதாசி எழுதினேன். பதிலு இல்லீங்க பிள்ளை குட்டிங்க முகத்தைப் பார்க்க முடியல்லீங்க வண்டி ஏறிட்டேன். ஒரு வாரமா பட்டணத்துல ஆறுமுகம் வீட்டிலேதான் இருந்தேன். என்னால முடிஞ்சுது இதுதான்னு நூறு ரூபாய் குடுத்தான். அவன் பெண்ஜாதி டவுன் பஸ்சுக்குன்னு ஒரு ரூபா கொடுத்துச்சு வாங்கிக்கிட்டுப் போறேன். ஒரு வாரம் பத்து நாளு கஞ்சி குடிக்கலாமே.” என்றார்.

“மாமண்டூரில் இறங்கி இரவு உணவு முடித்தோம். பெரியவர் பில்லுக்கு நூறு ரூபாயை நீட்டினார்”.

“சில்லரை இல்லே சார்.” என்றார் கறாராக. கல்லாவில் இருந்தவர்.

“பரவாயில்லை” என்று நானே அவருக்கும் சேர்த்துப் பணம் கொடுத்தேன். வெளியே ஒரு சிகரெட்டை வாங்கி பற்ற வைத்துக் கொண்டேன். “நீங்க……” என்றேன்.

“பிடிக்கிறதுதாங்க.”

அவருக்கும் ஒன்றை வாங்கிக் கொடுத்தேன். கூச்சப்பட்டார், பிறகு புகைத்தார்.

வண்டி ஊர் போய்ச் சோந்து நாங்கள் இறங்கியவுடன் “சார்….. வாங்க. பழம் வாங்கலாம். அங்கேயே நோட்டை மாத்தி உங்களுக்கும் கொடுத்துடறேன்.” என்றார்.

பஸ் ஸ்டாண்டின் வெளியிலிருக்கும் பழக்கடைக்குப் போனோம். அவர் இரண்டு ஆப்பிள்களும் கொஞ்சம் கறுப்புத் திராட்சையும் வாங்கினார். நோட்டை நீட்டினார்.

“இன்னா பெரியவரே. இப்பத்தான் நாளைக்குச் சரக்குப் போட கல்லாவிலே இருந்து பணத்தைப் பூரா துடைச்சுக் கொடுத்துட்டு வர்றேன்; இப்பப் போயி நூறு ரூபாயைக் குடுக்கறே.” என்றார் கடைக்காரர்.

பெரியவர் பழத்தைத் திரும்பக் கொடுக்க முயலவே நான் “பரவாயில்லை…. வீட்லே குழந்தைகளுக்குக் கொண்டுபோய்க் குடுங்க.” என்று கூறிவிட்டுப் பழத்துக்கும் காசு கொடுத்தேன்.

தனியாக அவரிடம் ஒரு ஐந்து ரூபாய்த் தாளைக் கொடுத்து, “வண்டி வச்சிக்கிட்டு போங்க.” என்றேன்.

அவர் என் கையைப் பிடித்துக் கொண்டார்.

“சார்…….. ரொம்ப உபகாரம் பண்ணியிருக்கீங்க. அவசியம் நாளைக்கு நீங்க நம்ம வீட்டுக்கு வரணும். முத்தியால் பேட்டை மணிக்கூண்டு இருக்கில்லே அதுக்குப் பக்கத்திலே துளசியம்மன் கோவில் தெரு. அப்பாவுன்னு சொன்னால் வீட்டைக் காட்டுவாங்க. அவசியம் வரணும்.” என்றார்.

நான் வருவதாகச் சொல்லி விடை பெற்றேன். வீட்டை நோக்கி நடக்கையில் இது அதிகப்படியோ என்று எனக்குத் தோன்றியது. என் தகப்பனாருக்கு அறுபதாம் கல்யாணம் நடக்க இருந்தது. அவருக்கு வேட்டி துண்டும், அம்மாவுக்குப் புடவையும் வாங்க வேண்டும். நிச்சயம் இருபத்தைந்து ரூபாய் துண்டுவிழும். மறுநாளே என்னால் முத்தியால் பேட்டைக்கு போக முடியவில்லை.

இரண்டாம் நாள் எனக்கு அந்தப் பக்கத்தில் வேலை இருந்தது. வேலையை முடித்துக் கொண்டேன்.

