சாரதா ஸ்டூடியோவில் எம்.ஜி.ஆருக்காக நான் எழுதிய முதல் பாடலின் ஒலிப்பதிவு !
இஷ்ட தெய்வங்களையெல்லாம் வேண்டிக்கொண்டு ஸ்டூடியோவிற்குச் சென்றேன்.
பகல் 12 மணியளவிற்கு எம்.ஜி.ஆர். வந்தார். பாட்டைக் கேட்டார். பாட்டின் பின்னணி இசை திருப்தியாக இல்லை என்றார்.
சில மாற்றங்கள் செய்யப் போதுமான நேரம் இல்லாததால் ரிக்கார்டிங் ரத்து செய்யப்பட்டது.
10 நாட்களுக்குப் பிறகு மீண்டும் சாரதா ஸ்டூடியோவில் ஒலிப்பதிவிற்கான தேதி குறிக்கப்பட்டது. அன்று பகல் 12 மணியளவில் பி.சுசீலாவிற்கு உடல் நிலை சரியில்லையென்று ஒலிப்பதிவு ரத்து செய்யப்பட்டது.
பிறகு ஒரு மாதம் கழித்து இன்னொரு நாள் ஒலிப்பதிவிற்கான தேதி குறிக்கப்பட்டது. அன்று சீர்காழி கோவிந்தராசனின் குரல் சரியாக இல்லையென்று சொல்லி, அன்றும் ஒலிப்பதிவு ரத்து செய்யப்பட்டது.
அந்தக் காலத்தில் டிராக் எடுத்துவிட்டு பிற்பாடு குரலைப் பதிவு செய்யும் வழக்கமெல்லாம் அமலுக்கு வரவில்லை.
அவ்வளவுதான் ! இயக்குனர் நீலகண்டன் ஒரு முடிவெடுத்து விட்டார்.
“வாலி எழுதிய இந்தப்பாட்டு, ராசியில்லாத பாட்டு. எனவே மருதகாசியை வைத்து வேறு பாட்டு எழுதி ஒலிப்பதிவு செய்யலாம்” என்று சொல்லி விட்டார் நீலகண்டன்.
இதைக் கேட்ட வாலி வாடிப் போய் நின்றாராம். சற்று நேரத்தில்
மருதகாசியையும் பாட்டு எழுத அழைத்து வந்து விட்டார்களாம்.
வந்தவர் ஏற்கனவே வாலி எழுதியிருந்த பாடலை, ஒரு முறை கையில் வாங்கிப் பார்த்தாராம்.
பதைபதைக்கும் உள்ளத்தோடு,
வாலி ஒரு ஓரமாக நின்று கொண்டிருக்க,
வாலி எழுதிய வரிகளை நிறுத்தி நிதானமாக வாசித்துப் பார்த்த கவிஞர் மருதகாசி இப்படி சொன்னாராம் :
"இந்தப் பையன் நல்லா எழுதியிருக்கான். இவனுடைய வாழ்க்கை என்னால் கெட்டுப் போவதை நான் விரும்பவில்லை. இந்தப் பாட்டையே படத்தில் வைத்துக்கொள்ளுங்கள். பாப்புலராகும்..!''
கண்களில் நீர் வழிய வாலி சொல்கிறார் இப்படி :
“அண்ணன் மருதகாசிக்கு அன்றைக்கே மனதுக்குள் ஆலயம் எழுப்பி வழிபட்டேன். பிறகு என் பாடலையே பதிவு செய்து படப்பிடிப்புக்குப் போனார்கள்..!”
மருதகாசி மனதாரப் பாராட்டிய அந்தப் பாடல் :
"சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்.
சிந்திய கண்ணீர் மாறியதாலே''
படம் :"நல்லவன் வாழ்வான்''
நவம்பர் 29 - மருதகாசி நினைவு தினம்.
No comments:
Post a Comment