Friday, 21 February 2025

வேர்வை அது சிந்தாமல் வெள்ளிப் பணமா

மனம் சலித்துப் போய் இருந்தார் மலேஷியா வாசுதேவன்.

1973 இல் இருந்து சினிமாவில் தொடர்ந்து பாடிக் கொண்டுதான் இருந்தார். ஆனால் சொல்லிக் கொள்ளும்படியாக எந்தப் பாடலும் பெரிதாக ஹிட் ஆகவில்லை.

எத்தனை காலம்தான் ???

இப்படியே பாடிக் கொண்டிருப்பது ?

ஒரு கட்டத்தில் மனம் தளர்ந்து போனார்.

ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு  காலம் நேரம் வர வேண்டுமே..!

1977. பதினாறு வயதினிலே படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம். 

ஒரு நாள்.

அவசரம் அவசரமாக மலேஷியா வாசுதேவனை அழைத்தார் இளையராஜா. "வாசு. டிராக் ஒண்ணு இருக்கு. அதுவும் கமலுக்குப் பாட வேண்டிய பாட்டு."

"செவ்வந்திப்பூ முடிச்ச சின்னக்கா…"

"ஆட்டுக்குட்டி முட்டையிட்டு.."

இரண்டு பாடல்கள்.

எஸ்.பி.பி. பாட வேண்டியது.

ஏதோ ஒரு காரணத்தால் அவரால் வர முடியவில்லை. டென்ஷனாக இருந்தார் இயக்குனர் பாரதிராஜா.

'பரவாயில்லை' என்று அவரிடம் சொன்ன இளையராஜா, "இப்போது வேறு யாராவது ஒருவரை வைத்து டிராக் எடுத்துக் கொள்ளலாம். நாளை எஸ்.பி.பி. வந்தவுடன் அவரைப் பாடச் சொல்லி அதை இணைத்துக் கொள்ளலாம்."

பாரதிராஜா அரை மனதோடு சம்மதம் சொன்னவுடன், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மலேஷியா வாசுதேவனை வரவழைத்தார் இளையராஜா.

விஷயத்தைச் சொன்னார்.

"டேய் வாசு, இதை மட்டும் நீ சரியாப் பாடிட்டா இந்தப் படத்துலேருந்தே உனக்கொரு தனி இடம் கிடைச்சுடும். உன்னோட வெற்றிப் பயணம் ஆரம்பமாயிரும்டா. நல்லாப் பாடு."

அப்புறம் என்ன ?

அற்புதமாக மலேஷியா வாசுதேவன் அந்தப் பாடலைப் பாடி விட, அதைக் கேட்ட பாரதிராஜா, "ஃபண்டாஸ்டிக்... இந்த வாய்ஸே இருக்கட்டுமே" எனச் சொல்லி விட,

வாய்ப்புகள் வந்து குவிய, மலேஷியா வாசுதேவன் காட்டில் பணமும் புகழும் மழையாகப் பொழிய ஆரம்பித்தது. பல கால பொறுமைக்குப் பலன் கிடைக்க ஆரம்பித்தது.

ஒரு நாள் மலேஷியா வாசுதேவனைத் தன் அருகில் அழைத்தார் இளையராஜா.

"டேய் வாசு, கமலுக்கும் ரஜினிக்கும் உன் வாய்ஸ் நல்லா செட் ஆகுது.  சிவாஜிக்கும் உன்னோட வாய்ஸை யூஸ் பண்ணலாம்னு இருக்கேன். எதுக்கும்  தயாரா இரு."

சிவாஜி ஐயாவுக்கு 

தான் பாடுவதா ?

மலேசியா வாசுதேவனுக்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை.

தான் சொன்னது போலவே சிவாஜிக்கும் மலேஷியா வாசுதேவனைக் கொண்டு பல பாடல்களைப் பாட வைத்தார் இளையராஜா.

காலதேவன் கை கொடுக்க, 

ராகதேவன் வாய்ப்புகளைக் கொடுக்க...

வறண்டு போன பாலை நிலமாக இருந்த மலேஷியா வாசுதேவன் வாழ்க்கையில் மகிழ்ச்சி பூக்கள் மலர ஆரம்பித்தன.

உண்மையான உழைப்பு 

ஒரு நாளும் வீண் போவதில்லை. இதற்கு சாட்சியாக இந்த உலகம் உள்ளவரை ஒலித்துக் கொண்டிருக்கும் மலேஷியா வாசுதேவன் குரல்.


"நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா
வேர்வை அது சிந்தாமல் வெள்ளிப் பணமா
வெள்ளை இளஞ் சிட்டுக்கள் 
வெற்றிக் கொடி கட்டுங்கள்
சொர்க்கம் அதைத் தட்டுங்கள் விண்ணைத் தொடுங்கள்."

