Sunday, 5 June 2016

என் இனிய NRI's (வெளிநாடு வாழ் இந்தியர்)


எழுத்தாளர் சுஜாதாவின் பக்கங்களில் இருந்து சில வரிகளை எடுத்து கோர்வை படுத்தி உள்ளேன்

அமெரிக்கா செல்வதற்கு கொடுக்கும் மறைமுகமான விலைகள் சில உண்டு. அவற்றைப் புரிந்துகொண்டு செல்லுங்கள்.

அவை:

1. திரும்ப வரமாட்டீர்கள்… இது கட்டாயம், நூறு சதவிகிதம் நிகழும் ஒரு விளைவு. போய்விட்டு படிப்பு முடித்துவிட்டு உடனே வருகிறேன் என்று சொல்வதெல்லாம் பொய். அந்த நாடு உங்கள் மேல் படரும் நாடு. ஒரு ஆக்டோபஸ், அல்லது மலைப்பாம்பின் இறுக்கம் போல அது உங்களை விடாது. அதன் கிரெடிட் கார்டு சமூகத்தில் உங்களை மூன்றாவது தலைமுறை வரை கடன் வாங்க வைத்துவிடுவார்கள். மீளவே முடியாத கடன் சொர்க்கம் அது. அதைத் தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்.

2. அங்கே போனபின் உறவு, பாசம் இவற்றுக்கெல்லாம் புதிய அர்த்தங்கள் தோன்றும். எதற்காக அப்பா அம்மாவைக் கவனித்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கடமையைச செய்தார்கள். வருஷம் ஒரு முறை ஃபாதர்ஸ் டே, மதர்ஸ் டே கார்டு அனுப்பினால் போதுமே… அல்லது அவ்வப்போது நூறு டாலர், இருநூறு டாலர்…  இப்படித் தோன்றும் இந்த எண்ணத்தையும் தவிர்க்க முடியாது. குறிப்பாக, பிசுநாரித்தனம் அங்கு கொஞ்சம் அதிகமாகும்.

3. அங்கே போய் நிறைய சம்பாதிக்கத் தொடங்கியதும் இந்திய விஷயங்கள் மேல் ஒரு ஏளனம் தோன்றும். என்னப்பா உங்க ஊர்ல சரியா ஒரு டாய்லெட் கட்டமாட்டாங்களா. வாட் ட்ராஃபிக்! ஐம் கெட்டிங் ம்யாட். ரோடுல ஒண்ணுக்கு போறவரைக்கும் உங்க தேசம் உருப்படாது… (கவனிக்கவும் உங்க ஊர்....உங்க தேசம்)

4. தமிழ் பேசும் வழக்கத்தையும் மெள்ள இழக்க வேண்டியிருக்கும். நாங்கள் தமிழில் பேசினால் நீங்கள் இங்கிலீஷில் பதில் சொல்வீர்கள். நாளடைவில் தமிழ் படிக்கவே மறந்து போய்விட்டது என்று புளுகுவீர்கள்.

இந்தப் பக்கவிளைவுகள் எல்லாம் பரவாயில்லை என்றால் தாராளமாக வெளிநாடு செல்லுங்கள்.

அண்மையில் நான் ஹாசன் சென்றிருந்தேன். கர்நாடக மாநிலத்தின் மத்தியில் உள்ள சிறிய டவுன். அங்கே இன்சாட் 2-இ செயற்கைக்கோளின் கட்டுப்பாட்டுக் கேந்திரம் உள்ளது. பல இளம் இன்ஜினீயர்களைச் சந்தித்தேன். 24 மணி நேரமும் இந்தியாவின் செயற்கைக்கோளை திசை பிசகாமல் கட்டுப்படுத்தும் ஷிஃப்ட் வேலை பார்க்கிறார்கள். அவர்களில் ஒருவரைக் கேட்டேன். அமெரிக்கா போயிருக்கலாமே… அவர், போயிருக்கலாம். அட்மிஷன் கூட கிடைத்தது, ஸ்காலர்ஷிப்புடன் என்றார்.

ஏன் போகலை? எல்லாரும் போய்ட்டா எப்படி? ஒன்றிரண்டு பேர் தங்கி நாட்டுக்கு சேவை செய்ய வேண்டாமா? என்றார்.

கார்கிலிலிருந்து துவங்கி நம் பிற்பட்ட கிராமங்களில் வயற்புறங்கள் வரை பணிபுரியும் இளைஞர்கள் இருக்கிறார்கள். இவர்கள் மேல்தான் எனக்கு மரியாதை. என்னைக் கேட்டால் இங்கேயே இருந்துகொண்டு எல்லா அசௌகரியங்களுக்கு மத்தியிலும் எதாவது சாதிக்கும் இளைஞர்கள் இந்நாட்டின் கண்கள்… நீங்களோ, நீங்கள் அனுப்பப்போகும் டாலரோ அல்ல! தாராளமாக செல்லுங்கள். சம்பாதியுங்கள். ஆனால், இந்தியாவைக் கேலி செய்யாதீர்கள்.

நன்றி  சுஜாதா  SIR அவர்களுக்கு :-) 

No comments:

என் இனிய NRI's (வெளிநாடு வாழ் இந்தியர்) - சந்திரா