அப்பாவுவைப் பார்க்கப் போகலாம் என்று தோன்றியது. பக்கத்தில்தான் மணிக்கூண்டு இருந்தும் எனக்குள் ஒரு தயக்கம். பாவம் கஷ்டப்படுகிறவர் அப்பாவு. இந்தப் பணத்துக்காகத்தான் வருகிறான் என்று நினைத்துக் கொண்டால் நன்றாக இருக்காதே. என்னால் இருபத்தைந்து ரூபாய் புரட்டிக் கொள்ள முடியும் அவருக்கு அது பெரும் தொகையாயிற்றே.

எனக்கு அவரையும் அவர் குழந்தைகளையும் பார்க்க வேண்டும் போல் இருந்தது. போனேன். மணிக்கூண்டு துளசியம்மன் கோவில் அப்பாவு வீட்டைச் சுலபமாகவே கண்டுபிடிக்க முடிந்தது. தெருவில் எல்லாம் கூரைவீடுகள் அப்பாவுவுடையதும் ஒரு சின்னங்கூரை வீடு உடைந்த கதவு. மண் திண்ணை.

“அப்பாவு சார்……”

“யாரு?”

சுமார் நாற்பது வயது மதிக்கத்தக்க அம்மாள் தலையை வெளியே நீட்டினார்.

“அப்பாவு இருக்காங்களா?”

“நீங்க யாரு?”

“நான் இந்த ஊருதான். மெட்ராஸ் போய்ட்டு வர்றப்போ அப்பாவுவைப் பழக்கம். வீட்டுக்கு வரச் சொன்னார். அதான்.”

“உக்காருங்க வர்ற நேரம்தான்.”

நான் அந்த மண் திண்ணையில் அமர்ந்தேன். அந்த அம்மாள் உள்ளே திருப்பி. “செல்வராசு” என்று யாரையோ கூப்பிட்டாள்.

ஒரு பையன் கால் சட்டை மட்டும் அணிந்தவன் வந்தான்.

“அப்பா சாராயக் கடையில் இருப்பாரு. யாரு வந்திருக்காங்கன்னு சொல்லிக் கூட்டிக்கிட்டு வா.”

“ஆமாங்க கையில என் தம்பி கொடுத்தனுப்பின பணம் கொஞ்சம் இருக்கு. அது தீர்ற மட்டும் அந்த ஆளு அங்கத்தான் கிடக்கும்.” என்றாள். மிகச் சாதாரணமாக.

பையன் என்னைத் திரும்பித் திரும்பிப் பார்த்தவாறு நடந்தான்.

“ஆறுமுகம் கொடுத்தனுப்பின பணத்தை உங்ககிட்டே அவர் தரல்லையா?”

“தம்பி அம்பது ரூவா கொடுத்தானாம். இருவத்தைஞ்ச என்கிட்ட கொடுத்துச்சு. மீதியை அது வச்சுகிடுச்சு பாவம்…..நல்லா சம்பாதிச்சு நல்லா செலவு பண்ண மனுஷன் சும்மாகிடன்னா என்ன எண்ணும்?” என்றாள் அவள்.

“தம்பியை உங்களுக்குத் தெரியுங்களா?”

“ஊம்.”

உள்ளிருந்து இரண்டு பெண்கள் என்னை எட்டிப் பார்த்தார்கள். சுமார் இருபதும் பதினைந்துமான பெண்கள். பழங்காலத்துப் போட்டோக்கள் மாதிரி நிறம் இழந்து இருந்தார்கள். பெண்களுக்கு அப்பா ஜாடை.

“அப்பா அங்கே இல்லேம்மா.” என்றவாறு பையன் வந்தான்.

“உங்களுக்கு அவரு ஏதாவது பணம் தரணுங்களா?” என்றாள் அந்த அம்மாள்.

“இல்லீங்க”. என்றேன்.

“இருங்க. வந்துடும்…. வர்ற நேரம்தான்”, என்றான். நான் அந்தப் பெண்களையும் பையனையும் பார்த்தேன்.

பசி. முகத்தில் வெளிப்படையாகத் தெரிந்தது. வெறுத்துப் போய் குச்சியாகக் கைகள். கைப்பட்டால் கிழியும் ஆடைகள் ஒன்றரை வருடப் பசி தாங்கிக் கொண்டு வளர்கிற குழந்தைகள். எங்களிடம் பத்து ரூபாய் இருந்தது.

“ஆறுமுகம் எனக்குத் தெரிஞ்சவர்தாங்க. அந்தப்பக்கம் போனீங்கன்னா அக்காவைப் போயிருப்பாருன்னாரு. அதான் வந்தேன்.” என்று விட்டு. அந்தப் பத்து ரூபாயை எடுத்துப் பையனிடம் கொடுத்தேன்.