(20 பிப்ரவரி 2011 - மலேஷியா வாசுதேவன் - நினைவு தினம்)

Saturday, 15 February 2025

தமிழ் - ஜி யு போப் - திருவாசகம்

"கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க

சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க"

 - திருவாசகம்

ஒரு வெளிநாட்டு மனிதரின் வாழ்வில் நடந்த உண்மைக்கதை இது. 

அவர் பெயர் ஜி யு போப்.

கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காக, இங்கிலாந்திலிருந்து 1839 இல் தமிழ் நாட்டிற்கு வந்த அறிஞர். 

ஆனால் தமிழ் நாட்டில் மதத்தைப் பரப்புவது என்றால் அது ஒன்றும் சாதாரணமான விஷயம் அல்ல.

முதலில் தமிழை நன்கு படிக்க வேண்டும். பிழை இல்லாமல் பேச வேண்டும். தமிழர்களோடு ஒன்று கலக்க வேண்டும்.

அதற்காக வேறு வழியின்றி தமிழைப் படிக்க ஆரம்பித்தார் ஜி யு போப். ஆனால் படிக்கப் படிக்க,  அவருக்குள் ஏதோ ஒரு அதிசய மாற்றம் நிகழ ஆரம்பித்தது. தன்னை அறியாமலேயே தமிழ் அவருக்குப் பிடித்துப் போயிற்று. மதத்தைப் பரப்ப வந்த நோக்கம் மறந்தே போய் விட்டது.

இன்னும் இன்னும் படிக்க வேண்டும் என்று இனிய தேடல் ஏற்பட்டது. தணியாத தாகத்தோடு தமிழ் நூல்களைத் தேடித் தேடிப் படிக்க ஆரம்பித்தார்.

திருக்குறள், நாலடியார், திருவாசகம் …

படிக்கப் படிக்க பரவசமாகிப் போனார் ஜி யு போப். தமிழின் இனிமைக்கு அடிமையும் ஆனார். மதம் மாற்ற இங்கு வந்த தன்னை, மனம் மாற்றிய தமிழை, தன் உயிரினும் மேலாக நேசித்தார்.

இப்போது அவருக்கு இன்னொரு எண்ணம் தோன்றியது. இந்தத் தமிழ் நூல்களை எல்லாம் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, அதை உலகறியச் செய்தால் என்ன ? 

"யான் பெற்ற இன்பம் 

பெறுக இவ்வையகம்"

முழு மூச்சோடு மொழிபெயர்ப்பு வேலையை ஆரம்பித்தார் 

ஜி. யு. போப்.

40 ஆண்டு காலம் தமிழே தன் பேச்சாகவும் மூச்சாகவும் வாழ்ந்த ஜி.யு.போப், முதுமையில் உடல் தளர்ந்ததால் 1882 ல் இங்கிலாந்து திரும்பி விட்டார்.

ஆனாலும் திரும்பத் திரும்ப அவரது மனம் திருவாசகத்தையே இடைவிடாமல் உச்சரித்துக் கொண்டிருந்தது.

ஜி யு போப் தனது முதுமைக் காலத்தில், தனது நெருங்கிய நண்பர்களிடம் மூன்று விருப்பங்களைத் தெரிவித்தாராம் :

“தான் இறந்த பின் தனது கல்லறையில் 'இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்' என்ற வாசகம் இடம்பெற வேண்டும்.

தமது கல்லறைக்குச் செலவிடும் தொகையில் ஒரு சிறுபகுதியாவது தமிழ் மக்களின் நன்கொடையால் அமைய வேண்டும்.

கல்லறையில் தம்மை அடக்கம் செய்யும் போது 

தான் மொழிபெயர்த்து வெளியிட்ட திருக்குறள் மற்றும் திருவாசகத்தையும் உடன் வைக்க வேண்டும் !”

இவைதான் அவரது விருப்பம். 

'திருவாசகத்துக்கு உருகாதார் 

ஒரு வாசகத்துக்கும் உருகார்'

என்பதற்கு இதை விட வேறென்ன சான்று வேண்டும்?

(ஆனால் அவரது கல்லறையில் அவர் விரும்பிய விஷயங்கள் சேர்க்கப்படவில்லை எனச்  சொல்கிறார்கள்)

இங்கிலாந்து ஆக்ஸ்போர்டில் வால்டன் தெரு என்ற வீதியில் உள்ள கல்லறைத்தோட்டத்தில் ஒரு மரத்தடியில், சலவைக் கல்லால் ஆன ஜி யு போப் கல்லறை இருக்கிறது.

அதில் பொறிக்கப்பட்டு உள்ள ஆங்கில வாசகத்தின் தமிழாக்கம் :

'மொழிக்காகவும், சமயப்பணிக்காகவும் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட போப் மீது பற்றுதல் கொண்ட தென்னிந்தியாவை சேர்ந்த அவருடைய தமிழ் அன்பர்களும், அவருடைய குடும்பத்தினரும் சேர்ந்து அமைத்த கல்லறை இது.'





February 2025 - சந்திரா