Friday, 21 February 2025

வேர்வை அது சிந்தாமல் வெள்ளிப் பணமா

மனம் சலித்துப் போய் இருந்தார் மலேஷியா வாசுதேவன்.

1973 இல் இருந்து சினிமாவில் தொடர்ந்து பாடிக் கொண்டுதான் இருந்தார். ஆனால் சொல்லிக் கொள்ளும்படியாக எந்தப் பாடலும் பெரிதாக ஹிட் ஆகவில்லை.

எத்தனை காலம்தான் ???

இப்படியே பாடிக் கொண்டிருப்பது ?

ஒரு கட்டத்தில் மனம் தளர்ந்து போனார்.

ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு  காலம் நேரம் வர வேண்டுமே..!

1977. பதினாறு வயதினிலே படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம். 

ஒரு நாள்.

அவசரம் அவசரமாக மலேஷியா வாசுதேவனை அழைத்தார் இளையராஜா. "வாசு. டிராக் ஒண்ணு இருக்கு. அதுவும் கமலுக்குப் பாட வேண்டிய பாட்டு."

"செவ்வந்திப்பூ முடிச்ச சின்னக்கா…"

"ஆட்டுக்குட்டி முட்டையிட்டு.."

இரண்டு பாடல்கள்.

எஸ்.பி.பி. பாட வேண்டியது.

ஏதோ ஒரு காரணத்தால் அவரால் வர முடியவில்லை. டென்ஷனாக இருந்தார் இயக்குனர் பாரதிராஜா.

'பரவாயில்லை' என்று அவரிடம் சொன்ன இளையராஜா, "இப்போது வேறு யாராவது ஒருவரை வைத்து டிராக் எடுத்துக் கொள்ளலாம். நாளை எஸ்.பி.பி. வந்தவுடன் அவரைப் பாடச் சொல்லி அதை இணைத்துக் கொள்ளலாம்."

பாரதிராஜா அரை மனதோடு சம்மதம் சொன்னவுடன், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மலேஷியா வாசுதேவனை வரவழைத்தார் இளையராஜா.

விஷயத்தைச் சொன்னார்.

"டேய் வாசு, இதை மட்டும் நீ சரியாப் பாடிட்டா இந்தப் படத்துலேருந்தே உனக்கொரு தனி இடம் கிடைச்சுடும். உன்னோட வெற்றிப் பயணம் ஆரம்பமாயிரும்டா. நல்லாப் பாடு."

அப்புறம் என்ன ?

அற்புதமாக மலேஷியா வாசுதேவன் அந்தப் பாடலைப் பாடி விட, அதைக் கேட்ட பாரதிராஜா, "ஃபண்டாஸ்டிக்... இந்த வாய்ஸே இருக்கட்டுமே" எனச் சொல்லி விட,

வாய்ப்புகள் வந்து குவிய, மலேஷியா வாசுதேவன் காட்டில் பணமும் புகழும் மழையாகப் பொழிய ஆரம்பித்தது. பல கால பொறுமைக்குப் பலன் கிடைக்க ஆரம்பித்தது.

ஒரு நாள் மலேஷியா வாசுதேவனைத் தன் அருகில் அழைத்தார் இளையராஜா.

"டேய் வாசு, கமலுக்கும் ரஜினிக்கும் உன் வாய்ஸ் நல்லா செட் ஆகுது.  சிவாஜிக்கும் உன்னோட வாய்ஸை யூஸ் பண்ணலாம்னு இருக்கேன். எதுக்கும்  தயாரா இரு."

சிவாஜி ஐயாவுக்கு 

தான் பாடுவதா ?

மலேசியா வாசுதேவனுக்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை.

தான் சொன்னது போலவே சிவாஜிக்கும் மலேஷியா வாசுதேவனைக் கொண்டு பல பாடல்களைப் பாட வைத்தார் இளையராஜா.

காலதேவன் கை கொடுக்க, 

ராகதேவன் வாய்ப்புகளைக் கொடுக்க...

வறண்டு போன பாலை நிலமாக இருந்த மலேஷியா வாசுதேவன் வாழ்க்கையில் மகிழ்ச்சி பூக்கள் மலர ஆரம்பித்தன.

உண்மையான உழைப்பு 

ஒரு நாளும் வீண் போவதில்லை. இதற்கு சாட்சியாக இந்த உலகம் உள்ளவரை ஒலித்துக் கொண்டிருக்கும் மலேஷியா வாசுதேவன் குரல்.


"நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா
வேர்வை அது சிந்தாமல் வெள்ளிப் பணமா
வெள்ளை இளஞ் சிட்டுக்கள் 
வெற்றிக் கொடி கட்டுங்கள்
சொர்க்கம் அதைத் தட்டுங்கள் விண்ணைத் தொடுங்கள்."

(20 பிப்ரவரி 2011 - மலேஷியா வாசுதேவன் - நினைவு தினம்)

No comments:

வேர்வை அது சிந்தாமல் வெள்ளிப் பணமா - சந்திரா