Saturday 2 October 2021

பாரதியும், நிவேதிதாவும்

எதிர்பாராத அதிர்ச்சி இரண்டு முறை ஏற்பட்டிருக்கிறது பாரதியாருக்கு !

ஒன்று 1921ஆம் ஆண்டு திருவல்லிக்கேணி கோவில் யானை, தும்பிக்கையால் தூர தள்ளியபோது..!

இன்னொன்று அதற்கு சில வருடங்களுக்கு முன்பு, 

சகோதரி நிவேதிதாவை சந்தித்தபோது ! (நிவேதிதா விவேகானந்தரின் சீடர்)

அது நடந்தது கல்கத்தாவில்.

அங்கே நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டுக்கு  போயிருந்தார் பாரதியார். தற்செயலாகத்தான் விவேகானந்தரின் சீடரான சகோதரி நிவேதிதாவை அந்த இடத்தில் சந்தித்தார். 

இருவரும் பல்வேறு விஷயங்களை பற்றி பேசிக் கொண்டிருந்தபோது, இயல்பாகத்தான் நிவேதிதா அந்தக் கேள்வியைக் கேட்டார் : "ஆமாம். உங்கள் மனைவியை நீங்கள் உங்களோடு அழைத்து வரவில்லையா ?"

பதில் சொன்னார் பாரதி : 

"எங்கள் சமுதாயத்தில் பெண்களை இந்த மாதிரி வெளியில் அழைத்து வரும் வழக்கம் இல்லை."

பாரதி சொல்வதை கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார் நிவேதிதா.

தொடர்ந்து சொன்னார் பாரதி : "இன்னொரு விஷயம். 

இது அரசியல் மாநாடு. என் மனைவிக்கு அரசியல் தெரியாது. அவள் இங்கு வந்து என்ன செய்யப்போகிறாள் ?"

அசையாமல் அமர்ந்திருந்தார் நிவேதிதா. ஆனல் அவரது கண்கள் பாரதியாரின் முகத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்தன.

தன்னையறியாமல் ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி குறுகுறுத்தது பாரதிக்கு. "ஏன் இப்படி பார்க்கிறீர்கள் சகோதரி ?"

"ஒன்றுமில்லை. ஒரு பெண்ணுக்கு கொடுக்க வேண்டிய சுதந்திரத்தையே கொடுக்காத நீங்கள், எப்படி இந்த நாட்டுக்கு சுதந்திரத்தை பெற்றுத்தர முடியும் என நினைக்கிறீர்கள் ?"

பெரும் புயல் ஒன்று அடித்தது போல இருந்தது பாரதியாருக்கு. 

அதிர்ந்து போன அவர் அசையாமல் அப்படியே வெகு நேரம் அமர்ந்திருந்தார்.

அவரது சிந்தனையில் மிகப்பெரும் மாற்றம் ஏற்பட்டது அந்த நொடியில்தான்.

பெண்களுக்கும் சம உரிமை என்பதை அதன் பின்தான் முழுமையாக உணர்ந்தார் பாரதியார்.

அந்த சந்திப்புக்கு பின் நிவேதிதாவை தம் குருவாக ஏற்றுக் கொண்டாராம் பாரதி.

குரு ஸ்தோத்திரமும் கூட இயற்றியிருக்கிறார் நிவேதிதாவுக்காக..!

உலகிலேயே மிகப்பெரும் துணிவு,

தான் கொண்ட கொள்கையில் தவறு இருக்கிறது என்பதை உணர்ந்தபோது, 

அதைத் தானாகவே முன் வந்து தைரியமாக திருத்திக் கொள்வதுதான்.

அந்தத் துணிவு பாரதிக்கு இருந்தது. 

அதனால்தான் இன்றும் அவர் நினைவு நம் அனைவருக்கும் இருக்கிறது.

Credits: John Durai Asir Chelliah

No comments:

பாரதியும், நிவேதிதாவும் - சந்திரா