பையன் அம்மாவைப் பார்த்தான்.

“எதுக்குங்க?” என்றான் அவன்.

ஆறுமுகம்தாங்க கொடுக்கச் சொன்னாரு… வாங்கிக்கச் சொல்லுங்க.” என்றேன்.

அவள் தலை அசைத்ததும் பையன் வாங்கிக் கொண்டான்.

நான் எழுந்தேன்.

“நாளைக்கு வாங்களேன். அதை வீட்டிலேயே இருக்கச் சொல்றேன்”.

“சரி” என்று கூறி நடந்தேன்.

நாளைக்கு நான் வரப்போவதில்லை என்று எனக்குள் நான் சொல்லிக் கொண்டேன்.

- பிரபஞ்சன்



Saturday, 1 March 2025

ஒரு எச்சரிக்கை தினம்

கொலை வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டு, விடுதலையாகி வெளிவந்த தியாகராஜ பாகவதரின் சினிமா உலக வாழ்க்கை சின்னாபின்னமாகிப் போயிருந்த நேரம் அது.

அந்தச் சிக்கலான நேரத்தில்

சிவாஜியின் ஊதியத்தை விட 10,000 ரூபாய் அதிகம் தருவதாகச் சொல்லி, 

சிவாஜி கதாநாயகனாக நடித்த 'அம்பிகாபதி' படத்தில் சிவாஜிக்கு அப்பாவாக நடிக்க அழைத்தார்கள். 

ஆனால் 'கதாநாயகனாக நடித்து வந்த நான் அப்பாவாக நடிப்பதா ?'

முடியாது எனக் கூறி, வலிய வந்த அந்த வாய்ப்பை மறுத்து விட்டார் பாகவதர்.

கொஞ்சம் எச்சரிக்கையோடும், விழிப்புணர்வோடும், நிதானமாக சிந்தித்து ஒத்துக் கொண்டிருந்தால், இன்னும் கூட ஒரு ரவுண்ட் சினிமாவில் வந்திருக்கலாம். ஆனால் ஏனோ அதை மறுத்து விட்டார் பாகவதர் !

இரண்டாம் உலகப் போர் நடந்த சமயத்தில் மிகப் பெரிய தொகையைத் திரட்டித் தந்த பாகவதருக்கு நன்றி கூறி, நூறு ஏக்கர் நிலத்தையும், திவான் பகதூர் பட்டத்தையும் அன்றைய அரசு கொடுத்தது.

அதை எச்சரிக்கை உணர்வுடன் ஏற்றுக் கொண்டிருந்தால், நிழல் உலகமான திரை உலகம், தன்னைக் கை விட்ட கடைசி காலத்தில், அந்த நில புலன்களாவது அவரைக் காப்பாற்றி இருக்கும். அதையும் பாகவதர் மறுத்து விட்டார் !

“என்னைப் போல் வாழ்ந்தவரும் இல்லை, என்னைப் போல் தாழ்ந்தவரும் இல்லை.” – இது எம்.கே.தியாகராஜ பாகவதர் சொன்ன அனுபவ மொழி.

ஆம். பட்டுக் கட்டிலில் படுத்துறங்கி, தங்கத் தட்டில் உணவருந்திய  பாகவதரையே வாழ்க்கை இப்படிப் புரட்டிப் போட்டது என்றால்,

நாம் எல்லாம் அதற்கு முன் எம்மாத்திரம் ?

எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். எச்சரிக்கையாக இருங்கள். எப்போதும் விழிப்புணர்வோடு இருங்கள்.

இதுதான் எம்.கே. தியாகராஜ பாகவதர் வாழ்க்கை நமக்குக் கற்றுத் தரும் பாடம்.

இன்று எம்.கே. தியாகராஜ பாகவதர் பிறந்த தினம்.

இது நமக்கெல்லாம் ஒரு எச்சரிக்கை தினம்.

Friday, 21 February 2025

வேர்வை அது சிந்தாமல் வெள்ளிப் பணமா

மனம் சலித்துப் போய் இருந்தார் மலேஷியா வாசுதேவன்.

1973 இல் இருந்து சினிமாவில் தொடர்ந்து பாடிக் கொண்டுதான் இருந்தார். ஆனால் சொல்லிக் கொள்ளும்படியாக எந்தப் பாடலும் பெரிதாக ஹிட் ஆகவில்லை.

எத்தனை காலம்தான் ???

இப்படியே பாடிக் கொண்டிருப்பது ?

ஒரு கட்டத்தில் மனம் தளர்ந்து போனார்.

ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு  காலம் நேரம் வர வேண்டுமே..!

