Friday, 28 August 2020

பேரறிஞர் அண்ணா - மைக்கேல் ரானடே - போப்பாண்டவர்

பேரறிஞர் அண்ணாவுக்கு போப்பாண்டவரைச் சந்திக்க ஐந்து நிமிடம் ஒதுக்கப்பட்டது. 

மகாத்மா காந்தி பிறந்த இந்திய தேசத்தின் கடைக்கோடி மாநிலம் தமிழ் நாட்டின் முதல்வர் நான் என்று பேச ஆரம்பித்து தமிழர்களின் சிறப்பை எடுத்துச் சொல்லி ஐந்து நிமிடத்தில் தன் பேச்சை முடித்தார் அண்ணா.

போப்பாண்டவர் சொன்னார், அருமையாகப் பேசுகிறீர்கள் தொடர்ந்து பேசுங்கள்!  தொடர்ந்து அண்ணா ஐம்பத்தைந்து நிமிடம் பேசினார். அண்ணாவின் பேச்சில் சொக்கிப்போன போப்பாண்டவர் அண்ணாவுக்கு நன்றி தெரிவித்து உங்களுக்கு என்ன பரிசு வேண்டுமென்றார்.

என்ன கேட்டாலும் தருவீர்களா..என்று கேட்டார் அண்ணா.  கேளுங்கள் தருகிறேன் என்றார் போப்பாண்டவர். 

போர்ச்சுகல் தேசம் இந்தியாவின் கோவாவை ஆக்கிரமித்திருந்தது. போர்ச்சுகலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடிய மைக்கேல் ரானடே இன்றைக்கும் போர்ச்சுகல் தலைநகரான லிஸ்பன் சிறையில் வாடுகிறார்.

உலக கிறிஸ்தவர்களின் தலைவரான நீங்கள் போர்ச்சுகலிடம் பேசி மைக்கேல் ரானடேவை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டார் அண்ணா. 

சரி என்று சொன்னார் போப்பாண்டவர். மகிழ்ச்சியோடு இந்தியா திரும்பினார் அண்ணா.

போப்பாண்டவரின் வேண்டுகோளை ஏற்று விடுதலை செய்யப்பட்ட ரானடே இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டார். 

டெல்லி வந்த ரானடேவை வரவேற்க அன்றைய பிரதமர் அன்னை இந்திரா காந்தி விமானநிலையத்திற்குச் சென்றார். 

ரானடே அன்னை இந்திரா காந்தியிடம், யாருக்காகப் போராடினேனோ அந்த கோவா மக்களே என்னை மறந்துவிட்ட நிலையில் தமிழகத்தில் இருந்து என் விடுதலையை வேண்டிய திரு அண்ணாதுரை எங்கே என்று கேட்டார்.

அண்ணா மறைந்து விட்டார், அவர் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் நாஞ்சில் மனோகரனை அழைத்து வந்திருக்கிறேன் என்று சொன்னார் அன்னை இந்திரா.

நாஞ்சிலாரைச் சந்தித்து விட்டு, நீங்கள் மிகவும் நேசிக்கும் கோவாவிற்கு செல்ல ஏற்பாடு செய்திருக்கிறேன் என்று சொன்னார் அன்னை இந்திரா.

நான் முதலில் செல்ல வேண்டிய இடம் கோவா அல்ல, அண்ணாவின் சமாதி தான் என்றார். அன்னை இந்திரா, ரானடே மற்றும் நாஞ்சிலாரை உடனடியாக சென்னைக்கு அனுப்பி வைத்தார்.

அண்ணா துயில் கொள்ளும் மெரினாவில் அழுது புரண்டான் ரானடே என்பது தமிழினம் மறந்த வரலாறு. 

போப்பாண்டவரிடம் தனக்கென எதுவும் கேட்காமல் ஒரு போராளியின் விடுதலை வேண்டிய மனிதநேய மாந்தர்தான் நமது பேரறிஞர் அண்ணா.

No comments:

பேரறிஞர் அண்ணா - மைக்கேல் ரானடே - போப்பாண்டவர் - சந்திரா