Saturday 16 January 2021

யார் இந்த பூம்பாவாய் ?!?


எரிந்த சாம்பலில் இருந்து உயிர்ப்பித்து வருவது பீனிக்ஸ் பறவை மட்டுமா... பூம்பாவாய் கூட தான்.

2007 ஆம் ஆண்டு -ரஜினி-ஷிரியா-ஷங்கர்-வைரமுத்து-ரகுமான் அவர்களின் கூட்டனியில் வந்த பாடல்.

"பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்
புன்னகையோடு மௌவல் மௌவல்
உன் பூ விழி பார்வை போதுமடி
என் பூங்கா இலைகளும் மலருமடி
உன் காற்கொலுசொலிகள் பொதுமடி
பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி..
வாஜி வாஜி வாஜி - என்
ஜூவன் நீ சிவாஜி..."
அது சரி யார் தான் பூம்பாவாய் ?!? 

7ஆம் நூற்றாண்டு- திருஞானசம்பந்தர்-பூம்பாவை-சிவநேசர்-திருமயிலை

திருமயிலை தலத்தில் சிவநேசர் எனபவர் வாழ்ந்து வந்தார். சிவபெருமான் மீது அளவு கடந்த பக்தியுடைய அவருக்கு பூம்பாவை என்ற ஒரு மகள் இருந்தாள். திருஞானசம்பந்தரைப் பற்றியும் அவரின் சைவ சமய தொண்டைப் பற்றியும் கேள்விப்பட்ட சிவநேசர் தன் மகள் பூம்பாவையை சம்பந்தருக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தார். அவ்வாறு இருக்கையில் ஒரு சமயம் பூம்பாவை தோட்டத்தில் தன் தோழிகளுடன் மலர் பறித்துக் கொண்டு இருந்த போது பாம்பு தீண்டி இறந்து விடுகிறாள். மகள் இறந்து விட்ட போதிலும் அவள் சம்பந்தருக்கு உரியவள் என்ற எண்ணம் சிவநேசருக்கு வர மகளின் அஸ்தி மற்றும் எலும்புகளை ஒரு குடத்திலிட்டு கன்னி மாடத்தில் பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தார்.

திருவொற்றியூர் வந்த சம்பந்தரைச் சந்தித்த சிவநேசர் அவரை வலம் வந்து தொழுதார். கன்னி மாடத்தில் வைத்திருந்த குடத்தைக் கொண்டு வந்து சம்பந்தர் முன் வைத்து பூம்பாவை பற்றிய விபரங்களைச் சொல்லி அழுதார். சம்பந்தர் திருமயிலை கபாலீஸ்வரரை தியானித்து “மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலை” என்று தொடங்கும் பதிகம் பாடினார்,  பாடி முடித்ததும் குடத்தை உடைத்துக் கொண்டு சாம்பலில் இருந்து வெளியே வந்த பூம்பாவை சம்பந்தரை வணங்கினாள். சிவநேசர் சம்பந்தரை வணங்கி பூம்பாவையை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார்.  பூம்பாவைக்கு உயிர் கொடுத்ததின் மூலம் அவள் எனக்கு மகள் ஆகின்றாள் என்று கூறிய சம்பந்தர் சிவநேசரின் கோரிக்கையை நிராகரித்து விடுகிறார். பூம்பாவை தன் வாழ்நாள் முழுவதும் கன்னியாகவே இருந்து இறைவன் தொண்டு செய்து வந்தாள். திருமயிலை கபாலி கோயில் மேற்கு கோபுரம் அருகில் பூம்பாவைக்கு சந்நிதி இருக்கிறது.

No comments:

யார் இந்த பூம்பாவாய் ?!? - சந்திரா