1977. பதினாறு வயதினிலே படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம். 

ஒரு நாள்.

அவசரம் அவசரமாக மலேஷியா வாசுதேவனை அழைத்தார் இளையராஜா. "வாசு. டிராக் ஒண்ணு இருக்கு. அதுவும் கமலுக்குப் பாட வேண்டிய பாட்டு."

"செவ்வந்திப்பூ முடிச்ச சின்னக்கா…"

"ஆட்டுக்குட்டி முட்டையிட்டு.."

இரண்டு பாடல்கள்.

எஸ்.பி.பி. பாட வேண்டியது.

ஏதோ ஒரு காரணத்தால் அவரால் வர முடியவில்லை. டென்ஷனாக இருந்தார் இயக்குனர் பாரதிராஜா.

'பரவாயில்லை' என்று அவரிடம் சொன்ன இளையராஜா, "இப்போது வேறு யாராவது ஒருவரை வைத்து டிராக் எடுத்துக் கொள்ளலாம். நாளை எஸ்.பி.பி. வந்தவுடன் அவரைப் பாடச் சொல்லி அதை இணைத்துக் கொள்ளலாம்."

பாரதிராஜா அரை மனதோடு சம்மதம் சொன்னவுடன், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மலேஷியா வாசுதேவனை வரவழைத்தார் இளையராஜா.

விஷயத்தைச் சொன்னார்.

"டேய் வாசு, இதை மட்டும் நீ சரியாப் பாடிட்டா இந்தப் படத்துலேருந்தே உனக்கொரு தனி இடம் கிடைச்சுடும். உன்னோட வெற்றிப் பயணம் ஆரம்பமாயிரும்டா. நல்லாப் பாடு."

அப்புறம் என்ன ?

அற்புதமாக மலேஷியா வாசுதேவன் அந்தப் பாடலைப் பாடி விட, அதைக் கேட்ட பாரதிராஜா, "ஃபண்டாஸ்டிக்... இந்த வாய்ஸே இருக்கட்டுமே" எனச் சொல்லி விட,

வாய்ப்புகள் வந்து குவிய, மலேஷியா வாசுதேவன் காட்டில் பணமும் புகழும் மழையாகப் பொழிய ஆரம்பித்தது. பல கால பொறுமைக்குப் பலன் கிடைக்க ஆரம்பித்தது.

ஒரு நாள் மலேஷியா வாசுதேவனைத் தன் அருகில் அழைத்தார் இளையராஜா.

"டேய் வாசு, கமலுக்கும் ரஜினிக்கும் உன் வாய்ஸ் நல்லா செட் ஆகுது.  சிவாஜிக்கும் உன்னோட வாய்ஸை யூஸ் பண்ணலாம்னு இருக்கேன். எதுக்கும்  தயாரா இரு."

சிவாஜி ஐயாவுக்கு 

தான் பாடுவதா ?

மலேசியா வாசுதேவனுக்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை.

தான் சொன்னது போலவே சிவாஜிக்கும் மலேஷியா வாசுதேவனைக் கொண்டு பல பாடல்களைப் பாட வைத்தார் இளையராஜா.

காலதேவன் கை கொடுக்க, 

ராகதேவன் வாய்ப்புகளைக் கொடுக்க...

வறண்டு போன பாலை நிலமாக இருந்த மலேஷியா வாசுதேவன் வாழ்க்கையில் மகிழ்ச்சி பூக்கள் மலர ஆரம்பித்தன.

உண்மையான உழைப்பு 

ஒரு நாளும் வீண் போவதில்லை. இதற்கு சாட்சியாக இந்த உலகம் உள்ளவரை ஒலித்துக் கொண்டிருக்கும் மலேஷியா வாசுதேவன் குரல்.


"நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா
வேர்வை அது சிந்தாமல் வெள்ளிப் பணமா
வெள்ளை இளஞ் சிட்டுக்கள் 
வெற்றிக் கொடி கட்டுங்கள்
சொர்க்கம் அதைத் தட்டுங்கள் விண்ணைத் தொடுங்கள்."

(20 பிப்ரவரி 2011 - மலேஷியா வாசுதேவன் - நினைவு தினம்)

Saturday, 15 February 2025

தமிழ் - ஜி யு போப் - திருவாசகம்

"கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க

சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க"

 - திருவாசகம்

ஒரு வெளிநாட்டு மனிதரின் வாழ்வில் நடந்த உண்மைக்கதை இது. 

அவர் பெயர் ஜி யு போப்.

கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காக, இங்கிலாந்திலிருந்து 1839 இல் தமிழ் நாட்டிற்கு வந்த அறிஞர். 

ஆனால் தமிழ் நாட்டில் மதத்தைப் பரப்புவது என்றால் அது ஒன்றும் சாதாரணமான விஷயம் அல்ல.

முதலில் தமிழை நன்கு படிக்க வேண்டும். பிழை இல்லாமல் பேச வேண்டும். தமிழர்களோடு ஒன்று கலக்க வேண்டும்.

அதற்காக வேறு வழியின்றி தமிழைப் படிக்க ஆரம்பித்தார் ஜி யு போப். ஆனால் படிக்கப் படிக்க,  அவருக்குள் ஏதோ ஒரு அதிசய மாற்றம் நிகழ ஆரம்பித்தது. தன்னை அறியாமலேயே தமிழ் அவருக்குப் பிடித்துப் போயிற்று. மதத்தைப் பரப்ப வந்த நோக்கம் மறந்தே போய் விட்டது.

இன்னும் இன்னும் படிக்க வேண்டும் என்று இனிய தேடல் ஏற்பட்டது. தணியாத தாகத்தோடு தமிழ் நூல்களைத் தேடித் தேடிப் படிக்க ஆரம்பித்தார்.

திருக்குறள், நாலடியார், திருவாசகம் …

படிக்கப் படிக்க பரவசமாகிப் போனார் ஜி யு போப். தமிழின் இனிமைக்கு அடிமையும் ஆனார். மதம் மாற்ற இங்கு வந்த தன்னை, மனம் மாற்றிய தமிழை, தன் உயிரினும் மேலாக நேசித்தார்.

இப்போது அவருக்கு இன்னொரு எண்ணம் தோன்றியது. இந்தத் தமிழ் நூல்களை எல்லாம் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, அதை உலகறியச் செய்தால் என்ன ? 

"யான் பெற்ற இன்பம் 

பெறுக இவ்வையகம்"

முழு மூச்சோடு மொழிபெயர்ப்பு வேலையை ஆரம்பித்தார் 

ஜி. யு. போப்.

40 ஆண்டு காலம் தமிழே தன் பேச்சாகவும் மூச்சாகவும் வாழ்ந்த ஜி.யு.போப், முதுமையில் உடல் தளர்ந்ததால் 1882 ல் இங்கிலாந்து திரும்பி விட்டார்.

ஆனாலும் திரும்பத் திரும்ப அவரது மனம் திருவாசகத்தையே இடைவிடாமல் உச்சரித்துக் கொண்டிருந்தது.

ஜி யு போப் தனது முதுமைக் காலத்தில், தனது நெருங்கிய நண்பர்களிடம் மூன்று விருப்பங்களைத் தெரிவித்தாராம் :

“தான் இறந்த பின் தனது கல்லறையில் 'இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்' என்ற வாசகம் இடம்பெற வேண்டும்.

தமது கல்லறைக்குச் செலவிடும் தொகையில் ஒரு சிறுபகுதியாவது தமிழ் மக்களின் நன்கொடையால் அமைய வேண்டும்.

கல்லறையில் தம்மை அடக்கம் செய்யும் போது 

தான் மொழிபெயர்த்து வெளியிட்ட திருக்குறள் மற்றும் திருவாசகத்தையும் உடன் வைக்க வேண்டும் !”

இவைதான் அவரது விருப்பம். 

'திருவாசகத்துக்கு உருகாதார் 

ஒரு வாசகத்துக்கும் உருகார்'

என்பதற்கு இதை விட வேறென்ன சான்று வேண்டும்?

(ஆனால் அவரது கல்லறையில் அவர் விரும்பிய விஷயங்கள் சேர்க்கப்படவில்லை எனச்  சொல்கிறார்கள்)

இங்கிலாந்து ஆக்ஸ்போர்டில் வால்டன் தெரு என்ற வீதியில் உள்ள கல்லறைத்தோட்டத்தில் ஒரு மரத்தடியில், சலவைக் கல்லால் ஆன ஜி யு போப் கல்லறை இருக்கிறது.

அதில் பொறிக்கப்பட்டு உள்ள ஆங்கில வாசகத்தின் தமிழாக்கம் :

'மொழிக்காகவும், சமயப்பணிக்காகவும் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட போப் மீது பற்றுதல் கொண்ட தென்னிந்தியாவை சேர்ந்த அவருடைய தமிழ் அன்பர்களும், அவருடைய குடும்பத்தினரும் சேர்ந்து அமைத்த கல்லறை இது.'





2025 - சந்திரா